Published : 20 Feb 2019 03:23 PM
Last Updated : 20 Feb 2019 03:23 PM

பயத்தின் காரணமாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது:ஸ்டாலின் விமர்சனம்

பயத்தின் காரணமாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) கொரட்டூரில் ஊராட்சி சபைக் கூட்டத்திலும், அதன் பின்னர் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

"பாமக - பாஜக கூட்டணியை அதிமுக அமைத்திருக்கிறது. பாஜகவுடன் சேரக்கூடாது என அழுத்தமாகச் சொன்னவர் ஜெயலலிதா. பாஜக தனியாக நின்றால் ஜெயிக்க முடியாது என்பது அதிமுகவுக்கு நன்றாகத் தெரியும். வாங்குகின்ற ஓட்டுகூட இவர்களோடு சேர்ந்தால் கிடைக்காது என்று நன்றாகத் தெரியும். தெரிந்திருந்தும் பயம் காரணமாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது. அதிமுகவினர் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வழக்கு இருக்கின்றது. குட்கா வழக்கு, பொதுப்பணித்துறையில் முதல்வர் பழனிசாமி மீது ஊழல் புகார், கொலை வழக்கும் அவர் மீது விரைவில் பதிவாகப் போகின்றது.

திராவிட இயக்கங்களுடன் கூட்டணி இல்லை என சொன்ன பாமக, ஏதோ ஒரு ஆசையின் காரணமாக அதிமுகவுடன் சேர்ந்த கூட்டணி என்ற நாடகம்.

எது எப்படியிருந்தலும், மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். திமுகவைப் பொறுத்தவரைக்கும் மக்களோடு கூட்டணி வைத்து இன்றைக்கு தேர்தல் களத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறப்போகின்றோம்.

விவசாயிகளுக்கு மூன்று தவணையாக 2,000 என்று 6,000 ரூபாய் கொடுக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதுவும் ஒரு திருட்டுத் தனம். மக்களை ஏமாற்றுவதற்காகச் சொல்லப்படுகிற பொய்.

கோடநாடு விவகாரத்தில் 5 கொலை நடைபெற்றிருக்கிறது. ஆனால், எதுவும் தெரியாதது மாதிரி முதல்வர் பழனிசாமி இருக்கிறார். கடப்பாரையை முழுங்கி விட்டு கம்மென்று இருக்கிறார் முதல்வர் பழனிசாமி. திமுக ஆதரவுடன் மத்தியில் ஆட்சி உருவாகப் போகிறது".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x