Published : 09 Feb 2019 03:24 PM
Last Updated : 09 Feb 2019 03:24 PM

எங்களுடன் அதிமுக கூட்டணி அமைக்க விரும்பவில்லை என சொல்வதற்கு திருமாவளவன் யார்?- தமிழிசை கேள்வி

எங்களுடன் அதிமுக கூட்டணி அமைக்க விரும்பவில்லை என சொல்வதற்கு திருமாவளவன் யார் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட்டதாக செய்தி வெளியாகியுள்ளதே?

மோடியின் புகழைக் கெடுக்கும் நோக்கத்திலும், ஊழல் இல்லாமல் ஒரு ஆட்சி நிறைவடைந்து அதே ஆட்சி தொடரப் போகிறது என்ற ஆதங்கத்தினாலும், தற்போது காங்கிரஸ் ரஃபேல் ஊழல் விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறது. ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடைபெறவில்லை என உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது. பிரான்ஸ் அதிகாரிகள், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் தெளிவுபடுத்தியுள்ளார்கள். உண்மை வெளியில் வரும். அது பாஜகவுக்கு சாதகமாக இருக்கும்.

மம்தா பானர்ஜி மோடியை 'ஊழல்களின் மாஸ்டர்' என விமர்சித்துள்ளாரே?

20 லட்சம் சாமானிய ஏழைகளின் பணத்தைச் சுருட்டிய கட்சியைச் சேர்ந்தவர் மம்தா பானர்ஜி. இந்த ஆட்சியில் இ-டெண்டர் மூலம் எல்லாம் வெளிப்படையாக நடக்கிறது. மம்தாவிடமிருந்து மோடிக்குச் சான்றிதழ் தேவையில்லை. மக்களின் சான்றிதழ் தான் வேண்டும். ஊழலற்ற தன்மையின் இனிப்பை மக்கள் சுவைக்கிறார்கள். ஊழலை வைத்தே அரசியல் நடத்துபவர்களுக்கு இது கசப்பாகத்தான் இருக்கும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மோடியை விமர்சித்துள்ளாரே?

கே.எஸ்.அழகிரி தலைவரானதில் இருந்து காங்கிரஸை விட பாஜக குறித்தும், ராகுலை விட மோடியை குறித்து அதிகம் கவலைப்படுகிறார். காங்கிரஸில் எத்தனை கோஷ்டிகள் உள்ளன என்பது தெரியும். அவர் காங்கிரஸின் வேலையைக் கவனித்தால் நன்றாக இருக்கும்.

பாஜகவுடன் தான் சேரமாட்டேன் என்பதுபோல் கமல் பேசியுள்ளாரே?

இப்போது கூட்டணி குறித்துப் பேசப்படுவது எல்லாமே யூகங்கள் தான். இன்னும் எந்தக் கூட்டணியும் முழுமையடையவில்லை. திமுக, காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் பலமான கூட்டணி அமைக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க விரும்பாது என, திருமாவளவன் கூறியுள்ளாரே?

எங்களுடன் அதிமுக கூட்டணி அமைக்க விரும்பவில்லை என சொல்வதற்கு திருமாவளவன் யார்? காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் பாஜகவையே நினைத்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் பலம் பொருந்திய கட்சியாக மாறி வருகிறோம்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x