Published : 09 Feb 2019 01:23 PM
Last Updated : 09 Feb 2019 01:23 PM

பாஜகவின் மனம் கோணாதபடி அதிமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறது; வேல்முருகன் விமர்சனம்

பாஜகவின் மனம் கோணாதபடி அதிமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தை, தமிழினத்தைக் கருவறுக்கும் நோக்கில் இயங்குவன பாஜகவும் அதன் டெல்லி மத்திய அரசும். சட்டப்பேரவை பெரும்பான்மை இல்லாத எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசை, அரசமைப்புச் சட்டம் மற்றும் தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராக, அறம் பிறழ்ந்து நேர்மையற்ற முறையில் நீடிக்கச் செய்திருக்கிறது. இதன் மூலம் தனது பாசிச, பிற்போக்கு நடவடிக்கைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், தமிழக ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும்கூட தன் கொடுங்கரத்தை நுழைத்துள்ளது மத்திய பாஜக அரசு. இது, இந்த பட்ஜெட்டை பாஜக ஆதரிப்பதிலிருந்தே தெளிவாகிறது.

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த இந்த நிதிநிலை அறிக்கையில், இந்த ஆண்டின் நிலுவைக் கடன் ரூ.3.97 லட்சம் கோடி. சென்ற ஆண்டு இருந்த 3.56 லட்சம் கோடியுடன் 41 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அதிகரித்துள்ளது. கடனில் காலத்தை ஓட்டும் ஓர் அரசு, மக்களுக்கு நன்மை என்ன செய்ய முடியும் என்பதுதான் கேள்வி!

2018-19 ஆம் ஆண்டுக்கான திருத்த மதிப்பீட்டில் தமிழகத்தின் மொத்த வருவாய் ஒரு லட்சத்து 80,618.71 கோடி ரூபாய்; செலவினங்கள்ஒரு லட்சத்து 99,937.33 கோடி ரூபாய்; பற்றாக்குறை ரூ.19,319.02கோடி. 2019-20 ஆம் ஆண்டில், மாநில மொத்த வருவாய் ரூ.ஒரு லட்சத்து 97,721.17 கோடியாக இருக்கும்; செலவினம் 2 லட்சத்து 12,035.93 கோடி ரூபாய்; பற்றாக்குறை ரூ.14,314.76 கோடியாக இருக்கும். இதுதான் இந்த நிதிநிலை அறிக்கையின் ஒட்டுமொத்த சாரம்.

இந்தக் கடனும் பற்றக்குறையும் ஏற்பட்டதெப்படி? மத்திய அரசின் உதய் திட்டத்தால் 22,815 கோடி கடன்; 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரை, மத்திய அரசின் குறைவான நிதிப்பகிர்வு, வரி வருவாயில் ஏற்பட்ட இழப்பு, மாநிலங்களுக்கான வரிவிதிப்பு அதிகாரம் குறைப்பு போன்றவற்றாலேயே இந்த நிதிப் பற்றாக்குறையும் கடனும். இது பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டியாவது விவசாயப் பயிர் கடன் தள்ளுபடி, கரும்பு, நெல் கொள்முதல் விலை உயர்வு, அரசு ஊழியர்,ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பலன், வயதானவர்கள், மாணவர்களுக்கு குறைந்தபட்ச நிதியுதவி என்று எதிர்பார்த்ததில் மண் தான் விழுந்திருக்கிறது.

'கஜா' புயல் நிவாரண நிதியாக ரூ.15,000 கோடி கோரியதில் மத்திய அரசு அறிவித்தது வெறும் 1,100 கோடி. இதனை இந்த பட்ஜெட் தட்டிக்கேட்கவுமில்லை, குற்றம்சாட்டவுமில்லை. அடிப்படையான பள்ளிக் கல்வித்துறைக்கு மக்கள் பெருக்கத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை. உயர் கல்வித்துறைக்கு சென்ற ஆண்டைவிட சற்று கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பினும் இது போதவே போதாது. அதேபோல் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி இல்லாமல் பொதுவான திட்ட ஒதுக்கீட்டை சற்றே கூட்டியிருப்பதால் எந்த பலனும் விளையாது.

வேலைவாய்ப்புக்கான எந்தத் திட்டங்கள் பற்றியும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படாததுதான் உள்ளதிலேயே பெருத்த ஏமாற்றம். ஒரு கோடிக்கும் மேல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பவர்கள் மற்றும் 60 லட்சம் பொறியியல் பட்டதாரிகளைப் பற்றி இந்த பட்ஜெட் கவலைப்படவே இல்லை.

இதையெல்லாம் பார்க்கும்போது, மக்களைப் பற்றிய கவலையே இல்லாமல், தங்களைப் பற்றி, தங்களின் சுயநலத்தைப் பற்றி மட்டுமே உள்ள கவலையால் டெல்லியின் விருப்பப்படியே, எந்த வகையிலும் அதன் மனம் கோணாதபடி ஒரு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து தொடர்ந்து தமிழகத்துக்குத் துரோகமிழைத்துள்ளது எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசு" என வேல்முருகன் விமர்சித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x