Published : 20 Feb 2019 09:32 PM
Last Updated : 20 Feb 2019 09:32 PM

தேமுதிகவுடன் கூட்டணியா?- ஸ்டாலின் பேட்டி

திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதிப் பங்கீட்டுக்குப் பின் பேட்டி அளித்த திமுக தலைவர் ஸ்டாலின் தேமுதிகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்குப் பதில் அளித்தார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் இன்று கூறுகையில், ''காங்கிரஸ் கட்சியின்  பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், வேணுகோபால், கே.ஆர்.ராமசாமி, துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர். நானும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கையொப்பமிட்டு ஒப்பந்தம் செய்துள்ளோம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஸ்டாலின் பதில் அளித்தார்.

என்னென்ன தொகுதிகள்?

எத்தனை தொகுதிகள் என்பது குறித்து தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து மற்ற கட்சிகளுடன் பேசிய பின்னர் அதுகுறித்து முடிவு செய்யப்படும். அந்தப் பணிகள் முடிந்த பின்னர் தொகுதிகள் குறித்து ஆய்வு செய்ய திமுக சார்பில் குழு ஆய்வு செய்கிறது.

அதே போன்று மற்ற கட்சி குழுக்களுடன் சேர்ந்து அதுகுறித்து முடிவு செய்யப்படும். ஆகவே ஓட்டலிலே ரகசியமாகக் கூடி முடிவு செய்யாமல் முறையாக பொது இடத்தில் அண்ணா அறிவாலயத்தில் வெளிப்படையாகக் கூடி அறிவித்துள்ளோம்.

மற்ற கட்சிகளுடன் எப்போது கூட்டணி குறித்துப் பேசுவீர்கள்?

நாளைமுதல் அதற்கான பகுதிகள் தொடங்கும்.

கூட்டணிக் கட்சிகள் யார் யார்?

ஏற்கெனவே எங்களுடன் இரண்டு ஆண்டுகள் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி குறித்துப் பேச உள்ளோம்.

தேமுதிகவுடன் உடன் இணைய வாய்ப்புள்ளதா?

அப்படி இருந்தால் உங்களை அழைத்துச் சொல்வோம்.

திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது?

மற்ற கட்சிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டவுடன் மீதமுள்ள தொகுதிகளில் போட்டியிடுவோம்.

தேமுதிகவுடன் கூட்டணி குறித்துப் பேசுகிறீர்களா?

அப்படி எதுவும் இல்லை.

கூட்டணி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மட்டும்தானா அடுத்தும் தொடருமா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

21 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் என்ன நிலை?

அந்தத் தொகுதிகள் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கட்டும். அதன் பின்னர் கலந்து பேசி அறிவிப்போம்.

தொகுதிப் பங்கீடு எப்போது முழுமை பெறும்?

தேதி அறிவிக்கப்பட்டவுடன் முடிவுக்கு வரும்.

தேர்தல் அறிக்கை எப்போது வரும்?

டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தயாராகிக் கொண்டிருக்கிறது. அது முடிந்தவுடன் வெளிவரும்.

உங்கள் பிறந்த நாளான மார்ச் 1 அன்று தேர்தல் அறிக்கை வெளிவருமா?

நான் என் பிறந்த நாளையே கொண்டாடக்கூடாது என்று கூறியுள்ளேன். தலைவர் மறைந்து ஓராண்டு நிறைவு பெறாத நிலையில் பிறந்த நாளைக் கொண்டாடக்கூடாது என கூறியுள்ளேன். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்.

அதிமுக கூட்டணியை மக்கள் நலக் கூட்டணி என்கிறார்களே?

அவர்கள் சொல்கிறார்கள். மக்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? பண நலக் கூட்டணி என்று மக்கள் சொல்கிறார்கள்.

வலுவான கூட்டணி அமைந்ததால் நீங்கள் காட்டமாக விமர்சிக்கிறீர்கள் என்கிறார்களே?

காட்டமாக நான் விமர்சிக்கவில்லை. அதிமுகவை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, அந்த ஆட்சியை பாஜகவை அதன் தலைவர்களை ஏற்கெனவே ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். அதை விட எனது விமர்சனம் குறைவுதான்.

பாமகவுடன் நீங்கள் ஏற்கெனவே கூட்டணி குறித்துப் பேசியதாக கூறுகிறார்களே?

அது யூகங்கள் அடிப்படையில் வரும் விமர்சனம். அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு ஸ்டாலின் பதிலளித்தார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x