Published : 25 Feb 2019 01:50 PM
Last Updated : 25 Feb 2019 01:50 PM

நம்பிக்கையை இழக்காதீர்கள், விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள்: தொண்டர்களுக்கு ராமதாஸ் அறிவுரை

நம்பிக்கையை இழக்காதீர்கள், விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி பேரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டில் இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பது 2011-ம் ஆண்டு முதல் பாமகவின் நிலைப்பாடாக இருந்து வந்தது. அப்போது தொண்டர்களிடையே கூட்டத்தில் பேசிய  ராமதாஸ், ''கார் உள்ளளவும் கடல் நீர் உள்ளளவும், பார் உள்ளளவும் பைந்தமிழ் உள்ளளவும் திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை'' என்று சூளுரைத்தார். இதைத் தொடர்ந்து இரண்டு கட்சிகளையும் பாமக தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தது.

இதனிடையே திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் பாமக இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. கூட்டணி விஷயத்தில் சிறிய அளவில் சமரசம் செய்து கொண்டாலும் கூட, அதன்மூலம் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என்பதால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததாக, ராமதாஸ் தெரிவித்தார். எனினும் அதிமுக உடனான கூட்டணியை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களும், பாமகவினரைக் கேலி செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பாமக தொண்டர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திமுகவுடன் கூட்டணி வைத்ததால் பாமக இளைஞர் சங்கச் செயலாளர் ராஜேஸ்வரி பிரியா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே களையிழந்துள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ராமதாஸ் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் இருங்கள். கடுமையாக உழையுங்கள்- நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள். புதிய விஷயங்களை தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றிலும் மகிழ்ச்சியான, உண்மையான, நட்பான மனிதர்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்! -டினா தேசாய்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x