Published : 03 Feb 2019 01:35 PM
Last Updated : 03 Feb 2019 01:35 PM

கூடா நட்பைக் கண்டித்த  கணவனுக்கு மது ஊற்றிக் கொடுத்துக் கொன்ற மனைவி உட்பட 4 பேர் கைது

கூடா நட்பு விவகாரத்தில் கணவனுக்கு மது ஊற்றிக் கொடுத்து  கொலை செய்த மனைவி உட்பட 4 பேரை ஒரு ஆண்டுக்குப்பின் போலீஸார் கைது செய்தனர்.

 

மதுரை மாவட்டம் திருமால்புரம் அருகே மாரநேரி வாரியேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் திருமலைசாமி மகன் இளஞ்செழியன்(28). கட்டிடத் தொழிலாளி. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை வந்த இளஞ்செழியன் கட்டிட வேலை செய்து வந்தார். அப்போது, அவரும், அதே பகுதியைச் சேர்ந்த ரேவதி(24) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு, தஞ்சாவூர் வெட்டுக்கார தெருவில் வசித்து வந்தனர்.

 

அதன்பின், ரேவதிக்கும், இளஞ்செழியனுடன் வேலை செய்த பெட்டுவாச்சாவடியைச் சேர்ந்த இளவாளன்(26) என்பவருக்கும் கூடா நட்பு ஏற்பட்டது. இதையறிந்த இளஞ்செழியன், மனைவி ரேவதியை கண்டித்துள்ளார். இதனால், இருவருக் கும் தகராறு ஏற்பட்டது. இதில், விரக்தியடைந்த இளஞ்செழியன் மதுரையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

 

இதனிடையே, கடந்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி கணவர் இளஞ் செழியனுக்கு போன் செய்த ரேவதி, இனிமேல் சேர்ந்து வாழ்வோம் என்று கூறி அழைத்துள்ளார். அதன்படி, இளஞ் செழியன் தஞ்சாவூருக்கு வந்தார்.

 

அதன்பின், தஞ்சாவூருக்கு சென்ற மகனை செல்போனில் தொடர்பு கொள்ள முடியாததால், இதுகுறித்து அவரது தாய் தங்கம்மாள், ரேவதியிடம் கேட்டபோது, எவ்வித பதிலும் கிடைக் கவில்லை. இதையடுத்து, கடந்த நவம்பர் 25-ம் தேதி அம்மாபேட்டை போலீஸில் மகனை காணவில்லை என்று தங்கம்மாள் புகார் செய்தார். போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

 

இளஞ்செழியனை கண்டுபிடித்து ஆஜர்படுத்தும்படி அம்மாபேட்டை போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, போலீஸார் சந்தேகத்தின்பேரில் ரேவதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஊருக்கு வந்த இளஞ்செழியனுக்கு மது ஊற்றிக் கொடுத்து, ரேவதி, இளவாளன், இவரது நண்பரான அரித்துவாரமங்கலத்தைச் சேர்ந்த கலியபெருமாள்(26) ஆகியோர் சேர்ந்து கொலை செய்ததும், பின்னர், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பருத்திவிடுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணி உதவியுடன், உடலை மின்னாத்தூர் ஏரி அருகே வடிகால் குழாயில் திணித்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

 

இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, ஒரு ஆண்டு ஆனதால் இளஞ்செழியனின் உடல் வெறும் எலும்பு கூடாக இருந்தால், அந்த இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின், ரேவதி, இளவாளன், கலியபெருமாள், ஆட்டோ டிரைவர் மணி ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x