Published : 25 Feb 2019 01:41 PM
Last Updated : 25 Feb 2019 01:41 PM

அதிமுக, பாஜக ஆட்சி; வேகமான வளர்ச்சியை அளிக்கும் இரட்டை இன்ஜின்கள்: பியூஷ் கோயல் புகழாரம்

அதிமுக, பாஜக ஆகிய  இரண்டு ஆட்சிகளும் வேகமான வளர்ச்சியை அளிக்கும் இரட்டை இன்ஜின்கள் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் புகழாரம் சூட்டியுள்ளார்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தபடி சிறு, குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் ‘பிரதம மந்திரி விவசாயி ஆதரவு நிதி’ திட்டத்தை, உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைத்தார். இதையடுத்து பயனாளிகளின் வங்கிக் கணக்கில் முதல் தவணையான ரூ.2 ஆயிரம் நேரடியாகச் செலுத்தப்பட்டது.

அதே நேரத்தில் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், முதல்வர் கே.பழனிசாமி இத்திட்டத்தை தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ''மத்திய, மாநில அரசுகள் இணைந்து நண்பர்களாகப் பணியாற்றும்போது, உங்களால் இரட்டை வளர்ச்சியைக் காண முடியும். வளர்ச்சியில் இரட்டிப்பு வேகம் இருக்கும். உங்களுக்கே தெரியும். ஒரு ரயிலில் இரண்டு இன்ஜின்களைப் பொருத்தினால், ரயில் வேகமாகச் செல்லும்.

தமிழக மக்கள் மிகவும் ஸ்மார்ட் ஆனவர்கள், உண்மைதானே? (பொதுமக்களின் ஆம் என்ற ஒலியால் அரங்கமே அதிர்ந்தது)

தமிழகத்தில் இரண்டு இன்ஜின்கள் பணியாற்ற வேண்டுமா? (மீண்டும் பெரிய ஆம்!)

உங்களின் (விவசாயிகள் )ஆசிகளோடும், தமிழக மக்கள், அம்மா (மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) ஆகியோரின் வாழ்த்துகளுடனும், மக்களின் சிறப்பாக எதிர்காலத்துக்காகப் பணியாற்றுவோம்'' என்றார் பியூஷ் கோயல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x