Published : 06 Mar 2019 02:07 PM
Last Updated : 06 Mar 2019 02:07 PM

அண்ணா சாலையில் கட்டுக்கட்டாக ஏடிஎம்மில் பணம் செலுத்தி சிக்கிய இளைஞர்: ரூ.17.8 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை அண்ணா சாலையில் ஏடிஎம் மையத்தில் பணம் செலுத்தும் இயந்திரத்தில் அதிக அளவில்  பணத்தை செலுத்திக்கொண்டிருந்த இளைஞரை சந்தேகத்தின்பேரில் காவலர் ஒருவர் விசாரிக்க அவரிடமிருந்து ரூ.17.8 லட்சம் பணம் சிக்கியது.

நேற்று இரவு 8 மணி அளவில் அண்ணா சாலை திருவல்லிக்கேணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்தியன் வங்கி ஏடிஎம் பணம் செலுத்தும் மையத்தில் வட மாநில இளைஞர் ஒருவர் பணம் செலுத்திக்கொண்டிருந்தார்.

பலகணக்குகளில் கட்டுக்கட்டாக பணத்தை செலுத்துவதும், இருக்கும் இடத்தைவிட்டு நகராமல் பணம் செலுத்துவதையும் அருகிலிருந்த வாடிக்கையாளர் ஒருவர் பார்த்துள்ளார். மேலும் அந்த இளைஞர் வைத்திருந்த பையிலும் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருப்பதைப்பார்த்து சந்தேகப்பட்ட அவர் வெளியில் வந்துள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த திருவல்லிக்கேணி காவலரிடம் விஷயத்தை கூறியுள்ளார். உடனடியாக காவலர் உள்ளே நுழைந்து அந்த இளைஞரை தனியாக அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். அவர் யார் எங்கிருந்து வருகிறார், யாருக்கு பணம் அனுப்புகிறார் என கேட்டுள்ளார்.

ஆனால் அந்த இளைஞர் தட்டு தடுமாறி, முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே சந்தேகமடைந்த அவர் அந்த இளைஞர் வைத்திருந்த பையை வாங்கி சோதித்தபோது அதில் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள் இருந்ததைப் பார்த்து அதுகுறித்து கேட்டுள்ளார்.

ஆனால் அவர் அதற்கான சரியான பதிலை தெரிவிக்காமல் தடுமாறவே அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அவரது பையில் ஏடிஎம்மில் செலுத்தியதுபோக பணம் ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் இருந்துள்ளது.

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ரத்தர் சாகிப் (29) என்பதும், சென்னை மண்ணடி, நைனியப்பன் தெருவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. கட்டுக்கட்டாக இருந்த பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

கட்டுக்கட்டாக லட்சக்கணக்கில்  கணக்கில் வராத பணம் வைத்திருந்ததால் மேற்கொண்டு விசாரணைக்காக அந்த இளைஞரை   அமலாக்கத்துறையில் இன்று போலீஸார் ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x