Published : 23 Feb 2019 08:54 AM
Last Updated : 23 Feb 2019 08:54 AM

திமுக கூட்டணியில் 2-வது நாளாக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: மதிமுக 3, விசிக 2 தொகுதிகள் கேட்பதால் இழுபறி

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை 2-வது நாளாக நேற்று நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சியுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான தொகுதிப் பங்கீட்டு குழுவினர் 21-ம் தேதி பேச்சு நடத்தினர்.

கோவை, மதுரை, கன்னியாகுமரி, வடசென்னை ஆகிய தொகுதிகளின் பட்டியலை அளித்துள்ள மார்க்சிஸ்ட் குறைந்தது 2 தொகுதிகள் வேண்டும் என வலிறுத்தியுள்ளது. நாகை, திருப்பூர், தென்காசி ஆகிய தொகுதிகளைக் குறிப்பிட்டு 2 தொகுதிகளை கண்டிப்பாகத் தர வேண்டும் என வலியுறுத்தினர். மனிதநேய மக்கள் கட்சி தங்களுக்கு ராமநாதபுரம் அல்லது மயிலாடுதுறை வேண்டும் என கோரியுள்ளது. தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளது.

அதைத் தொடர்ந்து, மதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று காலை தொடங்கியது. மதிமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் அ.கணேசமூர்த்தி, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, சே.செவந்தியப்பன், செங்குட்டுவன், சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் துரைமுருகன் தலைமையிலான குழுவினருடன் பேச்சு நடத்தினர்.

மதிமுக சார்பில் தென்காசி, ஈரோடு, திருச்சி, நெல்லை, விருதுநகர், காஞ்சிபுரம் ஆகிய 5 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. இதில் குறைந்தது 3 தொகுதிகள் வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கணேசமூர்த்தி, ‘‘திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சு சுமுகமாக நடந்தது. மதிமுக தலைமையின் கருத்தை திமுகவிடம் தெரிவித்துள்ளோம். நல்ல முடிவு ஏற்படும் என நம்புகிறோம்’’ என்றார்.

அதைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர்கள் டி.ரவிக்குமார், சிந்தனைச்செல்வன், பொருளாளர் முகமது யூசுப் உள்ளிட்ட 6 பேர் குழுவினர் துரைமுருகன் தலைமையிலான குழுவுடன் பேச்சு நடத்தினர். சிதம்பரம், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய தொகுதிகளைக் குறிப்பிட்டு 2 தொகுதிகளை கேட்டுள்ளனர்.

பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுடனும் துரைமுருகன் குழுவினர் பேச்சு நடத்தினர். பின்னர் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட். விசிக ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகள் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. மமக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை தலா 1 தொகுதி கேட்கின்றன. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளார்.

மற்ற கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்க திமுக நினைக்கிறது. ஆனால், 4 கட்சிகள் தலா 2 தொகுதிகள் கேட்பதால் இழுபறி நீடிக்கிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x