Published : 20 Feb 2019 10:06 AM
Last Updated : 20 Feb 2019 10:06 AM

காலம் காலமாக தீர்க்கப்படாத மதுரையின் பிரச்சினைகள்;  மாநகராட்சி புதிய ஆணையருக்கு காத்திருக்கும் சவால்கள் 

மதுரை மாநகராட்சி ஆணையாளராக விசாகன் நாளை பொறுப்பேற்க உள்ளார். இவருக்கு மதுரையில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகள் பெரும் சவாலாகக் காத்திருக்கின்றன.

மதுரை மாநகராட்சி ஆணையாளராக அனீஷ் சேகர் 2017-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி பொறுப்பேற்றார். இவர் மருத்துவர் என்பதால் மதுரையின் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். தினமும் காலை அதிகாரிகளுடன் வார்டு விசிட் செய்தார். இதனால், வார்டுகளில் நிலவிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார்.

பாதாளச் சாக்கடை, குடிநீர் இணைப்பு, வரி நிர்ணயத்துக்கு மாநகராட்சி கீழ்நிலை அதிகாரிகள் பணம் கேட்டு மக்களை அலைக்கழித்தனர். இதனால் அனீஷ் சேகர் மண்டலம் வாரியாக வாரம்தோறும் நேரில் சென்று சிறப்பு மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தி, செலவின்றி ஆணைகளை வழங்கினார்.

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சர்க்கரை நோய் சிகிச்சைப் பிரிவைத் தொடங்கி, அதற்கான மருந்து, மாத்திரைகளை வாங்கி வைத்தார். அதேபோல், மாநகராட்சியில் முதல் முறையாக தனியார் மருத்துவமனைப் பங்களிப்புடன் பல் மருத்துவ சிகிச்சைப் பிரிவையும், மன நல ஆலோசனைப் பிரிவையும் தொடங்கினார். மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்காக இலவச ‘நீட்’ தேர்வு பயிற்சி அளிக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். வருகைப் பதிவுகளை துல்லியமாக அறிய ‘பயோ மெட்ரிக்’ வருகைப் பதிவேட்டை அறிமுகம் செய்தார்.

அனீஷ் சேகர் வருவதற்கு முன் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதற்கான காரணங்களைக் கண்டறிந்த ஆணையர், உடனடியாக ஒப்பந்தப்புள்ளி கோரி, தற்போது அத்திட்டம் தொடங்கக் காரணமாக இருந்தார்.

வைகை ஆற்றில் மெகா தூய்மைப் பணியை நடத்தி, நீர்நிலைகளைத் தூய்மையாக வைக்க வேண்டிய அவசியத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்தினார். மாநகராட்சி அனுமதி வழங்கிய கட்டிட வரைபடத்தை மீறி கூடுதலாகக் கட்டிய கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைத்து, அதற்குப் புதிய வரியை நிர்ணயம் செய்தார்.

மேலும், அரசியல் பின்னணியுடன் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் ஏமாற்றிய கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, மாநகராட்சிக்கு வாடகையை செலுத்த நடவடிக்கை எடுத்தார்.

பூங்கா, இரு சக்கர வாகனக் காப்பக உரிமத்தை பல கோடி ரூபாய்க்கு ஏலம் விட்டு மாநகராட்சியின் வருவாயை உயர்த்தினார்.

இந்நிலையில் அவர் தமிழ்நாடு தொழில் துறை வளர்ச்சிக் கழகத்தின் அதிகாரியாக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அனீஸ் சேகருக்குப் பதிலாக மாநகராட்சி ஆணையாளராக விசாகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை பொறுப்பேற்க உள்ளார். இவருக்கு காலம் காலமாக தீர்க்கப்படாத மதுரையின் பிரச்சினைகள் சவாலாகக் காத்திருக்கின்றன.

இதுவரை பொறுப்பு வகித்த மதுரை மாநகராட்சி ஆணையாளர்கள் அனைவருமே பதவியேற்றதும், மதுரையின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பேன், வைகை ஆற்றை தூய்மைப்படுத்துவேன், சாலை வசதியை மேம்படுத்துவேன் என்று உறுதிமொழி அளிப்பார்கள். ஆனால், அவர்கள் காலத்திலும் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் கிடப்பில் போடப்பட்டுவிடும்.

மதுரை வைகை ஆற்றில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மாநகராட்சி, மதுரை அரசு மருத்துவமனை கழிவு நீர் கலக்கிறது. இத்துடன் ரசாயனக் கழிவுகளும் நிறைந்துள்ளன. இதைத் தடுக்க அனீஷ் சேகர் மேற்கொண்ட முயற்சி கடைசி வரை வெற்றி பெறவில்லை.

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புறநகரில் உள்ள 28 வார்டுகளிலும் தற்போது வரை மாநகராட்சியால் குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. ஆனால், குடிநீர் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. பாதாளச் சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

மதுரை நகரின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ரூ.1020 கோடியில் பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இத்திட்டம் தற்போது வரை அறிவிப்போடு நிற்கிறது.

வெளிநாடுகள், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் மதுரைக்கு வந்துசெல்கின்றனர். ஆனால், அவர்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை.

குறிப்பாக மாநகர சாலைகள் குண்டும், குழியுமாகவும், குறுகலாகவும் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மதுரையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மாநகராட்சி எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.

சில நல்ல பல திட்டங்களை அனீஷ் சேகர் கொண்டு வந்தார். ஆனால், அவருக்கு மதுரையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களால் மிகப்பெரிய அரசியல் நெருக்கடி இருந்தது. அவரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

புதிய மாநகராட்சி ஆணையாளர் விசாகனுக்கு உள்ளூர் அரசியல் புள்ளிகளை அனுசரித்து செல்வது முதல் மாநகராட்சியின் நீண்ட காலப் பிரச்சினைகளை சமாளிப்பது வரை மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. இவற்றை சமாளித்து மதுரை மாநகரின் வளர்ச்சிக்கும், மக்களின் அடிப்படை தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x