Published : 09 Feb 2019 12:43 PM
Last Updated : 09 Feb 2019 12:43 PM

திமுக கூட்டணியில் கமல்ஹாசன்? - கே.எஸ்.அழகிரி கருத்துக்கு திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியில் கமல்ஹாசன் வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நல்லெண்ணத்தில் கூறியிருக்கிறார் என, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (சனிக்கிழமை) விசிக தலைவர் தொல்.திருமாவளவன், செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விவரம்:

ராமலிங்கம் கொலையால் மதக்கலவரம் நிகழும் சூழல் ஏற்பட்டுள்ளதே?

மதம், சாதியின் பெயரால் நிகழும் கொலைகளை கண்டிக்க விசிக கடமைப்பட்டிருக்கிறது. ராமலிங்கம் மதமாற்றத்தை தடுக்க முயற்சித்தார் என்றும், மதமாற்றம் செய்ய முயற்சித்தவர்களின் நெற்றியில் திருநீறு பூச முயற்சித்தார் என்றும், அதனாலேயே அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளையில், அப்படியொரு சம்பவம் அங்கு நடைபெறவில்லை எனவும், தனிப்பட்ட விரோதத்தாலேயே அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. எனவே, தமிழக அரசு சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது சிபிஐ விசாரணை அமைத்து, கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தின் மூலம் மதக்கலவரத்தை ஏற்படுத்த வதந்திகளை பரப்புவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்றைய கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுக்கப்படுமா?

இன்றைய கூட்டம் கூட்டணி குறித்தோ, தொகுதிப் பங்கீடு குறித்தோ ஆலோசிப்பதற்கான கூட்டம் அல்ல. தேர்தல் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசிப்பதற்கான கூட்டம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தொகுதிப் பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வை காண்போம். என்னுடைய சொந்த தொகுதி சிதம்பரம். அங்கு நான் போட்டியிட வேண்டும் என்பது என் விருப்பம்.

திமுகவின் கூட்டணியில் பாமக இருக்குமா?

தமிழகத்தில் அதிமுக தலைமையிலோ, பாஜக தலைமையிலோ கூட்டணி இன்னும் அமையவில்லை. டிடிவி தினகரன் தலைமையிலும் இன்னும் அமையவில்லை. கமல்ஹாசன் தலைமையில் அணி அமையும் என்கிறார்கள். அதுவும் இன்னும் நடக்கவில்லை. திமுக தலைமையில் தான் இதுவரை வலுவான கூட்டணி அமைந்திருக்கிறது. அதனால், எங்கள் கூட்டணி எளிதில் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக இத்தகைய வாதத்தை திட்டமிட்டு பரப்புகிறார்கள். அவர்கள் மனப்பால் குடிக்கிறார்கள். அவர்களின் கனவு  பலிக்காது.

திமுக கூட்டணியில் கமல்ஹாசன் வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறாரே?

அவர் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கூறியிருக்கிறார். திமுக, அதிமுக இரண்டுக்கும் எதிரான கருத்துகளை கமல்ஹாசன் பேசி வருகிறார். அதனை நீர்த்துப் போகச் செய்யும் யுக்தியாக அதனை நான் பார்க்கிறேன்.

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட்டதாக செய்தி வெளியாகியுள்ளதே?

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட்டது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், இதற்கு பின்னரும் பிரதமர் பதவியில் மோடி நீடிப்பது நியாயமில்லை.இவ்வாறு தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x