Published : 25 Feb 2019 08:26 AM
Last Updated : 25 Feb 2019 08:26 AM

தண்ணீரை தேடும் விலங்குகள்!- வனப் பகுதிகளில் நிலவும் வறட்சியால் தவிப்பு

வனத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால், தாகம் தீர்க்க நீராதாரங்களைத் தேடி அலைகின்றன வன விலங்குகள். தண்ணீர் தட்டுப்பாட்டால் யானைகள் காட்டை விட்டு வெளியில் வரலாம் என்று வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நடப்பாண்டில் பெய்ய வேண்டிய மழையின் அளவு ஏறத்தாழ 50  சதவீதம் வரை குறைந்துவிட்டதால், காடுகள் அதன் பசுமையை இழந்து காணப்படுகின்றன. வெயிலின் தாக்கமும் முன்கூட்டியே அதிகரித்துவிட்டதால்,  வனப் பகுதிகளில் உள்ள  இயற்கையான நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு வருகின்றன. இதனால், செடி, கொடிகள்,  சிறிய மரங்கள் காய்ந்து, கோவை வனக் கோட்டத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை,  காரமடை வனச் சரகப் பகுதி காடுகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன.

இதனால், யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும், தாகம் தீர்க்க நீராதாரங்களைத்  தேடி அலைகின்றன.  சிறு விலங்குகள், கொஞ்சம் தண்ணீர் கிடைத்தாலே சமாளித்துவிடும் நிலையில், உயிர் வாழ ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 150 லிட்டர் நீர் தேவைப்படும் யானைகள், பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளன.

காய்ந்து விட்ட வனக் குட்டைகளில், சிலவற்றில் மட்டும் ஓரளவே தேங்கி நிற்கும் தண்ணீரைத்  தேடி யானைகள் உள்ளிட்ட விலங்குகள் கூட்டம் கூட்டமாய் வருகின்றன.

காடுகளுக்குள் ஆங்காங்கே தேங்கி நிற்கும் குறைந்த அளவு தண்ணீரும் வற்றிவிட்டால்,

யானை போன்ற பெரிய உயிரினங்கள் வனத்தை விட்டு வெளியேறி, தண்ணீர் தேடி ஊருக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரிக்கும். எனவே,  காடுகளுக்குள் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்சினைகளை கருத்தில்கொண்டு, வனத்துறையினர் காட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் செயற்கையாய் தண்ணீர் தொட்டிகளைக் கட்டி,  அதில் நீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து சிறுமுகை வனச் சரக அலுவலர் மனோகரன் கூறும்போது, “வன வறட்சியை சமாளிக்க செயற்கை கசிவுநீர்க் குட்டைகள்,  தண்ணீர்த் தொட்டிகள் மற்றும் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்க தீத்தடுப்புக் கோடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

இதுபோன்ற வறட்சிக் காலத்தில்,  வனத்தின் அருகில் கால்நடை மேய்ச்சலுக்காக செல்லக் கூடாது.  எந்தக் காரணத்தை கொண்டும் வனத்தில்  நுழையக்கூடாது.

 யானைகள் காட்டை விட்டு வெளியில் வந்து,  கிராமங்களுக்குள் நுழையமுற்பட்டால், அவற்றை தாங்களே விரட்ட முயற்சிக்காமல்,  உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிப்பது அவசியம். வனத்தினுள் நிலவும் வறட்சி காரணமாக,  போதிய உணவோ, நீரோ கிடைக்காமல் வெளியில் வரும் யானைகளை, பொதுமக்களே விரட்ட முயற்சிப்பது ஆபத்தானது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x