Published : 23 Feb 2019 10:43 AM
Last Updated : 23 Feb 2019 10:43 AM

முகிலனுக்கு என்ன ஆனது? அவர் எங்கே இருக்கிறார்? - தமிழக அரசிடம் சீமான் கேள்வி

சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே இருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீமான் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தின் மண்ணுரிமைப் போராட்டக்களத்தில் முதன்மையாய் நிற்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலனைக் காணவில்லையென வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியானது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது.

கடந்த பிப்ரவரி 15 அன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்குச் சென்றவருக்கு அதன்பிறகு என்ன நிகழ்ந்தது என்கிற எந்த விவரமும் இந்நொடிவரை தெரியவில்லை. தாமதப்படுத்தப்படும் ஒவ்வொரு மணித்துளியினாலும் அவருக்கு எதுவேனும் நிகழ்ந்திருக்குமோ? என்கிற பதைபதைப்பும், பதற்றமும் தொற்றிக்கொள்வதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டிருக்கிறார் என்றும், தலைமறைவாக இருக்கிறார் என்றும் பல்வேறு விதமாக முன்வைக்கப்படும் அனுமானங்களினாலும், யூகங்களினாலும் அவரது குடும்பத்தினர் பெரும் மனஉளைச்சலுக்கும், பரிதவிப்பு நிலைக்கும் ஆளாகியுள்ளனர்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் காவல்துறையின் மூலம் தமிழக அரசு நிகழ்த்திய வன்முறை வெறியாட்டத்தினையும், படுகொலையினையும் பத்திரிக்கையாளர் மன்றத்தில் அம்பலப்படுத்திய பிறகு அவர் காணாமல் போயிருப்பது பல்வேறு ஐயங்களைத் தோற்றுவிக்கிறது.

சென்ற முறை கைது செய்யப்பட்ட பொழுது திட்டமிட்டு சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பெரிய போராட்டத்திற்குப் பிறகு தான் விடுதலை செய்யப்பட்டார் என்பதைப் பார்க்கும்பொழுது இந்த முறையும் திட்டமிட்டு அவரது செயல்பாடுகளைத் தடுக்கும் நோக்கோடு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

தன்னலமற்று மண்ணுரிமைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிற சூழலியல் செயற்பாட்டாளர் முகிலனின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டியதும், அவருக்கு என்ன ஆனது? அவர் எங்கே இருக்கிறார்? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியதும் அரசின் கடமையாகிறது.

எனவே, இவ்விவகாரத்தில் உடனடியாக தமிழக அரசு சீரிய கவனமெடுத்து அவரைப் பாதுகாப்பாக மீட்க வேண்டும்" என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x