Published : 21 Feb 2019 08:39 AM
Last Updated : 21 Feb 2019 08:39 AM

அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு: பாமக இளைஞர் சங்க செயலாளர் ராஜினாமா

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் பாமக இளைஞர் சங்க செயலாளர் ராஜேஸ்வரி பிரியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இனி எந்தக் காலத்திலும் அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் அறிவித்திருந்தனர். அண்மைக்காலமாக அதிமுகவையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாமகவும் பாஜகவும் இணைந்துள்ளன. அதிமுக,பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது குறித்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்றசமூக ஊடகங்களில் விவாதங்கள் நடந்து வருகின்றன.

முடிவில் உறுதியில்லை

இந்நிலையில், பாமக இளைஞர் சங்க செயலாளர் ராஜேஸ்வரி பிரியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, “பாமக இளைஞர் சங்க செயலாளராக 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இருந்து வருகிறேன். திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று ராமதாஸ், அன்புமணி ஆகியோர் அறிவித்துவிட்டு புதிய மாற்றத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கினர். ஆனால், தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இல்லாமல் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான் இளைஞர்கள் அதிகஅளவில் பாமகவில் சேர்ந்தனர். ஆனால், அவர்களோ அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துவிட்டனர். இனிமேலும் கட்சியில் பணியாற்றுவது சரியாக இருக்காது என்றுமுடிவு செய்தேன். அதனால், பதவியை ராஜினாமா செய்கிறேன். கட்சியில் இருந்தும் விலகுகிறேன்” என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x