Published : 30 Jan 2019 09:07 AM
Last Updated : 30 Jan 2019 09:07 AM

தமிழகம் முழுவதும் 1,300 பேர் இடைநீக்கம் எதிரொலி; ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு திரும்புகின்றனர்: போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்கு திரும்ப முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 1,300-க்கும் அதிகமான ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆசிரியர்கள் பரவலாக பணிக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். போராட்டம் தொடர் வதாக ஜாக்டோ - ஜியோ தெரிவித்துள்ள நிலையில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது, ஊதிய முரண்பாடுகளை சரிசெய்வது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அரசு அலுவலகங்களில் பணிகள் முடங்கியுள்ளன. தேர்வு நெருங்கும் நேரத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஆசிரியர்கள் நேற்று காலை 9 மணிக் குள் பணிக்கு திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கையுடன், வேறு இடத்துக்கு மாற்றப்படுவார்கள். அந்த இடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படு வார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்தது. பின்னர், இந்த கெடு நேற்று இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து, பல ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு நேற்று பள்ளிகளுக்கு சென்றனர். 90 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று கூறும் போது, ‘‘மாணவர் நலன் கருதி, அரசின் கோரிக்கையை ஏற்று பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர். மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 13 ஆயிரத்து 758 ஆசிரியர்கள் உள்ளனர். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களில் 97 சதவீதம் பேர் பள்ளிக்கு சென்று தங்கள் பணிகளை தொடங்கியுள்ளனர்’’ என்றார். இடைநிலை ஆசிரியர்களில் 85 சதவீதம் பேர் பணிக்கு திரும்பிவிட்டதாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஏ.கருப்பசாமி தெரிவித்தார்.

இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள், பள்ளிக்கு வராதவர்கள் என தமிழகம் முழுவதும் 1,300-க்கும் அதிகமான ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டு, அதே மாவட்டத்துக்குள் பணிமாறுதல் பெற விரும்பும் ஆசிரியர் களைக் கொண்டு அந்த இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

தற்காலிக ஆசிரியர் பணிக்கு மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.அதில் தகுதியானவர்களை தேர்வு செய்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர் வானவர்களின் விவரங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட் டுள்ளன. ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கிய பிறகு, தற்காலிக ஆசிரியர் களை நியமிக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

எழுத்துப்பூர்வமாக கடிதம்

ஆசிரியர்கள் பணிக்கு வராத நாட் களுக்கு மட்டும் சம்பளம் பிடித்தம் செய்யப் படும். மற்றபடி, அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. ஒருவேளை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளிக்குச் சென்ற ஆசிரியர்களிடம் ‘இனி போராட்டத்தில் ஈடுபட மாட்டோம்’ என எழுத்துப்பூர்வமாக கடிதம் பெறப் பட்டுள்ளது.

இதற்கிடையில், சென்னையில் செய்தி யாளர்களிடம் ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மு.சுப்ரமணியன் நேற்று மாலை கூறும்போது, ‘‘போராட்டம் தொடர்ந்து நடக்கிறது. பெரும்பாலான ஆசிரியர்கள் இன்னும் பணிக்கு திரும்பவில்லை. அரசு தவறான தகவலை வெளியிடுகிறது’’ என்றார்.

இதற்கிடையில், 8-வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. தமிழகத் தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை எழிலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப் பாளர்கள் தியாகராஜன், மாயவன் உட்பட 500-க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.

ஜாக்டோ - ஜியோவுக்கு ஆதரவாக தமிழ்நாடு நீதித் துறை பணியாளர் சங்கம், தமிழ்நாடு தேர்வுத் துறை பணி யாளர் சங்கம் ஆகியவை நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கின.

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களான தமிழ்நாடு தலைமை செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் (என்ஜிஓ சங்கம்), தமிழ்நாடு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மையச் சங்கம், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர் சங்கம் ஆகிய 5 சங்கங்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ஜாக்டோ - ஜியோவின் கோரிக்கையோடு, கைதான அரசு ஊழியர்களை நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்வது, அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்வது ஆகிய கோரிக்கைகளையும் இவர்கள் வலியுறுத்துகின்றனர்.

‘வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவசர நிகழ்வுகளுக்கு மட்டுமே தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படும்’ என்று தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஆலோசனை

ஜாக்டோ - ஜியோவின் வேலைநிறுத் தப் போராட்டம் ஒரு வாரத்துக்கு மேல் நீடித்துவருவதால், அரசு அலுவலகங் களில் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட் டுள்ளன. இந்நிலையில், முதல்வர் பழனி சாமி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, முதல்வர் பழனி சாமி வெளியிட்ட அறிக்கை: அரசு ஊழியர் கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு என்றும் புறந்தள் ளியது இல்லை. மத்திய அரசு ஊழியர் களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டவுடன் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கி அரசு ஆணையிட்டது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,400 கோடி கூடு தல் செலவு ஏற்பட்டாலும் கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் நிலுவைத் தொகையுடன் வழங்கப்பட்டது.

நம் சுயநலத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் தியாக உணர்வோடு, நம் உரிமைகளை விட்டுக்கொடுத்து மக்கள் பணியாற்றுவது நம் கடமை. தமிழகம் வறட்சியின் பிடியில் உள்ளது. கஜா புயல் பாதிப்புகளில் இருந்து டெல்டா மீண்டு வரவில்லை. விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும். தொழில் முதலீடுகளை பெற்றால்தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். இத்தகைய பொறுப்புகள் இருக்கும் போது, உரிமைகளை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பது பொருத்தமாக அமையாது.

எனவே, அரசு ஊழியர், ஆசிரியர்கள் தங்கள் போராட்டங்களை கைவிட்டு உடனடியாக மக்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். மக்கள் நலத் திட்டங்களை யும், வளர்ச்சித் திட்டங்களையும் அர்ப் பணிப்போடு செயல்படுத்த வேண்டும். இதை எனது அன்பான வேண்டுகோளாக கருதி நாளையே (இன்று) பணிக்குத் திரும்ப கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x