Published : 18 Feb 2019 04:37 PM
Last Updated : 18 Feb 2019 04:37 PM

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடை; மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த சம்மட்டி அடி: தினகரன்

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்குத் தடை விதித்ததன் மூலம் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது என, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்குத் தடை விதித்ததன் மூலம் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது.

தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய அப்பாவிகள் 13 பேரை காக்கை, குருவிகளைப் போல சுட்டுக் கொன்றார்கள். மத்திய அரசின் கைப்பாவையாக மாறி, ஈவு இரக்கமற்ற இந்த கொலை பாதகத்தைச் செய்த தமிழக அரசு அதனை  மறைக்க, ஆலையை மூடுவதாக நாடகமாடியது. 'நான் அடிப்பது போல அடிக்கிறேன்; நீ அழுவதைப் போல அழு' என்று ஸ்டெர்லைட் நிர்வாகத்துடன் மறைமுக கூட்டணி அமைத்துக் கொண்டு ஆட்சியாளர்கள் செயல்பட்டனர்.

ஆனால், உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, தூத்துக்குடியில் போராடிய மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றியாக அமைந்திருக்கிறது. மேலும், 'ஆலையைத் திறக்கலாம்  என்று  உத்தரவிட தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை' எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் ஆலையை மீண்டும் திறப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகப் போவதாக அதனை நடத்தும் வேதாந்தா நிறுவனம் அறிவித்திருக்கிறது. 

அதற்கு முன்பாகவே தமிழக அமைச்சரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அரசின் கொள்கை முடிவாக எடுத்து அதனை நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டால் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். மக்களின் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் ஆட்சியாளர்கள் இதைத்தான் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் எந்தத் தார்மீக நெறிகளும் இல்லாமல் 13 பேரை தலையிலும், நெஞ்சிலும் குறி வைத்துச் சுடுவதற்கு உத்தரவிட்ட பாவத்திற்குக் கொஞ்சமாவது பிராயச்சித்தம் தேடிக்கொள்ளலாம்.

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது அமமுக நேரடியாக களத்திற்குச் சென்று அவர்களோடு கரம் கோர்த்து நின்றதைப் போல, அந்த ஆலையை நிரந்தரமாக மூடும் வரை தூத்துக்குடி மக்களோடு நின்று, அவர்களின் உணர்வுகளுக்காக எப்போதும் குரல்  கொடுக்கும்" என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x