Published : 11 Mar 2019 04:23 PM
Last Updated : 11 Mar 2019 04:23 PM

3 ஸ்டாலின்கள் சேர்ந்தால்கூட கருணாநிதிக்கு ஈடாகாது: 2016-ல் பாமகவுக்காக பணியாற்றிய தேர்தல் வியூக வல்லுநர் பேட்டி

'மாற்றம், முன்னேற்றம் அன்புமணி' என்ற முழக்கத்துடன் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வீறுநடை போட முக்கியக் காரணமாக இருந்தவர் தேர்தல் வியூக வல்லுநர் ஜான் ஆரோக்கியசாமி.

2018-ல் நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் குமாரசாமியின் ஆளுமையைத் தேர்தலில் வாக்குகளாக மாற்றிய குழுவிலும் பணியாற்றியவர். நவீனப் பிரச்சார உத்திகள், தேர்தல் முழக்கங்கள், பிராண்டிங் வியூகங்கள் குறித்து அவரிடம் பேசினோம்.

'மாற்றம், முன்னேற்றம், அன்புமணி'- தமிழகம் முழுவதும் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட வாசகம். கருணாநிதி, ஜெயலலிதா என்னும் இரண்டு ஆளுமைகளுக்கு எதிராக முதல்வர் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட அன்புமணியின் அடையாளத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதா? எப்படி அந்த வாசகத்தைக் கட்டமைத்தீர்கள்?

அது வெறுமனே வாசகம் கிடையாது. தமிழக கிராமங்களின் மூலை மெடுக்கெல்லாம், பட்டி தொட்டியெல்லாம் அன்புமணியை அடையாளப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக இருந்தது. தேசிய அளவில் மத்திய அமைச்சராக இருந்த அன்புமணியை, தமிழக அரசியலில் பொசிஷனிங் செய்ய முடிவெடுத்தோம்.

மாற்றம் என்றால் 2 விஷயங்கள் ஒழிய வேண்டும் (மது, ஊழல்), முன்னேற்றம் எனில் 4 முறைகள் மாறவேண்டும். (கல்வி, சுகாதாரம் இலவசமாக, தொழில், விவசாயத்தில் முன்னேற்றம்), அன்புமணி - இவற்றைச் செய்யப் போகிறவர் அன்புமணி என்னும் தலைவர் என்று திட்டமிட்டுச் செயல்படுத்தினோம்.

அடுத்ததாக இரு பெரும் திராவிடத் தலைவர்களுக்கு எதிராக முதல்வர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகிறார் அன்புமணி. அவர்களுடன் ஒப்பிடாமல், அடுத்த தலைமுறைக்கான புதிய தலைவராக அன்புமணியைக் கட்டமைத்தோம். மதுவுக்கு எதிரான போராட்டம் களத்தில் முன்னெடுக்கப்பட்டது. ஊழலக்கு எதிராக லோக் ஆயுக்தா தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றது. 12 மாநாடுகள் நடத்தப்பட்டன. ஆக மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்பது வாசகமாக இல்லாமல் பாமகவின் தீவிரக் கொள்கையாக மாறியது.

இதனால் அதிமுக, திமுகவுக்கு அடுத்து, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரை (விஜயகாந்த்) தலைமையாகக் கொண்ட 6 கட்சிக் கூட்டணியை (மக்கள் நலக்கூட்டணி) தாண்டி, 2016 தேர்தலில் பாமக 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

2017-ம் ஆண்டு. தான் போட்டியிடும் மாநிலங்களையெல்லாம் அநாயசமாகப் பாஜக கைப்பற்றிய காலம். ஏற்கெனவே கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைத்த அனுபவமும் உண்டு. எப்படி காங்கிரஸ் சார்பில் சித்தராமையாவுக்காகப் பிரச்சாரம் செய்து, குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தீர்கள்?

தமிழக அரசியல் களம் வேறு. கர்நாடகாவில் சூழல் வேறு. அங்கே குருபா, லிங்காயத் மற்றும் ஒக்கலிகா என 3 சாதிகள், 3 கட்சிகள், 3 முதல்வர்கள்.

அதனால் கர்நாடகத்தின் தலைவர்; அதற்கான புகழ் என்ற அணுகுமுறையை விடுத்து, 'தெற்கின் தலைவர்' என்ற முழக்கத்தைக் கையில் எடுத்தோம். 'நமது பெங்களூரு, நமது பெருமை' என்னும் வாசகம் கவனத்துடன் தயாரிக்கப்பட்டது. வடக்கு - தெற்கு என்ற வேறுபாட்டைப் பயன்படுத்தி, தென் மாநிலங்களில் இருந்து தேசியத் தலைவர் சித்தராமையா என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இது எடியூரப்பா, குமாரசாமியில் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியது. விளம்பரங்கள் மட்டுமல்லாமல், மாநிலம் சார்ந்த அறிவுசார் கொள்கைகளை களத்தில் முன்வைத்தோம். இது பொதுமக்களிடையே ஈர்ப்பை ஏற்படுத்தியது.

அதேபோல சிவசேனாவுக்காகவும் பணியாற்றியுள்ளோம். மென்மையான அணுகுமுறை கொண்ட உத்தவ் தாக்கரேவை, தேவைக்கேற்ற வகையில் கடினமானவராக மாற்றியதில் எங்கள் குழுவுக்குப் பங்குண்டு. யார் யாருக்கு என்ன தேவையோ அதற்கேற்ப தலைவர்களின் சாதனைகளை முன்னிறுத்தி பிராண்டிங் செய்கிறோம்.

அப்படியென்றால் தலைவர்களை நீங்கள் உருவாக்குகிறீர்களா?

இல்லை, நாங்கள் தலைவர்களை உருவாக்க முடியாது. அவர்களேதான் அதை உருவாக்க வேண்டும். அவர்கள் மீதான மக்களின் பார்வையை நாங்கள் நல்லவிதமாக மாற்றுகிறோம். முற்காலத்தில் அவர்கள் முன்னெடுத்த நல்ல விஷயங்கள், கட்சியின் கொள்கைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவை கட்டமைக்கப்படுகின்றன. அவற்றின் வலிமையால்தான் 'நமக்கு நாமே', 'ஒளிரட்டும் மிளிரட்டும்' தாண்டி 'மாற்றம், முன்னேற்றம் அன்புமணி' என்னும் வாசகம் இன்னும்  மக்கள் மனதில் இருக்கிறது.

தொழில்நுட்பத்துக்கு முந்தைய காலகட்டத்தில் தலைவர்கள் எப்படி பிரதிபலிக்கப்பட்டனர்?

முன்பு விளம்பரங்கள் மற்றும் ஊடகங்கள் வழியாக மக்கள் தொடர்பு ஆகியவற்றின் மூலமாகவே கட்சிகள் பிரச்சாரம் செய்து வந்தன. அதைத் தாண்டி, களப்பணிகள் இருக்கும். பேட்டி, கட்சி செய்த சாதனைகள் என்பது மட்டுமே ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும். ஆனால் தொழில்நுட்பங்கள் பெருகிய பின்னர் பிரச்சார முறைகள் மாறிவிட்டன. இந்தத் தருணத்தில்தான் பிராண்டிங் உருவானது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாதான் இந்த மாற்றத்துக்கு முன்னோடி. அடுத்ததாக மோடி அதைக் கையில் எடுத்தார். மோடி என்ற பிம்பம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டது. இளைஞர்கள் மத்தியில் அவர் பொசிஷனிங் செய்யப்பட்டார். இணையத்தில் முழுவீச்சில் பாஜக பிரச்சாரம் செய்தது. மக்களின் ஆதரவுடன் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது.

அப்படியென்றால், களத்தில் பணியாற்றுவதற்கு இணையாக சமூக வலைதளங்களில் பிரச்சாரங்கள் செய்ய வேண்டுமா? அப்போதுதான் வெற்றி கிடைக்குமா? பொசிஷனிங் எனப்படும் நிலைநிறுத்தல் தலைவர்களுக்கு எந்த அளவுக்குப் பயன்படுகிறது?

தற்போது பாஜகவும் காங்கிரஸும் களத்துக்கு ஈடாக சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றன. இதற்கெனவே ஆயிரக்கணக்கில் தொழில்நுட்பக் குழுவினர் இயங்கி வருகின்றனர். ஆனால் சிறிய கட்சிகளால் முழுமையாக இதை மேற்கொள்ள முடியாது.

என்னைப் பொறுத்தவரை வாக்குகளின் எண்ணிக்கை களப் பணி மூலம் 80 சதவீதமும் இணையம் மூலம் 20 சதவீதமும் கிடைக்கும். ஆனால் தலைவர்கள் மீதான தாக்கம் தலைகீழாக இருக்கும்.

தலைவர்கள் மீதான தாக்கமும் பார்வையும் தேர்தலில் பிரதிபலிக்காதா, சமீபத்தில் அன்புமணியும் பிரேமலதாவும் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய விதம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானதே...

இந்திய வாக்காளர்கள் நுகர்வோர் மனநிலைக்கு மாறிவிட்டனர். 'உங்களுக்கு வாக்களித்தால் எனக்கென்ன லாபம்?' என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் உள்ளது. இங்கு பணத்தை மட்டுமே வாக்காளர்கள் எதிர்பார்ப்பதில்லை. 'நீங்கள் ஆட்சிக்கு வந்தால் எனக்கு வேலை கிடைக்குமா?, என்ன முன்னுரிமை அளிக்கப்படும்?' என்று மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில், அன்புமணியும் பிரேமலதாவும் ஒரு மாதத்துக்கு முன்னால் பேசியதையோ, ஒரு வாரத்துக்கு முன்னால் நடந்துகொண்டதையோ யாரும் நினைத்துப் பார்க்க மாட்டார்கள். தேர்தல் அன்றோ, ஓரிரு நாட்கள் முன்னதாகவோ நடந்ததை வேண்டுமானால் நினைவுகூர்ந்து வாக்களிப்பார்கள்.

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல் தமிழகம் எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஈபிஎஸ்ஸுக்கு இருக்கிறது. திமுக தலைவராக தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் ஸ்டாலின் இருக்கிறார். தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்?

கலைஞரும் ஜெ.வும் கையசைவுகளிலும் கண்ணசைவுகளிலுமே வாக்கு சேகரித்தவர்கள். உதாரணத்துக்கு 3 ஸ்டாலின்கள் சேர்ந்தால்கூட கலைஞருக்குச் சமமாக மாட்டார்கள். 5 அதிமுக தலைமைகூட ஜெ.வுக்கு ஈடாகாது. இருவருக்குமான வெற்றிடம் யாராலும் நிரப்பப்படாது. பணம் என்ற காரணி அதைச் சமன் செய்யும்.

யாராலும் எதிர்பார்க்க முடியாத, ஆச்சர்யங்கள் நிறைந்த, வித்தியாசமான தேர்தலாக இந்த மக்களவைத் தேர்தல் இருக்கப் போகிறது.

- தொடரும்...

தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

கருணாநிதியின் தலைமைப் பண்பில் ஸ்டாலினை பொருத்திப் பார்க்க முடியுமா? - தொல்.திருமாவளவன்

கருணாநிதியின் தலைமைப் பண்பில் ஸ்டாலினை பொருத்திப் பார்க்க முடியுமா? - தொல்.திருமாவளவன் 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x