Last Updated : 03 Feb, 2019 11:00 AM

 

Published : 03 Feb 2019 11:00 AM
Last Updated : 03 Feb 2019 11:00 AM

புதிய முயற்சிகள்தான் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்!- நம்பிக்கையூட்டுகிறார் ‘பழமுதிர் நிலையம்’ சின்னசாமி

காலில் போடுற செருப்பை அழகாக கண்ணாடி ஷோரூமில் அடுக்கி வெச்சி விற்பனை செய்ய முடிகிறபோது, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை சாப்பிடுற பழங்கள அழகாக அடுக்கி வைத்து விற்பனை செய்ய முடியாதா? சாப்பிடும் பொருட்களை தெருவோரத்துல புழுதியில போட்டு விற்பனை செய்றதுல எப்பவுமே எனக்கு உடன்பாடு இல்லை. ஆடம்பரத்தை வெளிப்படுத்துறதா இல்லாம, ஆரோக்கியத்துக்காக சுத்தமான இடத்துல

வெச்சு பழங்களை விற்கணும்னு நினைப்பேன். கடை வியாபாரம் நல்லாபோக ஆரம்பிச்சதும் முதல்வேலையா,பழங்களை அடுக்கி வைக்கிற வசதியை ஏற்படுத்தினோம். இன்னைக்கு தங்கத்தை விக்கிற மாதிரி பாதுகாப்பா பழங்களை விற்பனை செய்கிறோம்’’ என்று பழங்களையும் காய்களையும் அடுக்கி வைத்தபடி பேசுகிறார் சின்னசாமி.

தள்ளுவண்டி பழக்கடை பழமுதிர் நிலையமாகி, இன்று ‘சூப்பர் ஸ்டோர்’ அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. தளராத நம்பிக்கையும், அயராத உழைப்பும் சின்னசாமி அவர்களின் வளர்சிக்குப் படிக்கற்களாக இருக்கின்றன.

"உத்தரவாதமான சம்பளப் பணத்தைத் தாண்டி, பஞ்சாலை வேலையில் பல சௌகரியங்கள் உண்டு. வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருளை, ஃபேக்டரி கேன்டீன்ல கடனா வாங்கிக்க முடியும். சலுகை விலையில் உணவு, தீபாவளிக்கு கடனுக்கு துணி, பட்டாசுனு தேவைகளை சிரமம் இல்லாம பூர்த்தி பண்ணிக்க முடியும். எந்தச் சூழ்நிலையிலேயும் ’கடன் வாங்கி’  வாழ்ந்துடக் கூடாதுனு ரொம்ப கவனமா இருந்தேன். ஃபேக்டரி ஸ்டோர்ல  மளிகைப் பொருளைக் கடனுக்கு வாங்கினா, அப்புறம் சம்பள பணத்துல பிடிச்சுக்குவாங்க. மேற்பார்வைக்கு இது வசதியா தெரிஞ்சாலும், நம்மை அறியாம கொஞ்சம் கொஞ்சமா இழப்புகளை சந்திப்போம். நான் மாத பட்ஜெட் போட்டு, விலை குறைந்த ஒரு குளியல் சோப் வாங்க நினைத்தால், ஃபேக்டரி கேன்டீனில் விலை அதிகம் கொண்ட சோப் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். கேட்டது கிடைக்கவில்லை என்றால், கிடைப்பதை வாங்க ஆரம்பித்துவிடுவோம். 5 ரூபாய் சோப்புக்குப் பதிலாக 8 ரூபாய் சோப் வாங்கிக்கொண்டு போவோம். இப்படியே ஒவ்வொரு பொருளாக வாங்கத் தொடங்கினால்,  மாத பட்ஜெட் இரண்டு மடங்கு அதிகமாகும்.

தொழிலாளர்கள் பொதுவாக இதைக் கவனிக்க மாட்டார்கள். நான் கையில் பணம் கொடுத்து பொருள் வாங்கினால், அங்கு கிடைக்கவில்லை என்றால், எங்கு கிடைக்கிறதோ அங்கிருந்து வாங்கிக்கொள்ள முடியும். தேவையான பொருட்களை மட்டும் வாங்குவோம்.  இப்படி சின்ன சின்ன விஷயங்களைக்கூட கவனிச்சு, கணக்குப் போட்டு வாழ்ந்தோம். இப்படி சிக்கனம் பிடித்து வாழ்க்கை நடத்தி, சொந்தமாக கடை போடும்போது போதிய முதலீடு கையிருப்பு இல்லை.

4 கடை அமைத்தால் ராஜினாமா!

பதிமூன்று வருஷம் மில் வேலையையும், பழக்கடை வியாபாரத்தையும் சமாளிச்சோம். இரண்டு வருஷத்துக்கு ஒருமுறையாவது, மில் வேலையா? சொந்த வியாபாரமா? என்கிற கேள்வி வந்துபோகும். நான்கு சகோதர்களுக்கும் ஒரு கடையும், ஒரு வீடும் கிடைச்ச உடனே வேலையை ராஜினாமா பண்ணிடலாம்னு இருந்தோம்.

1965-ம் வருஷம் தள்ளுவண்டியில் இருந்து ஒரு பழக்கடை வைக்கும் அளவுக்கு முன்னேறினோம். 1973-ல்

இரண்டாவது கடை அமைத்தோம். முதல் கடைக்கும், இரண்டாவது கடைக்கும் உள்ள கால வித்தியாசம் ஆறு வருஷம். கடைசி தம்பி வரைக்கும் கடையைப் பார்த்துக்க வந்ததும், அடுத்தடுத்து மேலும் இரண்டு கடைகள் அமைத்தோம். 1984-ம் வருஷம் நாலாவது கடை அமைத்ததும், மில் வேலையை ராஜினாமா பண்ற தைரியம் வந்துருச்சு. அப்புறம் 24 மணிநேரமும் பழக்கடையைப் பற்றிய சிந்தனை மட்டும்தான் இருந்தது.

மிக்ஸியும்...ஜூஸும்...

பீளமேடு பி.எஸ்.ஜி. காலேஜ் எதிரில் அமைத்த முதல் கடைதான் எங்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்தது. அங்க பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பழங்கள் உடலுக்கு எவ்வளவு ஆரோக்கியம்னு  நல்லா தெரிஞ்சிருந்தது. ஜுரத்துக்குப் பழம் வாங்கின காலம்போய், நோய் வராம ஆரோக்கியமா வாழறதுக்கு பழங்கள் சாப்பிடணும்னு விழிப்புணர்வோட இருந்தாங்க. வழக்கமா பழம் வாங்கிற பேராசிரியர் ஒருத்தர்,  ‘இப்போ மிக்ஸினு ஒரு மெஷின் வந்திருக்கு. அதுல பழங்களை ஜுஸ் அடிக்கலாம். நீங்க ஏன் பழச்சாறு விக்கக்கூடாது’னு கேட்டாரு. அப்போதான் மிக்ஸினு ஒரு இயந்திரம் வந்திருக்கிறதே தெரியும். போறபோக்குல அவர் சொன்ன ஐடியா மூளைக்குள்ள ஏறிடுச்சு. புது மிக்ஸி  வாங்க வசதி இல்லை.  ஒரு பழைய மிக்ஸியை விலைக்கு வாங்கினோம்.

அடுத்து,  ஜூஸ் போடுறது எப்படினு  கத்துக்கிட்டு, ‘இங்கே பழச்சாறு கிடைக்கும்’னு எழுதிப்போட்டோம்.  "மக்கள் பழம் வாங்கி சாப்பிடுறதே உலக அதிசயம். இதுல ஜூஸ் வாங்கி யாரு குடிப்பாங்க. ரொம்பதான் ஆசை"னு சிலர் கிண்டலும், கேலியும் பண்ணாங்க. அதில் உண்மையும் இருந்தது. நாலு சாத்துகுடி பழத்தை அஞ்சு ரூபாய்க்கு விற்று விடலாம். எட்டு பழங்களைச் சாறாக பிழிந்தால் ரெண்டு க்ளாஸ் ஜூஸ் வரும். அதை எட்டு ரூபாய்க்கு விற்பதற்குள் பல கேள்விகள் கேப்பாங்க. "எட்டு பழத்துக்கு இவ்ளோதான் ஜூஸ் வந்துச்சா"னு சந்தேகமா பார்ப்பாங்க. ’தண்ணீர் கலந்து விக்கிறோமா?’னு சந்தேகம் வரும். ஜூஸ் போடுகிற கடைகளில் அதைத்தான் பண்ணிட்டு இருந்தாங்க. அதனால், ஜூஸ் குடிக்கிற சிலரும், சந்தேக கண்ணோட ஜூஸ் போடுறதையே கவனிப்பாங்க. ‘பழத்தின் உண்மையான சுவை அப்படியே கிடைக்கிற மாதிரி ஜூஸ் போடுறோம். சொட்டு தண்ணி கலக்ககூடாது’னு முடிவு எடுத்தோம். இன்னைக்கு வரைக்கும் எல்லா பழமுதிர் நிலையத்திலும் இதே நடைமுறைதான் இருக்கு.

பேரம் கிடையாது!

தண்ணீரே கலக்காமல் ஜூஸ் போட்டோம். எலுமிச்சை பழத்தில் ஜூஸ்போட தண்ணீர் கலக்க வேண்டும் என்பதால், நாங்கள் ‘லைம் ஜுஸ்’போடுவதில்லை என்பதையே தீர்மானமாக எடுத்தோம்.  அதே மாதிரி பழங்கள் வாங்கும்போது சிலர் பேரம் பேசுவாங்க. இதில் நாங்கள் கறாராக தொழில் செய்வோம். பேரம் என்பதே எங்ககிட்ட கிடையாது. லாபம் குறைத்துக் கொண்டு விற்பனை செய்யக்கூட தயாராக இருந்தோம். இன்று வரை எங்களிடம் பேரம் கிடையாது. சில நாட்களில் பழங்கள் விற்பனை ஆகாமல் மீதமானால், குறைந்த விலைக்குக் கொடுப்பது வழக்கம்.  அடுத்தடுத்த நாட்களில் அந்தப் பழங்களை விற்பனை செய்ய முடியாத நிலைமை உருவாகும். அத்தகைய சூழலில் ‘வந்த வரைக்கும் லாபம்’ என்று ஆளுக்கேற்றாற்போல விற்பனை செய்வார்கள். அத்தகைய சூழலில்கூட நாங்கள் ஆளுக்கொரு விலை விற்பனை செய்வதில்லை. அதை நஷ்டமாகவே ஏற்றுக்கொள்வோம்.

`நாம ஒருத்தருக்கு விலை குறைவா கொடுத்தா, இன்னொருத்தர்கிட்ட விலையை ஏத்தி விக்கணும். எல்லாருக்கும் ஒரே விலை. நம்ம ஊர்ல பேரம் பேசாம ஒரு கீரைக்கட்டுகூட வாங்கமாட்டாங்க. கறாரா இருந்தா, தொழில்ல முன்னேற முடியாது`னு சிலர் அறிவுரை சொன்னாங்க. நாங்கள் எடுத்த முடிவில் இப்போதும் உறுதியாக இருக்கிறோம். தரமான பொருள், நியாயமான விலை என்பது எங்கள் கொள்கை.  பக்கத்துக்கடையில் பத்து ரூபாய்க்கு ஒரு க்ளாஸ் ஜூஸ் விற்றால், தண்ணீர் கலக்காத ஜூலை நாங்கள் இருபது ரூபாய்க்கு விற்றாக வேண்டும். தரத்துக்கு எப்போதுமே மதிப்பு உண்டு. எங்களிடம் வாங்கும் பொருளின் தரமும், விலையும் சரியாக இருக்கும் என்கிற நம்பிக்கையை வாடிக்கையாளர்களிடம் உருவாக்கினோம். அதுதான் எங்களின் உண்மையான வெற்றி.

அடுத்த நகர்வு காய்கறி

பழங்கள் வாங்க வர்றவங்க, காய்கறி வாங்க வேறொரு இடத்துக்குப் போக வேண்டிய நிலைமை இருந்தது. பழத்தோடு காய்கறிகளையும் விற்பனை செய்யலாம்னு யோசனை வந்தது. இது அடுத்த முக்கிய நகர்வா அமைஞ்சது. வாடிக்கையாளர்களின் தேவை உணர்ந்து நாங்கள் தொடங்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் நல்ல வரவேற்பு கிடைச்சது.   அடுத்து, கடையில் ஒரு முக்கிய மாற்றத்தை நடைமுறைப்படுத்தினோம். பொதுவா, கடைகளில் வாடிக்கையாளர்கள் பொருளைக் கேட்பாங்க. வியாபாரிகள் எடுத்துக் கொடுப்பாங்க. வெளிநாடுகளில் நடைமுறையில் இருக்கும் வழக்கத்தைப்போல, வாடிக்கையாளருக்கு வேண்டிய காய்கறியை அவங்களே தேடி எடுத்துட்டு வந்து, அப்புறம் பில்போடும் முறையை அறிமுகப்படுத்தினோம். இல்லத்தரசிகள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சது. அதேமாதிரி எடையை நிறுத்து விலையைக் கூட்டி பணத்தை வாங்கறதுக்குள்ள நிறைய குழப்பம் ஏற்படும். பழங்கள், காய்கறி வாங்கினா கம்ப்யூட்டர் பில் போடும் வழக்கத்தை முதல்ல நாங்கதான் அறிமுகப்படுத்தினோம்.

கம்ப்யூட்டர் பில் அறிமுகப்படுத்தும் வரை, கடையில் யாரையும் நம்பிவிட முடியாது. அதனால், கடையைவிட்டு எங்களால் நகரமுடியாது. கணக்கு குறைஞ்சா யாரைனு சந்தேகப்பட முடியும். கம்ப்யூட்டர் பில் வந்த பிறகு எங்களுக்கும் வசதியாப் போச்சு. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வாடிக்கையாளருக்குத் தேவையான வசதிகளை செஞ்சி கொடுக்கிறதும், கடையை நவீனப்படுத்தும் முயற்சிகளையும் தொடர்ந்து செய்கிறோம்.

ஒற்றுமையே பலம்

சகோதரர்கள் எல்லாரும் இணைஞ்சு ஒத்துமையா தொழில் செய்தோம். அதுதான் எங்களின் பெரிய பலமாக இருந்தது. தம்பிகளும் தடம் மாறாம, கவனம் சிதறாம கடையைப் பார்த்துகிட்டாங்க. காசு சேர சேர உறவு பிரியும்னு சொல்லுவாங்க. முருகன் அருளால எங்க சகோதர உறவு ஒத்துமையா போகுது. எங்களுக்கு அதைவிட ரொம்ப சந்தோஷம், எங்களைப் போலவே எங்க பிள்ளைகளும் ஒத்துமையா இருக்காங்க.

கோவையில் மட்டும் 12 கடைகள் இருக்கு. ஈரோடு, திருப்பூர், கரூர், திருச்சி, சென்னைனு 40 கிளைகள் வந்தாச்சு. வெளியூரில் கிளைகள் தொடங்கும்போது, ‘கோவை பழமுதிர் நிலையம்’னு பேர் வெச்சோம். எங்க போனாலும் ஊரோட அடையாளத்தையும் சேர்த்தே எடுத்துட்டுப் போறோம்’’ என்று  நினைவுகளை அடுக்குகிறார் சின்னசாமி.

அடுத்த தலைமுறை!

அவருக்கு அடுத்து அவருடைய மகன் துரை, தந்தையைப்போல காலையில் 6 மணிக்கெல்லாம் மார்க்கெட்டில் நிற்கிறார். தரமானப் பொருட்களைத் தேடித்தேடி கொள்முதல் செய்கிறார்.

"அப்பா, சித்தப்பா மாதிரியே நாங்களும் வேலைகளைப் பிரிச்சிக்கிறோம். நான் பழங்களைக் கொள்முதல் பண்ணா, அவங்க பாத்துக்கிற கடைகளுக்கும் சேர்த்தே பண்ணுவேன். சித்தப்பா பசங்க  காய்கறி கொள்முதல் பண்ணும்போது நான் பாத்துக்கிற கடைகளுக்கும் சேர்த்தே வாங்குவாங்க. எங்க தலைமுறையில் செல்போன், இன்டர்நெட் கம்யூனிகேஷன் வசதி நல்லாவே இருக்கு. அதனால் எங்க யாரு இருந்தாலும் பேசிக்கிறோம். நான் எடுக்கிற முடிவு மற்றவங்களுக்கு உடன்பாடு இல்லேன்னா, வெளிப்படையா சொல்லுவாங்க. முடிவுகள் ஒருவேளை ஒத்து வரலைன்னாலும், ஈகோ வராது. யார் எந்த கடையைப் பாத்துக்கிறாங்களோ அங்கமட்டும் எங்க முடிவை நடைமுறைப்படுத்துவோம்.

அப்பா, சித்தப்பாங்க மாதிரி நாங்க கஷ்டப்படலைன்னாலும், அவங்க பட்ட கஷ்டத்தைப் பார்த்துதான் வளர்ந்தோம். அப்பா, சித்தப்பா எல்லாருமே வீட்ல  இருந்த நேரத்தைவிட, கடையில் இருந்த நாள்தான் அதிகம். தீபாவளி, பொங்கல்னு நல்ல நாளா இருந்தாலும் லீவு எடுக்காம கடைக்கு வந்துடுவாங்க. இதெல்லாம் பார்த்து வளர்ந்த நாங்களும், உழைக்கிறதுக்குப் பழகிட்டோம். நான் முதுகலை படிப்பு முடிச்சிருக்கேன். ஆனா, மூணாங் க்ளாஸ் தாண்டாத அப்பாகிட்ட இருக்கிற தொழில் நேர்த்தியைக் கத்துக்க இன்னும் எத்தனை வருஷமாகும்னு தெரியாது. ’பழமுதிர் நிலையத்தை’ வெறும் பழங்கள்,  காய்கறிக் கடையா மட்டும் இல்லாம, டிப்பார்ட்மென்டல் ஸ்டோர் மாதிரி நவீனமா மாத்தியிருக்கோம். ஆன்-லைன்ல காய்கறிகள் வாங்கிற காலம் இது. பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் இங்கவந்து பழங்கள் விற்பனை செய்றாங்க. கால மாற்றத்துக்கு ஏற்ற மாதிரி புதுப்புது முயற்சிகளை நாங்களும் செய்றோம். என்ன பண்ணாலும், பெரியவங்க சேர்த்து வெச்சிருக்கிற நல்ல பேரைக் காப்பத்துற மாதிரி நடந்துக்கணும்னு கவனமா இருக்கோம்" என்கிற துரை, பழமையும் புதுமையும் கலந்த கலவையாக இருக்கிறார்.

உழைப்பே உயர்வு

"ஒரு நாள்ல குடும்பத்தோட இருந்த நேரத்தைவிட, பழங்களோடவும், காய்கறிகளோடவும் இருக்கிற நேரம்தான் அதிகம்” என்று சிரிக்கிற சின்னசாமிக்கு, வீடும்,  தொழிலுமே இரு கண்களாக விளங்குகிறது. "எதற்கெடுத்தாலும் ஆஃபர் தருகிற காலத்தில்,  சலுகையோ, விளம்பரமோ

இல்லாமல் நல்லாவே தொழில் செய்றோம். இதுவரை 22 நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். எங்குபோனாலும் பழ விற்பனையில் என்ன புதிய யுத்தி வந்திருக்கிறது என்பதைக் கவனிப்பதுதான் என்னுடைய முக்கியமான வேலை. எங்கள் தொழிலில் எந்த புது மாற்றத்தையும், நாங்கள்தான் முதலில் செய்யவேண்டும் என்பதில் அக்கறையோடு இருப்போம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை பெறுகிறார்கள்.  இன்றும் அதிகாலை தொடங்கும் உழைப்பு, இரவு பதினொரு மணிவரை நீடிக்கவே செய்கிறது.

மில் தொழிலாளியாக வாழ்வைத் தொடங்கிய நாங்கள், இன்று சொந்தமாக  தொழிற்சாலை நடத்துகிறோம். மகன் துரை, ஹோட்டல் துறையிலும் கால் பதித்து இருக்கிறார். வாழ்வில் எந்த உயரத்தைத் தொட்டாலும், உழைப்பை மட்டும் நாங்கள் கைவிடவில்லை" அழுத்தம் திருத்தமாக சொல்கிற சின்னசாமியிடம் இன்றைய இளைய தலைமுறை கற்றுக்கொள்ள ஏராளமான பாடங்கள் உண்டு. ‘உழைப்பே உயர்வு’ என்பது அதில் முதன்மையான பாடம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x