Published : 09 Feb 2019 02:37 PM
Last Updated : 09 Feb 2019 02:37 PM

ஜெர்மனியில் நடைபெறும் சிறப்பு கால்பந்துப் பயிற்சிக்கு நாமக்கல் மாணவிகள் தேர்வு

கதே சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் வென்ற நாமக்கல் பள்ளி மாணவிகள் ஜெர்மனியில் நடைபெறும் சிறப்பு கால்பந்துப் பயிற்சிக்குத் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கான பயணச் செலவுகள் முழுவதையும் சென்னை கதே இன்ஸ்டிடியூட் ஏற்கிறது.

பல ஆண்டுகளாக நாமக்கல் என்றதும் நம் நினைவுக்கு வருவது மாநில அளவில் நடைபெறும் அரசு பொதுத் தேர்வுகளில் அங்குள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் முதலிடம் பிடிப்பதுதான். தற்போது கால்பந்து விளையாட்டுக் குழுவைச் சேர்ந்த மாணவிகள், மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் வென்று நாமக்கல்லுக்கு பெருமை சேர்த்துள்ளதையும் அதனோடு சேர்த்துக்கொள்ளலாம்.

சென்னையில் நடைபெற்ற கதே சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் சென்னைக் குழுவை வெற்றி கொண்டுள்ளனர்.

இதுகுறித்து சென்னை கதே இன்ஸ்டிடியூட்டின் துணை இயக்குநர் பிரபாகர் நாராயண் தெரிவித்தாவது:

''இப்போட்டியில் மாநில அளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள் என அதிக அளவில் பங்கேற்றனர். இதில் அதிகப்பட்சமாக ஆண்கள் பிரிவில் மட்டும் 64 பள்ளிகளின் குழுக்கள் பங்கேற்றன. இதில் 32 பெண்கள் குழுவினரும் பங்கேற்றனர். இறுதிச் சுற்றான 4-வது சுற்றின்போது நாமக்கல் அரசுப் பள்ளி மாணவிகள் கோப்பையை வென்றனர்.

இதன்மூலம், பெர்லின் நகரத்தில் நடைபெறும் சிறப்பு கால்பந்து முகாம் பயிற்சிக்கு வெற்றிபெற்ற குழுவின் 14 மாணவிகளும் உடன் பயிற்சியாளரும் ஜெர்மனி செல்கிறார்கள்.

தேர்வாகியுள்ளவர்கள் அனைவருமே பொருளதார ரீதியாக சமுகத்தில் மிகவும் பின்தங்கிய மாணவிகள். எனவே அவர்களை ஜெர்மனிக்கு அழைத்துச் சென்று அவர்களது ஆர்வத்தை மேலும் வளர்க்கும் விதமாக சர்வதேச தரத்திலான சிறப்பு கால்பந்துப் பயிற்சியை அவர்களுக்கு வழங்குவதென முடிவுசெய்தோம். இம்முகாம் 10 நாட்கள் நடைபெறும். இதற்கான செலவுகளை சென்னை கதே இன்ஸ்டிடியூட் ஏற்றுள்ளது''.

இவ்வாறு கதே இன்ஸ்டிடியூட் துணை இயக்குநர் தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட கால்பந்துப் பயிற்சியாளர் எஸ்.கோகிலா தெரிவிக்கையில், ''இம்மாணவிகளுக்கு 4 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறேன். எங்கள் குழுவில் உள்ள இருவர் 18 வயதுக்கும் குறைவான இந்தியக் குழுவின் பிரதநிதிகளாக விளங்குகிறார்கள்.இப்பயிற்சி முகாம் மூலம் அவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது'' என்றார்.

போட்டியில் தேர்வாகிய மாணவிகள் குழுவைச் சேர்ந்த வி.பூஜா கூறுகையில், ''நான் முதன்முதலாக விமானத்தில் பறக்கப் போகிறேன். அதுவும் வெளிநாட்டிற்கு'' என்றார் உற்சாகம் பொங்க.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x