Published : 23 Feb 2019 09:10 AM
Last Updated : 23 Feb 2019 09:10 AM

மதுரை விமான நிலையத்தில் அமித்ஷாவுடன் ஓபிஸ், அமைச்சர்கள் சந்திப்பு: கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனை

மதுரைக்கு நேற்று வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் சந்தித்து கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினர்.

தமிழகத்தின் 18 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நேற்று மதுரை வந்தார். மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் விமான நிலையம் வந்தார். அப்போது மரியாதை நிமித்தமாக அமித்ஷாவை அவர் சந்தித்து பேசினார். பின்னர், பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்க அமித்ஷா ராமநாதபுரம் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இதற்கிடையே, பாஜக கூட்டணி முடிவான பிறகு முதல்முறையாக அமித்ஷா தமிழகம் வருவதாலும், 5 தொகுதிகள் ஒதுக்கியதால் பாஜக மேலிடம் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியானதாலும், அமித்ஷாவை சந்தித்துப் பேச அதிமுக தலைமை திட்டமிட்டது.

இதையடுத்து சென்னையில் இருந்து அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் அவசரமாக மதுரை வந்தனர்.

அவர்களுடன் துணை முதல்வரும் விமான நிலையத்தில் நீண்டநேரம் காத்திருந்தார்.

ராமநாதபுரம் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, மதுரை திரும்பிய அமித்ஷாவுடன் துணை முதல்வர், அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது:

பாஜக கூட்டணி முடிவான பின்னர் நடக்கும் முதல் சந்திப்பு இது. பிரதமர் மோடி வரும் மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகிறார். அவர் பங்கேற் கும் கூட்டம் குறித்து விவாதிக்கப் பட்டது. இக்கூட்டத்தில் உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் மட்டும் பங் கேற்கவும், இக்கூட்டத்துக்குப் பிறகு ஒருநாளில் சென்னை, திருச்சி, கோவையில் ஏதாவது ஒரு ஊரில் அனைத்துக்கட்சி தலைவர் கள் பங்கேற்கும் முதல் அறிமுகக் கூட்டத்தை நடத்துவது குறித்தும், தேமுதிகவை கூட்டணியில் சேர்ப்பது இழுபறியாக இருப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அளிப்பது, பாஜக கூட்டணியில் போட்டியிடும் சில கட்சிகளின் நிர்வாகிகள், அவர்களுக்கு ஒதுக்கப்படும் சின்னங்கள் ஆகியவை பற்றியும் பேசப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியபோது, ‘‘பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் நடந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானதே. தேமுதிகவுடன் கூட்டணி குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். இது நல்லபடியாக முடியும். நலம் விசாரிக்கவே விஜயகாந்தை சந்தித்ததாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் மேலும் பல கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி கூட்டணியாக அமையும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x