Published : 17 Feb 2019 04:53 PM
Last Updated : 17 Feb 2019 04:53 PM

நான் தான் சிவாஜியின் வாரிசு: சிவகுமார்

கோவையில் நடைபெறும் ‘யாதும் தமிழே’ நிகழ்ச்சியில் நரசிம்மன் எழுதி, இந்து தமிழ் திசையில் வெளியான ‘சி(ரி)த்ராலயா’ தொடர் புத்தகமாக வெளிடப்பட்டது. அதை நடிகர் சிவகுமார் வெளியிட, சிவாஜி கணேசனின் புதல்வர் ராம்குமார் அதைப் பெற்றுக் கொண்டார்.

புத்தகத்தை வெளிட்டு சிவகுமார் பேசியதாவது:

இந்து தமிழ் திசை ஆசிரியர் குழுவிற்கும் விழாவை ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கும், எனது ஆசான் நடிகர் திலகத்தின் வாரிசுகளுக்கும் இந்து தமிழ் வாசகர்களுக்கும் வணக்கம்.

காதலிக்க நேரமில்லை படத்திற்கு புதுமுகம் தேவை என்று கேட்டபோது இந்தியாவிலேயே சிறந்த ஓவியரை வைத்து என்னை ஓவியம் வரைந்து அனுப்பினேன். ஆனால் மலேசியாவில் பிறந்த ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இயக்குநர் ஸ்ரீதர் படத்தில் நடிப்பேனோ என நினைத்த நேரத்தில் ’யாரோ எழுதிய கவிதை’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

திருவிளையாடல் படத்தில் மன்னனுக்கு சந்தேகம் வரும், கவிதைக்கு ஆயிரம் பொன் என்பார்கள். சிவாஜி அவருக்கு கவிதை எழுதி கொடுப்பார். பாட்டை ப் பாடி பரிசு வாங்கும்போது அதில் குற்றம் இருக்கு என்பார் நக்கீரன். அவமானப்பட்ட தருமி உன் பாடலை குற்றம் என்று சொல்லிட்டாங்க சபையில் என்பார். சிங்கம் கோபமாக புறப்பட்டு சபைக்கு செல்லும். அங்கு அனல் பறக்கும் வசனம். பின்னி எடுப்பார்கள். தமிழ் சினிமாவில் இனி யாரும் இப்படி நடிக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாது.

இந்த மனிதர் திருச்சி சங்கிலியாண்டவர்புரத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். அப்பா சுதந்திரப் போராட்டத் தியாகி. அடிக்கடி ஜெயிலுக்கு போய் விடுவார். மாடு வைத்து பால்கறந்து வீடுவீடாக ஊற்றித்தான் தாயார் ராஜாமணி பிள்ளைகளை வளர்த்தார். அங்கு வந்த நாடக குழுவில் அனாதை என பொய் சொல்லி சேர்ந்தார் சிவாஜி. 7 வயதில் போனவர் நான்கு ஆண்டு கழித்து 11 வயதில் அம்மாவை பார்க்க வருகிறார்.

திருச்சி போகையில் காசில்லை, பக்கத்தில் போத்தனூரில் நாடகம் போட்டு அங்குச் சென்று அம்மாவை பார்க்கிறார். தம்பி எங்கே என்று கேட்கிறார். தம்பி செத்துபோனதாக சொல்கிறார். தொட்டிலில் யார் என்று கேட்கிறார், புதிதாக பிறந்த தம்பி என்கிறார் அன்னை. தம்பி இறந்ததும் தெரியாது, புதிய தம்பி பிறந்ததும் தெரியாது. அதன்பின்னர் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்கிற நாடகத்தில் முதலில் எம்ஜிஆர் நடிக்கிறார்.

பட வாய்ப்பு வந்ததால் எம்ஜிஆர் சென்று விடுகிறார். அதன் பின்னர் சிவாஜி அந்த நாடகத்தில் நடிக்கிறார். பெரியார் நாடகத்தைப் பார்த்து பிரமித்து சிவாஜி என்று பட்டம் கொடுக்கிறார்.

அதன்பின்னர் பராசக்தி படம் நடிக்க வந்த வாய்ப்பில் மகிழ, அவர் ஒதுக்கப்படுகிறார். அதன்பின்னர் அவருக்கு பணம் கொடுத்து தினம் செலவு செய்துவிட்டு வா என அனுப்பி பின்னர் உடம்பு தேறியதும் பராசக்தியில் சான்ஸ் கொடுக்க அவர் நடித்த படம் பிரமாதமாக வநதது.

அந்தக்காலத்தில் சினிமா நடிகர்களுக்கு பெண் தரமாட்டார்கள் என்பதற்காக சொந்தத்தில் பெண்ணை மணந்தார். எம்ஜிஆர், அண்ணா, கண்ணதாசன் என பகுத்தறிவு பட்டாளம் ஆனால் பாருங்கள் சாமி மலையில் கோவிலில் கல்யாணம் செய்து வைத்தார்கள். கல்யாணத்தில் மொத்த செலவே 500 ரூபாய்தான்.

மும்பையில் நாடகம் போடுகிறார். இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்கள் பார்த்து பிரமித்து போகிறார்கள். அன்று லதா மங்கேஷ்கர் நீங்கள் என் சகோதரர் என்று நெகிழ்ந்துபோய் சொன்னார்.

சிவாஜி கணேசன் அமெரிக்காவில் வீரபாண்டிய கட்டபொம்மன் பட வசனம் பேசியபோது அவரது கம்பீரத்தைப்பார்த்த ஒரு வெள்ளைக்காரர் மேடைக்குச் சென்று சிவாஜி எங்கே என தேடி சிவாஜியைப்பார்த்ததும் இவரா சிவாஜி என கைத்தட்டி பாராட்ட சிவாஜி நெகிழ்ந்து போய்விட்டார்.

அந்த மாமனிதனை வணங்காமுடி படத்தைப் பார்த்துவிட்டு சிவாஜியைப் பார்த்தால் போதும் என்று சென்னை போகிறேன். அதற்கு முன் அவர் கோவைக்கு வருவதாக அறிந்து சைக்கிளை எடுத்து போகிறேன் ஆனால் அவர் வரவில்லை. பின்னர் ஒரு கல்யாணத்துக்கு வருகிறார் என படம் வரைந்து எடுத்துச் சென்றேன் ஆனால் அவரை பார்க்க முடியவில்லை.

அதன்பின்னர் சென்னைக்கு அவரைப் பார்க்கச் சென்றேன் படத்தைக் காட்டினேன் கையெழுத்து போட்டுக்கொடுத்தேன். அதன் பின்னர் அவருடன் 16 படம் நடித்துவிட்டேன். நான் தான் உண்மையான வாரிசு ராம்குமார் போன்றோர் ரத்த வாரிசுகள் நாந்தான் உண்மையான வாரிசு.

அதன்பின்னர் அம்மா உடல்நிலை சரியில்லை என்று என்னிடம் சொல்லி அம்மா படத்தை வரையச்சொன்னார். வரைந்துகொடுத்தேன். கையில் நல்ல வித்தை வச்சிருக்கேடா பிழைச்சுக்குவேடா என்றார்.

புதுக்கோட்டை மகாராஜா பெண்ணை கட்டிக்கொள்கிறாயா என்று கேட்டார். எதற்கு இன்னொரு டவாலியாக போகவா என்றேன். அதெல்லாம் இல்லை என்றவர் திருமணத்துக்கு என்னை கட்டாயம் அழைக்கவேண்டும் என்று சொல்லி திருமணத்துக்கு வந்தார்.

எம்ஜிஆர் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர் சிவாஜி, அவர் மீதுள்ள பற்றால் ஜானகி கட்சியில் அவருடன் இணைந்து நின்றார்; தோற்றுப்போனார். காரணம் உடல்நலம் சரியில்லாமல் இருந்த எம்ஜிஆரைப் பார்க்கப் போனபோது ஜானகி தனியா இருக்கிறார் பார்த்துக்கொள் என்று எம்ஜிஆர் சொன்ன ஒரு வார்த்தை, செஞ்சோற்றுக்கடன், அதுதான் சிவாஜி. அவர் தோற்றுப்போனார் .போகட்டும் எம்ஜிஆர் அரசியலில் சிங்கம், சிவாஜி நடிப்பில் சிங்கம்.

அதேபோன்று கருணாநிதியும், சிவாஜியும் இல்லாவிட்டால் இன்று தமிழில் வார்த்தைகள் இருக்காது அந்த அளவுக்கு வசனம் எழுதியவர் கருணாநிதி. சிவாஜியிடம் கலைஞர் எழுதிய வசனத்தில் நீங்கள் பேசிய சிறப்பான வசனம் எது என்று கேட்டேன். உனக்கு தெரியாதாப்பா என்னிடம் கேட்கிறாய் என்றார். அனார்கலி பட வசனத்தை பேசிக்காட்டினேன். தமிழ் என்கிற மொழி இருக்கும் வரையில், தமிழ் இருக்கும் வரையில் சிவாஜி என்கிற உன்னத கலைஞன் இருப்பார்.

இவ்வாறு சிவக்குமார் பேசினார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x