Published : 25 Feb 2019 12:08 PM
Last Updated : 25 Feb 2019 12:08 PM

தேமுதிக கூட்டணிக்கு வந்தால் சந்தோஷம்; இல்லையென்றால் வருத்தம் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

தேமுதிக கூட்டணிக்கு வந்தால் சந்தோஷம். இல்லையென்றால் வருத்தம் இல்லை என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் இன்று (திங்கள்கிழமை) காலை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அதிமுக - பாஜக கூட்டணியை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறாரே?

ஒரு தலைவருக்கு கோபம், விரக்தி இரண்டும் அழகல்ல. ஆனால், இவை இரண்டும் 100% மு.க.ஸ்டாலினுக்கு இப்போது உச்சந்தலையில் ஏறியுள்ளது. அதிமுகவுக்கு ஒரு கொள்கை, பாஜகவுக்கு ஒரு கொள்கை. அதேபோன்று, திமுகவுக்கும் ஒரு கொள்கை. ஆனால், அந்தக் கொள்கையை திமுக கடைபிடித்ததா?

மாநிலத்தின் பல உரிமைகளை திமுக தாரை வார்த்தது. அதிமுக தான் அதனை மீட்டது. பாஜகவால் பொருளாதாரம், அரசியல், அதிகாரம் ரீதியாக விண்ணளவு உயர்ந்தது திமுக. பாஜகவுக்கு திமுக வால் பிடித்தது. இந்த அரசியல் எடுபடாதது. இதனையெல்லாம் மறந்துவிட்டு திமுக இந்த ஆயுதத்தை எடுத்திருக்கிறது. இந்த ஆயுதம் கூர்மையானது அல்ல, அவர்களையே தாக்கக் கூடியது. தமிழக மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள்.

டிடிவி தினகரனும் இக்கூட்டணியை விமர்சித்துள்ளாரே?

திமுக சந்தர்ப்பவாத அடையாளம் என்றால், தினகரன் துரோகத்தின் அடையாளம். பித்தலாட்டம் செய்த கொள்ளைக் கும்பல். ஜெயலலிதாவால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர் டிடிவி தினகரன்.

தேமுதிக, அதிமுக கூட்டணியில் சேருமா?

கூட்டணி கதவு திறந்திருக்கிறது. பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தேமுதிக கூட்டணிக்கு வந்தால் சந்தோஷம். இல்லையென்றால் வருத்தம் இல்லை.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x