Published : 28 Feb 2019 01:14 PM
Last Updated : 28 Feb 2019 01:14 PM

அதிக டிமாண்ட்; தேமுதிகவை நிராகரிக்கிறது திமுக?

அதிக தொகுதிகள், அதிக டிமாண்ட் வைப்பதால் தேமுதிகவை திமுக நிராகரிக்க உள்ளதாக திமுக வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது. நாளை ஸ்டாலின் பிறந்த நாளில் தொகுதி பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் பொதுத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு பெரிதும் வரும் என எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக திடீரென பின்வாங்கியது, மக்கள் நலக்கூட்டணி பக்கம் தேமுதிக தாவியது. தாம் கண்டிப்பாக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிய அளவிலான வெற்றி பெறுவோம் என்று திமுகவின் எண்ணம் காரணமாக தேமுதிகவை புறக்கணித்ததன் விளைவு ஆட்சியை பிடிக்க வேண்டிய 20 தொகுதிகளை சில ஆயிரம், ஐந்நூறு வாக்குகளில் திமுக இழந்து ஆட்சியையும் இழந்தது.

சமீபத்தில் தேசிய அளவிலான ஊடகங்கள் நடத்திய கருத்து கணிப்பில் தமிழகத்தில் திமுக அதிக இடங்களை வெல்லும் என்று கூறப்பட்டிருந்தது இவைகளை அடிப்படையாகக் கொண்டு கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக தரப்பு சற்று மெத்தனமாக செயல்பட்டது. இதன் விளைவு அதிமுக முந்திக்கொண்டு பாமகவை தனது கூட்டணிக்குள் கொண்டு வந்தது.

பாமக மற்றும் பாஜகவுடன்  அதிமுக கூட்டணி அமைந்ததன் மூலம் அதிமுக தரப்பு நம்பிக்கையைப் பெற்றது. எடப்பாடி சாதூர்யமிக்க தலைவராக பார்க்கப்பட்டார். அடுத்தும் சில கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரும் தேமுதிகவும் வரும் என எடப்பாடி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ஆனால் தேமுதிக அதிமுக கூட்டணிக்கு செல்லும் என்ற கணிப்பு கடந்த சில நாட்களாக மாறி வந்தது. இதற்கு காரணம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில கண்டிஷன்களை போடுவதால் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி நீடிக்கிறது.

தேமுதிக, அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்யாது அதிமுக மேடையில் ஏறாது, என்ற நிபந்தனையும், அதிமுக தரப்பில் கோரிக்கையாக வைக்கப்பட்ட 21 சட்டப்பேரவைத் இடைத்தேர்தலில் தேமுதிக பிரச்சாரம் செய்வதில் உள்ள சிக்கல் குறித்து பேசப்பட்டது.

மேற்கண்ட காரணங்களால் அதிமுக, தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. இந்தமுறை தேமுதிகவை விட்டு விடக்கூடாது என்பதில் திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். இதனை அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசர் முதலில் சந்தித்து பேசினார்.

திருநாவுக்கரசரும் தனது சந்திப்பில் அரசியல் இருந்தது என்று சூசகமாக தெரிவித்தார். தேமுதிக சார்பில் அதிக இடங்களும், 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சில தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் தேமுதிகவுடன் கூட்டணி இல்லை என்கிற நிலைப்பாட்டை விட்டு இறங்கிய திமுக தலைவர் ஸ்டாலின் தேமுதிகவை திமுக கூட்டணிக்கு முயற்சியில் இறங்கினார். இது அதிமுக தலைமைக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்தது என்பதாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தை தானே நேரில் சந்தித்து பேசினார் ஸ்டாலின். இதனால் திமுக தரப்பினர் உற்சாகமடைந்தனர். தேமுதிக திமுக கூட்டணிக்கு வரும் என எதிர்ப்பார்த்தனர். ஆனால் அதிமுக, திமுகவில் உள்ள டிமாண்டை தேமுதிக பயன்படுத்த எண்ணி இருபுறமும் பேசி வந்ததாக தகவல் வெளியானது.

கிட்டத்தட்ட பாமக பாணியில் இரு திராவிடக்கட்சிகளின் போட்டியை பயன்படுத்த தேமுதிக முடிவு செய்து காய்களை நகர்த்தியது. இதனால் திமுக பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. ஸ்டாலின் 5 நாள் சுற்றுப்பயணத்துக்காக இடைவெளி கொடுத்ததன்பேரில் இரண்டாம் கட்ட தலைவர்கள் தேமுதிகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். திமுக தரப்பில் திமுக தரப்பில் 3 தொகுதிகள் வரை அளிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் தேமுதிக தரப்பு 4 நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஒரு ராஜ்ய சபா தொகுதியில் உறுதியாக இருப்பதாக தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக 3 தொகுதிகள் தர தயாராக உள்ளதையும் திமுக தரப்பில் பேசும்போது தேமுதிக குறிப்பிட்டதாக தெரிகிறது.

தேமுதிக ஆரம்பத்தில் 10 சதவீத வாக்குகள் பெற்றாலும் படிப்படியாக வாக்கு சதவிகிதம் சரிந்து கடைசியில் 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதால் 3 நாடாளுமன்ற தொகுதிகள் போதும் என திமுகவும் கருதுவதாக திமுக வட்டார தகவல் தெரிவிக்கிறது.

கூட்டணி என்று வந்துவிட்டால் சட்டப்பேரவை தேர்தலிலும் அதன் தொடர்ச்சியாக அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டி இருக்கும் என்பதால் திமுக தலைமை இழுத்துப்பிடிக்கிறது. இதனால் தேமுதிகவுக்கு இன்று இறுதிகெடுவாக திமுக தலைமை வைத்துள்ளதாகவும், நாளை திமுக தனது முடிவை அறிவிக்க உள்ளதாகவும் திமுக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை தேமுதிக கூட்டணிக்கு வருவதால் மற்ற கூட்டணிக்கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு செய்வதில் திமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேமுதிக வராவிட்டால் கூட்டணி கட்சிகளுக்கும் கூடுதல் இடம் ஒதுக்க திமுக வட்டாரம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவ்வாறு தேமுதிக வராவிட்டால் மதிமுகவுக்கு 2 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும், சிபிஎம்-க்கு கூடுதலாக ஒரு தொகுதி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

3 தொகுதிகளை ஏற்று தேமுதிக வருவதாக இருந்தால் திமுக கூட்டணி இல்லாவிட்டால் இருக்கும் கூட்டணிக்கட்சிகளுடன் ஸ்டாலின் பிறந்தநாளான நாளை தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவிக்க வாய்ப்புள்ளதாக திமுக வட்டார தகவல் தெரிவிக்கிறது. இதன்மூலம் நாளை அனைத்தும் இறுதியாகும் என தெரிகிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x