Published : 09 Feb 2019 08:52 AM
Last Updated : 09 Feb 2019 08:52 AM

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிகணினி வழங்க ரூ.1,362 கோடி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிகணினி வழங்கும் திட்டத்துக்கு ரூ.1,362.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

பள்ளிக்கல்வியை எளிதாக பெறுவதற்கும், தரத்தை மேம்படுத்தவும் 2011-ம் ஆண்டு முதல் இந்த அரசு 247 தொடக்கப் பள்ளிகளை புதிதாக தொடங்கியுள்ளது. 116 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 1,079 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக

வும், 604 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தியுள்ளது. மாநிலம் முழுவதும் மாணவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை நிறுவுவதற்கான இலக்கினை இந்த அரசு முழுமையாக எட்டியுள்ளது.

தொடக்கநிலை வகுப்புகளில் நிகர சேர்க்கை 99.8 சதவீதம் உயர்ந்துள்ளது. 2011-12-ம் ஆண்டில் 63,178 ஆக இருந்த தொடக்கப் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை, 2018-19-ம் ஆண்டில் 33,519 ஆக குறைந்துள்ளது. தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஒப்பிடும்போது, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் கூடுதல் வேகத்தில் முன்னேறி வருகின்றனர்.

புத்தகப் பைகள், காலணிகள், நோட்டு மற்றும் பாடப் புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள் உட்பட மாணவர்களுக்கு விலையில்லாமல் வழங்கும் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். 2019-20-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.1,656.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் இடைநிற்றலைக் குறைக்க 10, 11, 12-ம் வகுப்புகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் ரூ.5 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகையாக இந்த அரசு தொடர்ந்து வழங்கும்.

இதற்காக வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.313.58 கோடியும், மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு ரூ.1,362.27 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கு போதுமான உட்கட்டமைப்பை வழங்க நபார்டு வங்கியின் கடனுதவியுடன் ரூ.381.31 கோடி செலவில் வகுப்பறை கட்டுதல், ஆய்வகங்கள், கழிப்பறைகள் மற்றும் பிற வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x