Published : 20 Feb 2019 02:23 PM
Last Updated : 20 Feb 2019 02:23 PM

முரண்டு பிடிக்கும் தேமுதிக: சிக்கலில் கூட்டணிப் பேச்சுவார்த்தை

அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட இறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் 2019-க்கான ஆயத்தப் பணிகள் சூடுபிடித்து வருகின்றன. தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகளான திமுக, அதிமுக இடையே கூட்டணி அமைப்பதில் பெரும் போட்டி நிலவி வருகிறது. ஏற்கெனவே திமுகவில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக என கட்சிகள் இருந்தாலும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட மற்ற பணிகளில் பின்தங்கியே உள்ளனர். மாற்று வார்த்தையில் சொன்னால் வழக்கம்போல் அதிமுக முந்திக்கொண்டுள்ளது.

அதிமுக கூட்டணி எப்படி இருக்கும் என்கிற சந்தேகத்தில் இருந்தவர்களுக்கும் பாஜக -அதிமுக கூட்டணி வரும் என ஸ்டாலின் போன்றோர் கூறிவந்த நிலையில் பாஜக -அதிமுக கூட்டணி உறுதியானது. அதிமுகவையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வந்த பாமக திடீரென அதிமுக கூட்டணியில் இணைந்து பாஜகவை விட கூடுதலாக 2 இடங்களைப் பெற்றது.

பாஜகவால் 5 இடங்களை மட்டுமே  பெற முடிந்தது. இதனிடையே அதிமுக கூட்டணியில் தேமுதிகவும் இணையும் என சுதீஷே கூறிய நிலையில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.

இதற்கு முக்கியக் காரணம் விஜயகாந்தின் பிடிவாதம்தான் காரணம் என்று தேமுதிக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் நாங்கள் இல்லை, அதிமுக மேடையில் ஏறமாட்டோம், அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்ய மாட்டோம், பாமகவை விட அதிக இடங்கள் வேண்டும் என விஜயகாந்த் தரப்பில் நிபந்தனைகள் விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவை எல்லாவற்றையும் கூட்டணியில் தேமுதிக வருவதற்காக அதிமுக தலைமை ஏற்றுக்கொண்டாலும் அடுத்த நிபந்தனைதான் அதிமுக தலைமைக்குச் சிக்கலாக உள்ளது.

பாமக, பாஜகவை விட தேதிமுக கேட்ட தொகுதிகளைக் கொடுத்தாலும் அதிமுகவின் பிரதான நிபந்தனை 21 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் சீட்டு இல்லை, அதற்கு அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவேண்டும் என்பதே. அதை இரு கட்சிகளும் ஏற்றுக்கொண்டாலும் தேமுதிக ஏற்றுக்கொள்ளவில்லை.

21 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்வது குறித்து தேமுதிக ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையும் அதிமுக அமைச்சர்களுடன் நடத்துவதை தேமுதிக விரும்பவில்லை. கூட்டணி இறுதிப்படுத்தப்பட்டால் அதன் இறுதியில் கையொப்பம் இடும் பணியில் மட்டுமே அதிமுக தலைமையுடனான கூட்டு அறிவிப்பு இருக்கும் என்று கூறுகின்றனர்.

தேமுதிகவின் இந்த இழுபறியால் விஜயகாந்தை சமாதானப்படுத்தமுடியாத பியூஷ் கோயல் வீட்டுக்கு வெளியே சுதீஷை தனியாக அழைத்துப் பேசும் அளவுக்குச் சென்றாலும் கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு வரவில்லை.

21 சட்டப்பேரவை தொகுதிகளில் தேமுதிக அதிமுகவை ஆதரிக்கும். எதிர்த்து வேட்பாளரை நிறுத்தாது என உறுதியளிக்கும் பட்சத்தில் கூட்டணி இறுதிப்படுத்தப்படும். தேமுதிகவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x