Last Updated : 23 Feb, 2019 08:37 AM

 

Published : 23 Feb 2019 08:37 AM
Last Updated : 23 Feb 2019 08:37 AM

வாக்குகளை தீர்மானிக்கும் பிரச்சினைகள்

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு பிரச்சினையை சந்தித்து வருகிறது. குமரிமுனையில் இருந்து தொடங்கினால், குளச்சல் இனயம் துறைமுகத் திட்டம் மீனவ மக்களிடம் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம். ‘இப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது. எனவே, ஆலை அவசியம்’ என்று கூறும்சங்கங்கள், அமைப்புகள் ஒருபக்கம். ‘சுற்றுச்சூழலைக் கெடுக்கும் ஆலை வேண்டாம்’ என்று போராடும் அமைப்புகள் ஒரு பக்கம்.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தித் தொழிலில் நிலவும் பிரச்சினை, ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்றநிலையில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் ஏற்பட்டு வரும் இன்னல்கள் ஆகியவை மக்களின் வாழ்வாதார பிரச்சினையாக இருக்கின்றன.

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அணையாத நெருப்பாக இருந்த காவிரி பிரச்சினையோடு, மேகேதாட்டு அணைக்கான அனுமதி, மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் திட்டங்களால், வாழ்வாதாரமாக உள்ள விளைநிலங்கள் பறிக்கப்படும் என்பது விவசாயிகளின் பெரிய அச்சமாக உள்ளது. இதற்கிடையே, கஜா புயல்பாதிப்புகள். இதேபோல, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 3-வது நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம்.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி சேலம் மாவட்டங்களில் பலரும் பரம்பரை தொழிலாக விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது பசுமை வழிச்சாலைத் திட்டம். இது ஒருபுறம் என்றால், விழுப்புரம், சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக, உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் திட்டம். இவற்றில் சில மாவட்டங்களில் விளைநிலம் வழியாக கெயில் குழாய் அமைக்கும் திட்டம் வேறு.

இவை அனைத்துமே வளர்ச்சித் திட்டங்கள் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதே ஆர்வலர்களின் பெரிய கவலையாக உள்ளது.

இதுதவிர, மாநிலத்தின் மாபெரும் வருவாய் ஆதாரமாக விளங்கும் மதுபானம், ஒட்டுமொத்த தமிழகத்திலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படுத்திவரும் பல்வேறு பிரச்சினைகள்.

எந்தவொரு திட்டத்தையும் யாருக்கும் சிறு பாதிப்புகூட நேராத வகையில் நிறைவேற்றுவது சாத்தியமா என்பது தெரியவில்லை. அதேநேரம், சாமானியர்கள், உழைப்பாளிகள், விவசாயிகள், ஏழைகள் பாதிக்கப்படாத வகையிலும், ஒருவேளை அவர்களது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் சூழலில், உரிய இழப்பீடுகள், நிவாரண உதவிகள் வழங்குவதும் நியாயமான பரிகாரங்களாகத் தெரிகின்றன.

இத்தகைய கொள்கைகளை எந்த கட்சிகள் முன்வைக்கின்றன? இதுபோன்ற பிரச்சினைகளை தற்போதைய அரசுகள் எப்படி சமாளிக்கின்றன? இதேபோன்ற பிரச்சினைகள் எழுந்தபோது, ஏற்கெனவே இருந்த அரசுகள் எப்படி சமாளித்தன?பிரச்சினைகளும், இந்த கேள்விகளும்தான் வாக்குகளைத் தீர்மானிக்கப்போகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x