Published : 05 Feb 2019 04:06 PM
Last Updated : 05 Feb 2019 04:06 PM

அண்ணா நகரில் வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை: நூறு சவரன் நகை, லட்சக்கணக்கில் பணம் திருட்டு

அண்ணா நகர் காவல் நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த கொள்ளையர்கள் வீடுகள், நிறுவனங்களின் பூட்டை உடைத்து நூறு சவரனுக்கு மேற்பட்ட நகைகள், லட்சக்கணக்கான ரொக்கப்பணம், வெளிநாட்டு மதுபானம், சிசிடிவி கேமரா, பதிவு கருவிகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சென்னை அண்ணா நகர் முதல் அவின்யூ, கிழக்கு எல்-பிளாக்கில் வசிப்பவர் சத்திய நாராயணன். சொந்தமாக வாகன ஷோரூம் நடத்தி வருகிறார்.  ஆந்திராவைச் சேர்ந்த இவர் சொந்த ஊருக்கு கடந்த 1-ம் தேதி அன்று காலை புறப்பட்டுச் சென்றார். வீட்டில் யாரும் இல்லை. இவர் வீட்டை தினமும் வாசல் பெருக்கி கோலம் போடும் குப்பம்மா என்பவர் வழக்கம்போல் இன்று  காலை 7 மணி அளவில் வந்துள்ளார்.

அப்போது வீட்டின் கதவும், பூட்டும் உடைக்கப்பட்டு இருப்பதைப்பார்த்து அக்கம் பக்கத்தில் சொல்லி அண்ணா நகர் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனையிட்டனர். போலீஸார் சோதனையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த கதவும் நெம்பி திறக்கப்பட்டு உள்ளே லாக்கர் உடைக்கப்பட்டு நகை, பணம் திருடு போனது தெரியவந்தது.

வீட்டில் ஆள் இல்லாதததை அறிந்துக்கொண்டு வீடுபுகுந்து நிதானமாக திருட்டில் ஈடுபட்ட அவர்கள் வீட்டில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சவரன் தங்க நகைகள்,  வீட்டிலிருந்து உயர் ரக வெளிநாட்டு மதுபானம் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.

எவ்வளவு நகை, பணம் திருடுபோனது என்பதுகுறித்து சத்திய நாராயணன் சென்னை திரும்பியபிறகே வெளிவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சத்திய நாராயணன் வீட்டில் கொள்ளையடித்த கும்பல் அத்துடன் நிற்காமல் அதே குடியிருப்பில் உள்ள மேலும் இரண்டு வீடுகளிலும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. அதே பகுதியில் முரளி கிருஷ்ணன் என்பவர் கார்மெண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த கும்பல் வீட்டிலிருந்த ரூ. 6 லட்சம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள், 1 சிசிடிவி கேமரா, காட்சிகளை பதிவு செய்யும் டிவிஆர் கருவியைத் தூக்கி சென்றுள்ளனர்.

பின்னர் அதே கும்பல் அங்குள்ள தனியார் நிறுவனம் நடத்தி வரும் பியூஷ் என்பவர் நிறுவன ஷட்டர் கதவை உடைத்து உள்ளே புகுந்து லாக்கரை உடைத்து உள்ளே இருந்த ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் ரொக்கப்பணம், 6 சிசிடிவி கேமராக்கள், டிவிஆர் (காட்சிப் பதிவு கருவி) உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் தெளிவாக திட்டம்போட்டு கண்காணிப்புக் கேமராவில் சிக்கினால் என்ன செய்வது என யோசித்து மொத்த கேமராவையும் தூக்கிச் சென்றுள்ளனர். ஆனாலும் அவர்கள் கைரேகையை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

சமீப காலமாக வீடுபுகுந்து திருடும் கூட்டம் அதிகரித்து வருகிறது. சென்னை ஈசிஆர் சாலையில் நேற்று முன் தினம் உலகவங்கி மேலாளர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x