Published : 19 Feb 2019 05:07 PM
Last Updated : 19 Feb 2019 05:07 PM

தமிழக அரசு அறிவித்த ரூ.2000 பெறத் தகுதியானவர்கள் யார்?- மக்கள் குழப்பம்; அதிகாரிகள் விளக்கம்

தமிழக அரசு அறிவித்த ரூ.2000 பெறத் தகுதியானவர்கள் யார் என்பது குறித்து குழப்பம் நீடிக்கும் நிலையில் இது தொடர்பாக பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் தமிழக அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில், தமிழகம் முழுவதும் 60 லட்சம் ஏழை தொழிலாளர்கள், விவசாயிகள் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி உதவியாக தமிழக அரசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகை இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த திட்டம் யார் யாருக்கெல்லாம் பொருந்தும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இதனால், நேற்று (திங்கள்கிழமை) மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

குறிப்பாக கொடிமங்கலம், டி.கிருஷ்ணாபுரம், காந்திகிராமம், காஞ்சராம்பேட்டை, துல்லுக்குட்டி நாயக்கனூர் போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர்

அவர்களில் பெரும்பாலானோரும் தங்கள் பெயர் விடுபட்டுவிடுமோ என்ற அச்சத்தை தெரிவித்தனர். இந்த திட்டத்தின் சலுகையைப் பெற யார் தகுதியானவர்கள் என்பதில் தெளிவு இல்லை எனவும் கூறினர்.

ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்த கொடிமங்கலம் பகுதியைச் சேர்ந்த எஸ்.தனபாக்கியம் கூறும்போது, "எங்கள் கிராமத்தில் ரூ.2000 பெறத் தகுதியானவர்கள் பட்டியலை கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சம்பளம் வழங்குபவர்களே சேகரிக்கின்றனர். ஆனால், நாங்கள் ஏழைகள் என்று சொன்னாலும்கூட எங்கள் பெயர் பட்டியலில் சேர்க்க மறுக்கின்றனர். எங்கள் குடும்பம் அந்தோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் மாதாமாதம் 35 கிலோ அரிசி வாங்கிக் கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் எங்களுக்கு இதன் மூலம் பயனில்லை என்கின்றனர்" என வருத்தம் தெரிவித்தார்.

காந்தி கிராமத்தைச் சேர்ந்த அ.பாண்டி, "எங்கள் கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர் விவசாயக் கூலிகள்தான். ஆனால் மிகக் குறைந்த பேரே இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். பயனாளிகள் யார் என்பதைக் கணக்கெடுக்க எங்கள் கிராமத்திற்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை" என அங்கலாய்ப்பைத் தெரிவித்தார்.

டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பொண்ணு கூறும்போது, ''தகுதியற்றவர்களை எல்லாம் பயனாளியாக இணைத்துவிட்டு என்னைப் போன்றோரை எல்லாம் சேர்க்கவே இல்லை. இலவச ஆடு வழங்கும் திட்டத்திலும் இதுவே நடந்தது'' எனக் கூறினார்.

மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் கூறும்போது, ''இந்தத் திட்டத்தில் பயனாளிகள் யார் என்பதை தீர்மானிப்பதில் மிகப்பெரிய குழப்பம் நீடிக்கிறது. எங்களிடம் தற்போது இருக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் பட்டியல் பல ஆண்டுகளுக்கு முன்னர் அவசர கதியில் தயாரிக்கப்பட்டது. அதில் பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. அதைச் சரிசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களில் இந்தச் சலுகையைப் பெற தகுதியானவர்களை 2013-14 காலகட்டத்தில், வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழைகள் மற்றும் மிகவும் ஏழைகளை மக்கள் பங்கேற்புடன் கண்டறிந்து தயாரிக்கும் பட்டியல் Participatory Identification of Poor (PIP) அடிப்படையில் தேர்வு செய்து வருகிறோம். அதுதவிர அந்தோதயா அன்ன யோஜனா திட்டத்தில் உள்ளவர்களையும் இணைத்துள்ளோம். ஆனால், அவர்கள் பிப் (PIP) பட்டியலில் இருக்கக்கூடாது.

நகர்ப்புறங்களில் 2003- 2004 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் பட்டியல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். நகர்ப்புறங்களில் அந்தோதயா அன்ன யோஜனாவின் திட்டத்தின் பயனாளர்களும் சேர்க்கப்படுகின்றனர்.

இருந்தாலும் அரசாங்கம் தகுதி வாய்ந்த நபர்கள் யாரும் விடபட்டுவிடக் கூடாது என நினைப்பதால் பட்டியலை இறுதி செய்யும் பணி இன்னமும் நீண்டு கொண்டிருக்கிறது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x