Published : 25 Feb 2019 02:13 PM
Last Updated : 25 Feb 2019 02:13 PM

வைகோவை கண்கலங்க வைத்த ஸ்டாலின் பேச்சு

“அண்ணன் வைகோ எனக்குத் துணையாக இருப்பது மட்டுமல்ல, நான் அவருக்கு எப்போதும் துணையாக இருப்பேன்” என ஸ்டாலின் பேசியதைக் கேட்ட வைகோ மேடையில் கண்கலங்கினார்.

கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் விழா மதிமுக சார்பில் திருச்சியில் நேற்று நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் இதில் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் பேசிய வைகோ,மறைந்த திமுக தலைவர் கருணாநிதியிடம், உங்களுக்கு நான் எப்படி இருந்தேனோ அது போல் தம்பி ஸ்டாலினுக்கு என் வாழ்நாளெல்லாம் உடன் இருப்பேன் என்று சொன்னதை நினைவுகூர்ந்து பேசினார். அதை தற்போது நிறைவேற்றி வருவதாகவும் வைகோ பேசினார்.

அதன் பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் இதைக்குறிப்பிட்டுப் பேசினார். அவர் குறிப்பிட்டு பேசப்பேச வைகோவின் முகம் மாறியது. அவரது கண்களில் கண்ணீர்  துளிர்க்க ஆரம்பித்தது. தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு சமாளிக்க முயன்றார். ஆனால், ஸ்டாலின் தொடர்ந்து வைகோ குறித்து பேசப்பேச அவரது கண்களில் கண்ணீர்  வழிய ஆரம்பித்தது. சட்டென்று துண்டை எடுத்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்.

இதை ஊடக கேமராக்களும் அருகிலிருந்த தொண்டர்களும் கவனிக்கத் தவறவில்லை. சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற கல்லூரி விழாவிலும் வைகோ மாணவர்களிடையே பேசும்போது இன்னும் சில காலம்தான் நான் உயிர் வாழ்வேன், தற்போது நடக்கும் நிகழ்வுகள், காந்தி படத்தைக் கொளுத்துவது, சுடுவதை எண்ணி இதயம் வெடிக்கிறது எனக் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.  

விழாவில் வைகோவைக் கலங்க வைத்த ஸ்டாலின் பேச்சு

''இந்த விழா தலைவருக்குப் புகழஞ்சலி செலுத்தக்கூடிய வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தலைவர் மறைந்த பிறகு இதுநாள் வரையில், இதுநாள் என்று கூட சொல்ல மாட்டேன். எந்நாளும் தலைவருக்குப் புகழஞ்சலி செலுத்தப்படும். மதிமுக நடத்தும் மேடையில் திமுக தலைவராக நான் நிற்கும்போது உண்மையில் என்னுடைய உணர்வுகள் எங்கோ செல்கின்றன.

தலைவர் கருணாநிதிக்கு மதிமுக சார்பில் தமிழேந்தல் விழாவா? வைகோ அருகில் ஸ்டாலினா? என்றெல்லாம் சிலருக்கு சந்தேகம் அல்ல பொறாமை. இன்னும் சொன்னால் கோபமாகக் கூட இருக்கலாம். திராவிட இயக்கங்கள் ஒன்று சேர்ந்தால் சிலருக்குப் பிடிக்கவே பிடிக்காது. அந்த வயிற்றெரிச்சலில் தான் தொடர்ந்து விமர்சனம் செய்வார்கள்.

இந்த விழாவுக்கான அழைப்பிதழில் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளை மிகச்சரியாக அண்ணன் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்ற பாவேந்தர்,

'எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே'

-    என்று சொன்னார்.

இங்குள்ள தமிழர்கள் ஒன்று ஆனால் நம்முடைய எதிரிகளால் எதுவும் செய்ய முடியாது. நம்மை யாராலும் வீழ்த்த முடியாது.

உங்களால் தளபதி என்று அடையாளம் சூட்டப்பட்டிருக்கக் கூடியவன் நான். அண்ணன் வைகோவை 'போர்வாள்' என்று தலைவர் கருணாநிதி குறிப்பிட்டார். தளபதியும் போர்வாளும் ஒரே மேடையில்.

தளபதியும், போர்வாளும் இணைந்திருப்பது திராவிட இயக்கத்தைக் காப்பாற்றுவதற்காக, இந்த இனத்தைக் காப்பாற்றுவதற்காக, இந்த மொழியைக் காப்பாற்றுவதற்காக, இந்த தாய்த் திருநாட்டைக் காப்பாற்றுவதற்காக! தலைவர் கருணாநிதி வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோபாலபுரம் இல்லத்திலே ஓய்வெடுக்க வேண்டிய சூழல்.

அந்த நேரத்தில் வைகோ தலைவரைச் சந்திக்க வேண்டுமென கேட்க, அதற்கு ஒரு நாளை குறிப்பிட்டுச் சொல்ல, அவரும் வந்தார். வைகோவைப் பார்த்ததும் தலைவர் அடையாளம் கண்டு ஒரு புன்முறுவல் பூத்தார்.

எத்தனை ஆண்டுகால நட்பு அது? தலைவருக்கும், தொண்டர்களுக்கும் தொண்டராக இருந்தவர் தான் வைகோ. வைகோவை தலைவர் அடையாளம் காண முடியாவிட்டாலும் அந்தக் கறுப்புச் சால்வையை தலைவரால் நிச்சயமாக மறக்க முடியாது.

அழுதுகொண்டே  வைகோ  கதறினார். தலைவர் கரங்களைப் பிடித்தார். தலைவரும் அண்ணன் வைகோவின் கரங்களை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டார்.

அந்த சோக நிலையிலும், கண்ணீரோடு தலைவரிடத்தில் அண்ணன் வைகோ சொன்னது இன்னமும் என் நினைவில் இருக்கிறது. 'அண்ணா! உங்களுக்கு நான் எப்படி இருந்தேனோ அது போல் தம்பி ஸ்டாலினுக்கு என் வாழ்நாளெல்லாம் உடன் இருப்பேன்' என்று சொன்னார் அண்ணன் வைகோ. அவருக்கு துணை நிற்பேன் என்று சொன்னார், ஒருமுறை அல்ல. பலமுறை சொன்னார்.

அண்ணன் வைகோ எனக்குத் துணையாக இருப்பது மட்டுமல்ல, நான் அவருக்குத் துணையாகவும் இருப்பேன் என்ற வாக்குறுதியை வழங்குவதற்காகத்தான் இந்த விழாவுக்கே நான் வந்திருக்கிறேன்.

துணை என்பது ஏதோ தனிப்பட்ட வைகோவுக்காக அல்ல. கடந்த முப்பது ஆண்டு காலமாக தமிழ்நாட்டுக்கு எதெல்லாம் கேடு பயக்குமோ அதற்கு எதிராக எல்லாம் போராடிக் கொண்டிருக்கக்கூடியவர் வைகோ. அவரின் போராட்டங்களுக்கு நிச்சயமாக உறுதியாக துணையாக நிற்பேன் என்ற பொருளில் தான் சொல்கிறேன்''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x