Published : 23 Feb 2019 12:39 PM
Last Updated : 23 Feb 2019 12:39 PM

சமூகச் செயற்பாட்டாளர் முகிலனைப் பாதுகாப்பாக மீட்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தீர்மானம் நிறைவேற்றம்

சமூகச் செயற்பாட்டாளர் முகிலனை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் எதிர்வரும் மக்களவைத் தேர்தல் தயாரிப்புகள், தேர்தல் நிதி வசூல், கோவையில் பிப்ரவரி 27 நடைபெறும்அரசியல் எழுச்சி மாநாடு ஆகியன பற்றி விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்க:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரும் நீண்டகாலம் சிறைவாசிகளாக தண்டனை அனுபவித்துவிட்டதைக் கருத்தில் கொண்டு, விடுதலை செய்யப்படவேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நடைபெற்ற வழக்குகளை விசாரித்தஉச்ச நீதிமன்றம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரும் விடுதலை செய்வது குறித்து, தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என இறுதியாக உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவை கூடி பேரறிவாளன் உட்பட 7 பேரும் விடுதலை செய்யவது என தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது.

அமைச்சரவையின்  முடிவுகளை ஏற்று, செயல்படுத்த வேண்டிய ஆளுநர் அவசியமற்ற நடைமுறைகளில் ஈடுபட்டு காலதாமதம் செய்துவருவது மக்கள் உணர்வுகளை சிறுமைப்படுத்துவதாகும். அரசியல் அமைப்புக் கடமைகளை அத்துமீறி வரும் ஆளுநரின் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாடு அரசு இனியும் தாமதம் செய்யாமல்பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் முயற்சியால் மார்ச் 9-ல் நடைபெறும் மனிதச் சங்கிலி இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க:

நீண்டகாலம் சிறைவாசிகளாக உள்ள இஸ்லாமிய, தலித் சிறைவாசிகளை விடுதலை செய்யுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு மாநில அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

சமூகச் செயற்பாட்டாளர் முகிலனைப் பாதுகாப்பாக மீட்டிடுக:

சமூகச் செயற்பாட்டாளர் முகிலன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறையின் சட்டவிரோதமான துப்பாக்கிச் சூட்டின் சூழ்ச்சிகளையும், சதித்திட்டங்களையும் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில்ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்னையில் இருந்து மதுரைக்குதொடர்வண்டிப் பயணம் மேற்கொண்ட முகிலன் மதுரை சென்றடையவில்லை. அவர் காணாமல் போனது ஆழமான சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

24 மணி நேரமும் காவல்துறையின் கண்காணிப்பில் உள்ள ஒரு சமூகச் செயற்பாட்டாளர் காணாமல் போயிருப்பது பொதுவாழ்வில் ஈடுபடுவோரை அச்சுறுத்தும் செயலாகவே கருத வேண்டியுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் ஆட்கொணர்வு மனுவை விசாரித்து வருகிறது. நாடு முழுவதும் முகிலன் எங்கே? என்று எழுப்பப்படும் கேள்விக்கு பொறுப்பான பதிலளிக்கும் முறையில் உரிய வழிமுறைகளில் அவரைத் தேடி கண்டுபிடித்து, பாதுகாப்பாக மீட்பதுடன், இது தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x