Published : 25 Feb 2019 08:29 AM
Last Updated : 25 Feb 2019 08:29 AM

நீலகிரியின் இயற்கை காளான்!- தனி விதை உற்பத்தி மையம் அமைக்கப்படுமா?

நீங்கள் சாப்பிடுவது காளானே இல்லை. ஏ.சி. அறையில் செயற்கையாய் வளர்க்கும் காளான். நீலகிரியில் விளைவதுதான் இயற்கையான காளான். அதுவே உடலுக்கு உகந்தது” என்கின்றனர்  நீலகிரி மாவட்ட காளான் உற்பத்தியாளர்கள். அவைசப் பிரியர்களுக்கு மட்டன், சிக்கன், மீன், முட்டை என விதவிதமான உணவுகள் இருக்கும் நிலையில், சைவப் பிரியர்களுக்கு வரப்  பிரசாதமாக கிடைத்தவை காளான்கள். நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பழங்கள் மற்றும் காய்கறிகளில்  இல்லாத தாதுப் பொருளான `செலினியம்’ காளானில் உள்ளது. இந்த தாதுப்  பொருள் புற்றுநோய் செல்களை அழிக்கவும் உதவுகிறது. இதய நோய் மற்றும் நீரழிவு நோய்களுக்கு சிறந்த உணவாகவும் அறியப்படுகிறது.

ஒரு கோப்பை நறுக்கப்பட்ட காளானில் 15 கலோரிகள் உள்ளன. கொழுப்பு இல்லை. 2.2 கிராம் புரதம், 2.3 கிராம் கார்போஹைட்ரேட், 0.7 கிராம் நார்ச்சத்து மற்றும் 1.4 கிராம் சர்க்கரை உள்ளது. இதனால், உடல் பருமன் ஏற்படுத்தாத உணவாக காளான் உள்ளதால், உணவுக் கட்டுப்பாடு கடைப்பிடிப்பவர்களிடம் காளானுக்கு வரவேற்பு அதிகம்.

காளான் உணவு

காளானில் புரதச் சத்தும் அதிகம் உள்ளதால், தற்போது காளானைக் கொண்டு பிரியாணி முதல் சில்லி காளான், காளான் 65, காளான் மஞ்சூரியன் உட்பட வகை வகையான உணவுகள் காளானைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

பிரதமர் மோடி, உடல் ஆரோக்கியத்துக்காக ஒரு கிலோ ரூ.4 லட்சம் மதிப்பிலான தாய்லாந்து காளானை உண்பதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. இது உண்மையோ, இல்லையோ, பூஞ்சை  ரகத்தைச்  சேர்ந்த, இயற்கையான உணவு காளான் என்பதால், மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் அதை உண்ணுகின்றனர்.

குழந்தைகள் முதல் முதியோர் வரை விரும்பி உண்ணும் காளான், பிராய்லர் கோழி வளர்ப்புபோல செயற்கையாக உற்பத்தி செய்யப்படுகிறது என அதிர்ச்சித் தகவலை முன்வைத்தனர் நீலகிரி காளான் உற்பத்தியாளர்கள்.

குளிர் பிரதேசத்தில் மட்டுமே விளையும்!

காளான் 18 முதல் 23 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பத்தில் மட்டுமே விளையும் என்ற நிலையில், சராசரியாக 30 டிகிரிக்கு மேல் உள்ள சமவெளிப் பகுதிகளில் எப்படி விளையும் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர்.

இது தொடர்பாக நீலகிரி மாவட்ட காளான் உற்பத்தியாளர்கள் சங்க்ச செயலர் வினோத் கூறும்போது, “நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும்

காளான்கள், இயற்கை முறையில் உற்பத்தியாகும்  காளான்கள். ஆனால், சமவெளிப் பகுதிகளில், குளிர்சாதன வசதி கொண்ட (ஏ.சி.) அறைகளில் குறிப்பிட்ட வெப்பநிலையில் காளான் உற்பத்தி செய்யப்பட்டு, குளிர்சாதன வசதி கொண்ட வண்டிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு, விற்பனை நிலையங்களிலும் குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து, பிராய்லர் கோழி போல விற்பனை செய்யப்படுகின்றன.

ஆனால், நீலகிரியில் காளான் இயற்கை  முறையிலேயே உற்பத்தி செய்யப்பட்டு, பொது வாகனங்களில் சமவெளிப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் நீலகிரி காளான்கள் இரண்டு நாட்கள் வரையிலும் கெட்டுப்போவதில்லை.

ஆனால், வெளி மாநில காளான்கள், குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வெளியே எடுத்த சில மணி நேரங்களிலேயே கெட்டுவிடுகிறது. இயற்கையாக விளையும் நீலகிரி காளானுக்கு உற்பத்திச் செலவு அதிகம். வைக்கோல், கோழி எரு என இடுபொருட்களை  சமவெளிப் பகுதிகளிலிருந்து கொண்டுவர வேண்டும். இதனால், செலவு அதிகரிக்கிறது. இதனால்தான், நீலகிரி காளானைக் காட்டிலும், கொஞ்சம் குறைந்த விலைக்கு சமவெளிப் பகுதிகளில் உற்பத்தியாகும் காளான்கள் விற்கப்படுகின்றன” என்றார்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், மாற்றுப் பயிருக்கு பல விவசாயிகள் மாறி வருகின்றனர். இதில், பலரும்  மலர் சாகுபடியில் இறங்கியுள்ளனர். ஆனால், மலர்களை சந்தைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களால், தற்போது காளான் உற்பத்தியில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். மகளிர் குழுக்களும் காளான் சாகுபடியில் ஈடுபடுவது வரவேற்கத்தக்க மாற்றமாக உள்ளது. இந்நிலையில், நீலகிரி காளானுக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்கிறார் தலைவர் செந்தில்குமார். “காளான் உற்பத்திக்கென வேளாண்மைத் துறையால்,  நீலகிரி மாவட்டத்தில் தனியாக விதை  உற்பத்தி மையம் மற்றும் உர விநியோக மையம் தொடங்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் இருந்து அரசுப் பேருந்துகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டுசெல்லப்படும் காளான்களுக்கு, சரக்குக் கட்டணத்திலிருந்து  விலக்கு அளிக்க வேண்டும்.

காளானை பிளாஸ்டிக் பைகளில் மட்டுமே அடைத்து விற்பனை செய்ய முடியும் என்ற நிலையில், பிளாஸ்டிக் தடை காரணமாக காளான்களை விற்பனை செய்வது சவாலாக உள்ளது. பிளாஸ்டிக் தடையிலிருந்து காளான்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். நீலகிரி காளானை ‘பிராண்ட்’ செய்யவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இயற்கையாக விளையும் நீலகிரி காளானுக்கு மக்கள் மற்றும் அரசு ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

காளான் வளர்ப்புக்கு 40% மானியம்

“நீலகிரி மாவட்ட தோடக்கலைத் துறை சார்பில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்க திட்டத்தின் கீழ், காய்கறி, வாசனைப் பயிர்கள், பழம், காய்கறி சாகுபடி, இயந்திரமயமாக்கல், பயிற்சி வழங்குதல் மற்றும் அறுவடைக்குப் பின் நேர்த்தி செய்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. இவற்றில் முக்கியமானது காளான் வளர்ப்புத் திட்டமாகும்.

தோட்டக்கலைத் துறை மூலம் காளான் வளர்ப்புக்கு 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது” என்கின்றனர் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள்.

“நீலகிரி மாவட்டத்தில் காளான் உற்பத்தி செய்ய ஏற்ற காலநிலை உள்ளது. இதனால், காளான் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, தேசிய தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத் திட்டத்தின்கீழ் காளான் உற்பத்திக் கூடம் அமைக்க, விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் அளிக்கப்படுகிறது. சாகுபடிச் செலவுபோக, ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை லாபம் கிடைக்கும்” என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x