Published : 09 Feb 2019 10:02 AM
Last Updated : 09 Feb 2019 10:02 AM

இன்ஜினீயரிங்கில் சாதித்த விவசாயி மகன்!- `மேக் நிறுவனத் தலைவர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர்

இன்ஜினீயரிங்ல இந்தியாவுல யாரும் பண்ணாததை நான் செய்யணுமுன்னு நெனச்சேன். இப்ப, உலகத்துலயே யாரும் செய்யாததை `மேக்`  நிறுவனம் செஞ்சிக்கிட்டு வருது. புதுசா யோசிங்க; தடைகளைப் பத்திக் கவலைப்படாம செயல்படுங்க. வெற்றி உங்களைத் தேடி வரும்" என இளம் தொழில்முனைவோருக்கு அறிவுறுத்துகிறார் இன்ஜினீயரிங் துறையில் சாதித்து, தற்போது

விவசாயிகளின் நண்பனாய்த் திகழும் `மேக்` நிறுவனத் தலைவர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் (70). வெளிநாடுகளில் இருந்து இன்ஜினீயரிங் தொழில்நுட்பம் பெற்ற சூழலில், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டுசென்றவர் இவர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பழையபாளையம் கிராமம்தான் இவரது சொந்த ஊர். பெற்றோர் அத்தப்பகவுண்டர்-தங்கம்மாள். பாரம்பரிய விவசாயக் குடும்பம். பச்சமுத்து, சின்னசாமி, மாணிக்கம் என மூவரில் இவர்தான் கடைக்குட்டி.

"எனக்கு 5 வயசு இருக்கும். அப்ப ஒரு ஆய்வுக்காக காமராஜர் எங்க ஊருக்கு வந்திருந்தாரு. அப்பா என்னைய தோள்மேல தூக்கி வெச்சிக்கிட்டு, காமராஜரை பாக்கப் போனாரு.  அதிகாரிங்க கிட்டயே விடலை. திடீர்னு,  காமராஜர் வந்த கார் முன்னோடிபோய் நின்னுட்டாரு அப்பா. அதிகாரிங்க அவரைத் தள்ளினாங்க. அதுக்குள்ள காமராஜர் காருல இருந்து இறங்கி வந்துட்டாரு. என்னப்பா, என்ன  வேணும்னு கேட்டார். `ஐயா, இது என்ற  பையன். படிக்க வைக்கணும். ஆனா, இந்த ஊர்ல ஸ்கூலே கிடையாது. ஏற்கெனவே இருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில சில பசங்க படிச்சாங்க. ஒண்ணும் உருப்படல. அதனால, எங்க கிராமத்துக்கு ஸ்கூல் வேணுங்க'ன்னாரு. உடனே காமராஜர் பக்கத்துல இருந்த கலெக்டர சுட்டிக்காட்டி, `இவங்க பணமே இல்லைன்னு சொல்லறாங்களேப்பா`ன்னாரு. அதுக்கு அப்பா, `பணம் வேண்டாங்க. எங்க ஷெட்ட சுத்தம் செஞ்சி, போர்டு, பலகையெல்லாம் போட்டுத்தர்றோம். வாத்தியார மட்டும் போடுங்க. அவரு சம்பளத்தக்கூட வசூல்  பண்ணிக் கொடுத்துடறோம்'னு சொன்னாரு. காமராஜருக்கு ரொம்ப சந்தோஷம்.

காமராஜரால் தொடங்கிய கல்வி

அப்பா தோள்மேல ரெண்டு காலையும் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருந்த என்னைய பாத்து, `என்னப்பா,  படிக்கிறியா?'ன்னு கேட்டாரு. நான் `சரிங்க`ன்னு சொன்னேன். `நல்லா படிச்சி இன்ஜினீயராயி, ஊருக்குப் பாலம் கட்டணும்`னு சொன்னாரு. அப்புறம், கலெக்டரை கூப்பிட்டு, வாத்தியாரை நியமிக்கச் சொன்னாரு. இப்படித்தான் என்னோட படிப்பு ஆரம்பிச்சது.

ஐந்தாவது வரைக்கும் ஊர்ல படிச்ச நான், 6-வதுல இருந்து எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் தண்ணீர்பந்தல்பாளையம் ஸ்கூல்ல படிச்சேன். தினமும் 5.5 கிலோமீட்டர் தூரத்துக்கு நடந்தே போவேன். வழியில தோட்டத்துல கடலை போட்டிருப்பாங்க. ஆறு வருஷத்துல 2 வருஷம்தான் கடலை நல்லா வெளஞ்சிருக்கும். மீதி 4 வருஷம் மழை இல்லாம, முழுசா காஞ்சியிருக்கும். இல்லைனா பாதி வெள்ளாமை தான் இருக்கும். `நல்லா படிச்சி, ஊருக்கு மழையைக் கொண்டு வருவேம்பா`னு அப்பாகிட்ட சொல்லுவேன்.

எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சதுக்கப்புறம், திருச்சி பிஷப் ஹீபர் காலேஜ்ல பி.யு.சி. படிச்சேன். அதுக்கப்புறம், இன்ஜினீயரிங் படிக்க அப்ளை செஞ்சேன். இன்டர்வியூல கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. காலேஜ்ல  பி.இ. எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் படிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த காலேஜ்ல செமஸ்டர் அறிமுகமான 1968-ல சேர்ந்த முதல் பேட்ச் நாங்கதான்.

பயிற்சியளித்த ஜி.டி.நாயுடு

அப்ப பிரின்ஸிபல் ஜி.ஆர்.தாமோதரன். நான் நல்லா படிப்பேன். சோஷியல் சர்வீஸ், விளையாட்டுகள்லயும் ஆர்வமா இருந்ததால, அவருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். முதலாண்டு கோடை விடுமுறையில `வொகேஷனல் டிரெய்னிங்`னு என்னை ஜி.டி.நாயுடுகிட்ட அனுப்பினாரு. ஜி.டி.நாயுடு வீட்டுக்கே போய், தொழிற்பயிற்சி கத்துக்கிட்டேன். வால்வு டைப் ரேடியோவை,  டிரான்சிஸ்டரா மாத்தறதப் பத்தி கத்துக்கொடுத்தாரு. கடைசியில, அந்த டிரான்ஸ்சிஸ்டர  எனக்கே கொடுத்துட்டாரு ஜி.டி.நாயுடு.

ரெண்டாவது வருஷம் பெங்களூரு இந்தியன் டெலிபோன் இன்டஸ்ட்ரீஸுக்குப் போனேன். அங்க ஜெனரல் மேனேஜர் ஆழ்வார். நான் போன நேரத்துல ஒரு பிரச்சினை. அப்பல்லாம், டெலிபோன் பெரிசா இருக்கும். அதை, சின்னதா, எலக்ட்ரானிக்ஸ் முறையில மாத்தி வெச்சிருந்தாங்க. `பிரியதர்ஷி`னு பேருகூட வெச்சிட்டாங்க. ஏன்னா, 15, 20 நாள்ல அதை இந்திராகாந்தி தொடங்கிவைக்கறதா இருந்துச்சு. ஆனா, அந்த மிஷின் வேலை செய்யல. `தம்பி, கூடமாட இருந்து இத சரி செஞ்சிக் கொடுப்பா`னு ஆழ்வார் கேட்டாரு. பத்தே நாள்ல அதை சரிசெஞ்சிக் கொடுத்தேன். உண்மையில, எனக்கு ஒண்ணும் தெரியாது. அவங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டுத்தான் அதை  சரிசெஞ்சிக் கொடுத்துட்டேன். இதுக்காக அவரு சர்ட்டிஃபிகேட் கொடுத்தாரு.

வெளிநாட்டு வேலை வேண்டாம்!

மூணாவது வருஷம் ஹைதராபாத் போனேன். 4-வது வருஷம் பெங்களூரு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு தொழிற்பயிற்சிக்குப் போனேன். ஒரு வருஷம்கூட கோடை விடுமுறையை அனுபவிக்க முடியல. ஆனால், காலேஜ்ல இருந்து வெளிவரும்போது முழுமையான இன்ஜினீயரா வந்தேன். 4-வது வருஷம் படிக்கும்போதே இந்திய கப்பல்படையில வேலைக்குத் தேர்வானேன்.

ஆனா, அப்பா ஒத்துக்கல. கடைசி வருஷம் பி.இ. ஹானர்ஸ் படிச்சேன். அதுல, கம்ப்யூட்டர் படிச்சதால, பெங்களூரு இந்தியன் டெலிபோன் இன்டஸ்ட்ரீஸ்ல வேலைக்குத் தேர்வு செஞ்சாங்க. சம்பளம் ரூ.2000. இந்த வேலையில சேரலாம்னு அப்பா சொன்னாரு. ஆனா, வேலைக்குப்போக எனக்குப் பிடிக்கல. அதுக்கும் முன்னாடியே, அமெரிக்காவுல படிக்கவும், வேலைக்கும் வாய்ப்புக் கெடச்சது. ஆனா, வெளிநாட்டுக்குப் போகக் கூடாதுனு அப்பா சொல்லிட்டாரு.

`காமராஜர்தான உன்னையப் படிக்க வெச்சாரு. இந்த நாட்டுக்காக உழைக்கணுமுன்னு சொன்னாருல்ல. அதனால, நீ இங்கதான் வேலை செய்யணும்'னு சொன்னாரு தேசப்பற்று மிகுந்த அப்பா. `நான் வேலைக்குப் போகல.

சொந்தமா தொழில் செய்யப்போறேன்`னு அப்பா கிட்ட சொல்லிட்டேன். என்னைய, ஜி.ஆர்.தாமோதரன்கிட்ட கூட்டிக்கிட்டுப் போனாரு. `மாணிக்கம் என்ன நெனைக்கிறானோ, அத செய்யட்டும்`னு ஜி.ஆர்.டி. சொல்லிட்டாரு. என்னமோ செய்யப்பா, ஆனா, `எங்கிட்ட காசு கேக்காத. ஏற்கெனவே ரூ.3 லட்சம் கடனிருக்கு`னு அப்பா சொல்லிட்டாரு.

ரூ.15 ஆயிரத்தில் தொடங்கிய `மேக்`

ஸ்காலர்ஷிப்ல படிச்சதால, நான் ரூ.15 ஆயிரம் சேமிச்சி வெச்சிருந்தேன். அதுதான் என்னோட முதலீடு. மாணிக்கம் அத்தப்ப கவுண்டர்னு என்னோட முழுப் பெயர மாத்தி, `மேக்`னு ஸ்கூல்ல இருந்தே கூப்பிடுவாங்க. அதனால, மேக் கன்ட்ரோல்ஸ் அண்டு சிஸ்டம்ஸ்-ங்கற பேர்ல 1973-ல கோவை ராமநாதபுரம் பகுதியில சின்ன கம்பெனிய தொடங்கினேன். ரூ.500 வாடகை.

அப்ப ரூட்ஸ் கம்பெனியில புல்லட் வண்டிக்கு ஹாரன் செஞ்சிக்கிட்டிருந்தாங்க. ஆனா, மக்கள் பாஷ் நிறுவனத்தோட ஹாரனைத்தான் அதிகம் விரும்பினாங்க. கம்பெனி முதலாளி கிருஷ்ணசாமி ஜிஆர்டி மூலமாக என்னைய கூப்பிட்டு, `இது என்னானு பாரு`ன்னு சொன்னாரு. 3 மாசத்துல சரி செஞ்சிக் கொடுத்தேன். அப்பவே ரூ.5 ஆயிரம் பணம் கொடுத்தாரு. அப்ப சம்பளமே ரூ.450, ரூ.500-தான். இப்ப, பாஷ் கம்பெனிக்கே ஹாரன் அனுப்பற அளவுக்கு ரூட்ஸ் கம்பெனி டெவலப் ஆயிடுச்சு. டெக்ஸ்டைல் இன்டஸ்ட்ரீஸ்-ல சிட்ரா சீனிவாசன் `டியூயல் சிஸ்டம்` ட்ரை பண்ணாரு. இதுக்கான `ரிங்க் டிரைவ்` செஞ்சிக் கொடுத்தேன். அது ரொம்ப பயனுள்ளதா இருந்துச்சி.

ஈரோடு சத்தியமங்கலத்துல ஆனந்தகுமார் மில்லுல 12 ஜெனரேட்டர் வெச்சிருந்தாங்க. ஒவ்வொன்னுக்கும் ஒரு பேட்டரி. வருஷத்துக்கு ஒரு பேட்டரி மாத்தணும். ஒரு பேட்டரி ரூ.2 ஆயிரம். இதுவே வருஷத்துக்கு ரு.24 ஆயிரம் செலவு. அப்ப அது பெரிய தொகை. இந்த விஷயம் எங்கிட்ட வந்துச்சி. நான் `ரெக்டிஃபையர்` டிசைன் செஞ்சிக்  கொடுத்தேன். அதுக்கான `டயோடு`  இந்தியாவிலேயே இல்ல. புனேல ஒருத்தர் அது மாதிரி செஞ்சிக்கிட்டிருந்தாரு. ஆனா, நாங்க எதிர்பார்த்தது இல்ல. இதனால, நான் புனே போய், அவருடையதை மாடலா வெச்ச, வேற டயோடு செஞ்சேன். பெரிய சக்சஸ்.

இதேமாதிரி, லேலண்ட் கம்பெனியில இன்ஜின்களை பரிசோதிக்கும் டெஸ்ட் பெட் 72 இருந்தது. ஒவ்வொன்னுலை யும் 5 இன்ஜினை டெஸ்ட் பண்ணுவாங்க. ஒரு நாளைக்கு 5 பேட்டரியாவது மாத்திக்கிட்டிருந்தாங்க. கோடிக்கணக்குல செலவு. அவங்க என்னைய பத்திக் கேள்விப்பட்டு அணுகினாங்க. அவங்களுக்கு `இன்ஜின் கிராங்க்`  செஞ்சிகொடுத்தேன். இதுக்கப்புறம் பல கம்பெனிங்க போட்டி போட்டுக்கொண்டு இன்ஜின் கிராங்க் வாங்கினாங்க. நான் அதுக்கு காப்புரிமை வாங்கலை. இப்பவும் அது மார்க்கெட்டுல இருக்கு.

மேக் இன் இந்தியா!

இது மாதிரி பல புதிய விஷயங்களை கண்டுபிடிச்சோம். இப்ப `மேக் இன் இந்தியா`னு சொல்றாங்க இல்ல. நாங்க அப்பவே  செயல்படுத்திட்டோம். இந்தியாவுல யாரும் செய்யாதத்தான் நான் பண்ணுவேன். அதுதான் என்னோட கொள்கை. இப்ப உலகத்துலேயே யாரும் செய்யாததை `மேக்` கம்பெனி செஞ்சிக்கிட்டிருக்கு.

இதுக்கு நடுவுல, 1976-ல திருமணமாச்சு. மனைவி மல்லிகா. நான் தொழில்ல முழுமையாக கவனம் செலுத்தினப்ப, அவங்க வீட்டைப் பாத்துக்கிட்டாங்க. இன்னமும் நான் ஓடிக்கிட்டிருக்கேண்ணா, அதுக்கு அவங்க ஒத்துழைப்பும், ஊக்கமும்தான் காரணம். மகன் சரவணன், `மேக்` நிறுவனத்தை நிர்வகிக்கிறார். மகள் நித்யா ஃபேஸ்புக் நிறுவனத்தில் நிதி ஆலோசகராக வேலை செய்யறாங்க.

ரூ.4 கோடி நஷ்டம்

அப்ப, இந்தியாவுல இருக்கற இன்ஜினீயர்களுக்கு அடிப்படை பயிற்சி கொடுத்து, அமெரிக்காவுக்கு வேலைக்கு கூட்டிக்கிட்டுப் போனாங்க. இந்த ரெக்ரூட்மென்ட் ஆஃபர் எனக்கு வந்தது. ஆனா, அது எனக்குப் பிடிக்கல. நாமளே சொந்தமாக கம்பெனி ஆரம்பிக்கலாமுன்னு `மேக் சாப்ட்வேர் சிஸ்ட்ம்ஸ்` கம்பெனிய, சிலரோட சேர்ந்து ஆரம்பிச்சேன். ஆனா, சில பிரச்சினைகளால இந்த ப்ராஜெக்ட் ஃபெயிலியர் ஆயிடுச்சு. எங்க கம்பெனிகூட வெச்சிக்கிட்ட ஒப்பந்தத்தை, பில்கேட்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு பார்ட்னருங்க கேன்சல் செஞ்சிட்டாங்க. இதுல எனக்கு ரூ.4 கோடி நஷ்டம்.

இந்த நிலையில, ஜிஆர்டி மூலமா, அப்துல்கலாம் என்னை அணுகினாரு. போர் விமானத்துக்கு கிரவுண்டுல சர்வீஸ் செய்ய பவர்வேணும். பேட்டரி வெச்சி அதை செஞ்சிக்கிட்டிருந்தாங்க. திடீர்னு அந்த பேட்டரிங்க வேலை செய்யல. பெரிய கம்பெனிங்க கிட்ட கேட்டும் வேலைக்கு ஆகலை. `நீதான் செஞ்சிக் கொடுக்கணும்`னு எங்கிட்ட சொன்னாரு. எங்க டிசைன் சக்ஸஸ் ஆச்சு. ஆனா, அதை டெஸ்பேட்ச் செய்யற சமயத்துல, ஒரு ஊழியர் பணம் கேட்டாரு. நான் கொடுக்கல. `ஏன் பேட்டரிய அனுப்பல`னு  கலாம் கேட்டப்ப, நான் மௌனமா இருந்தேன். அவரு புரிஞ்சிக்கிட்டாரு. அப்புறம் அதை அனுப்பிவெச்சோம். 6 மாசமாகியும் அதுக்கு பணம் வரலை. திரும்பவும் கலாம்கிட்ட பேசினேன். `டெல்லிக்கு புறப்பட்டு வா`ன்னாரு. நான் போன பிளைட்டை ஓட்டினது ராஜீவ்காந்தி.

அப்துல் கலாம் பாராட்டு

டெல்லியில போய் கலாமை பார்த்தப்ப, பணத்துக்கான செக் கொடுத்தாரு. `உங்க வேலை நல்லாயிருக்கு. இந்தியாவை வல்லரசா மாத்தறதுக்கு உங்கள மாதிரி இன்ஜினீயருங்க அவசியம்`னு பாராட்டி,  நிறைய ஆர்டர் கொடுத்தாரு.

அதுக்கப்புறம் விமானப்படையில இருந்து எங்களுக்கு நிறைய ஆர்டர் வந்துச்சு. அதுக்கு முன்னவெல்லாம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்  நிறுவனத்துக்கு மட்டும்தான் ஆர்டர் கொடுப்பாங்க. இந்த நிலையை மாத்தி, விமானங்களுக்கான கிரவுண்டு சப்போர்டு எக்யூப்மென்ட் ஆர்டர்களை எங்களுக்கு கொடுத்தாங்க. இந்த விஷயத்துல அப்துல்கலாம் பெரிய புரட்சியே செஞ்சாரு.

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தப்ப, பிரான்ஸ் நாட்டு கம்பெனிகிட்ட `ஏ3-20`  பயணிகள் விமானங்கள் 13 வாங்கினாங்க. 6 மாசத்துக்கப்புறம் ஒரு விமானம் பெங்களூர்ல ஏரில விழுந்து விபத்துக்குள்ளாச்சி. நிறைய பேர் இறந்தாங்க. ஆய்வு செஞ்சதுல, தொழில்நுட்பக் கோளாறு இருந்தது தெரிஞ்சது.

இந்த விமானத்துக்கு கிரவுண்டுல சர்வீஸ் செய்ய எக்யூப்மென்ட் இல்லை. அமெரிக்கா, லண்டன்ல இருந்து எக்யூப்மென்ட் வாங்கி சர்வீஸ் செய்ய முயற்சி செஞ்சும், பலனில்லை. பிரான்ஸ் கம்பெனிக்காரனும் கையை விரிச்சிட்டான். எல்லா விமானத்தையும் நிறுத்தி வெச்சிட்டாங்க. இதுக்கு நடுவுல ராஜீவ்காந்தியை கொன்னுட்டாங்க. நரசிம்மராவ் பிரதமர் பதவிக்கு வந்தாரு. பாராளுமன்றத்துல பிரான்ஸ் விமான விபத்து பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிக்காரங்க ஆயத்தமா இருந்தாங்க.  அப்ப விமானத்துறை அமைச்சரா இருந்த மாதவராவ் சிந்தியா, விமானத்துக்குத் தேவையான எக்யூப்மென்ட் பத்தி விசாரிச்சிருக்காரு.

சுகாய், மிக், மிராஜ் போர் விமானங்களுக்கு நாங்க கிரவுண்ட் சப்போர்ட் எக்யூப்மென்ட் சப்ளை செஞ்சிக்கிட்டிருந்ததை, அவர்கிட்ட சொல்லியிருக்காங்க. உடனே, என்னையத் தேடி கோயம்புத்தூருக்கே வந்துட்டாரு. அந்த எக்யூப்மென்டை நான் செஞ்சிக் கொடுக்கணுமுன்னு கேட்டாரு. `உடனே எப்படி தயாரிக்க முடியும். டைம் வேணும்`னு கேட்டேன். அவரு, பிரதமர் நரசிம்மராவ்கிட்ட போன்ல பேசினாரு. `மாணிக்கத்த கூட்டிக்கிட்டு, டெல்லி வந்துடு. அங்க பேசிக்கலாம்`னு நரசிம்மராவ் சொல்லிட்டாரு. இதனால, என்னை டெல்லிக்கு கூட்டிக்கிட்டுப் போனாரு.

பிரதமரின் வேண்டுகோள்!

பிரதமர் வீட்டுல, நரசிம்ம ராவ், மன்மோகன்சிங் இருந்தாங்க. `காங்கிரஸ் கவர்மென்ட் மானத்த காப்பாத்துங்க`னு நரசிம்மராவ் சொன்னாரு. அந்த எக்யூப்மென்ட் தயாரிக்க குறைஞ்சது 6 மாசமாகுமுன்னு சொன்னேன். `அய்யோ, நான் தப்ப முடியாது. ஒரு மாசத்துல செஞ்சிக் கொடுங்க`ன்னாரு நரசிம்ம ராவ். `இதுக்கு நிறைய வெளிநாட்டு உதிரிபாகம் வேணும். லைசென்ஸ் வேணும். நான் லஞ்சம் கொடுத்து, லைசென்ஸ் வாங்க மாட்டேன்`னு சொன்னேன். உடனே, மன்மோகன் சிங்க பாத்து, `மோகன், அவர் கேட்கறத செஞ்சிக் கொடுங்க`னு நரசிம்மராவ் சொன்னாரு. அடுத்த நாள், மன்மோகன்சிங் வீட்டுக்கு என்னை மாதவராவ் சிந்தியா கூட்டிக்கிட்டுப் போனாரு.

சென்ட்ரல் போர்டு ஆஃப் எக்ஸைஸ் அண்ட் கஸ்டம்ஸ் தலைவர்கிட்ட பேசி, உடனே எனக்கு லைசென்ஸ் லெட்டர் கொடுத்துட்டாரு மன்மோகன்சிங். நாங்களும் எக்யூப்மென்ட் செஞ்சிக் கொடுத்தோம். இது எனக்கு பெரிய திருப்பமா அமைஞ்சது. இப்ப பயணிகள் விமானம், போர் விமானம், கப்பல்படை விமானங்கள்-னு ஏர்கிராப்ட் பவர் சம்பந்தப்பட்ட  கிரவுண்ட் சப்போர்ட் எக்யூப்மென்ட்ஸ் சப்ளை செய்யறோம். 37 நாடுகள்ல `மேக்` எக்யூப்மென்ட்ஸ் சப்ளையாகுது. அமெரிக்கா மெம்ஃபிஸ்-ல உற்பத்திப் பிரிவு செயல்படுது. 14 நாடுகள்ல சர்வீஸ் சென்டர் இருக்கு" என்றார் பெருமிதத்துடன்.

இதெல்லாம் சரி, திடீரென ஒருநாள் தொழிலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொண்ட மாணிக்கம் அத்தப்ப கவுண்டர், நிர்வாகத்தை முழுமையாக மகன் சரவணனிடம் ஒப்படைத்தது ஏன்? விவசாயிகளுக்கு குரல் கொடுப்பவராகவும், சுற்றுச்சூழல், நீர்மேலாண்மை, இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்தவும் அவரைத் தூண்டியது எது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x