Published : 23 Jan 2019 01:12 PM
Last Updated : 23 Jan 2019 01:12 PM

பழநி தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் காவடி தூக்கும் நேர்ச்சை எப்படி உருவானது? - முருகனடியார்கள் விளக்கம்

தமிழர்கள் எங்கெல்லாம் வசிக் கிறார்களோ அங்கெல்லாம் முருக னுக்கு காவடி எடுத்தும், பால் குடம் ஏந்தியும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் விழா தைப்பூசத் திருவிழா.

இவ்விழா தமிழ்க் கடவுள் முருகனுக்கானது. பவுர்ணமியன்று வரும் தைப்பூசத் திருவிழாவில் பழநியில் திரும்பிய பக்கமெல்லாம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விதவிதமான காவடிகளை தூக்கி ஆடிப்பாடி வருவர்.

முருகனுக்கு பக்தர்கள் பல்வேறு விதங்களில் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறார்கள். அவற்றில் ஒன்று காவடி தூக்குதல். இந்த வழக்கம் எப்படி வந்தது என, பல ஆண்டுகளாக பழநிக்கு காவடி தூக்கிவரும் மூத்த முருகன டியார்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

முன்பு பொதிகை மலையில் அகஸ்திய முனிவர் இருந்தபோது, தமது சீடர்களில் ஒருவரான அசுரன் இடும்பனைக் கைலாயத்துக்குச் அங்குள்ள இரட்டை மலைகளான சிவகிரி, சப்தகிரியை தூக்கி வருமாறு கட்டளையிட்டார். குருவின் கட்டளைக்கு இணங்க, இடும்பன் கைலாயம் சென்று, இரு மலைகளையும் கட்டி தோள்களில் தூக்கி வந்தார்.

முருகனுக்கோ வேறு சிந்தனை. அந்த இரு மலைகளை திருவாவினன்குடியில் (பழநி) வைக்கத் திட்டமிட்டிருந்தார். அதே வேளையில், இடும்பனின் பக்தியைச் சோதிப்பதும் உலகுக்கு பறைசாற்றுவதும் அவரது நோக்கம்.

தோள்களில் மலைகளைச் சுமந்து வந்து கொண்டிருந்த இடும்பன் வழியை மறந்துவிட்டார். அந்த வழியே செல்லும் ஓர் அரசனாகத் தோன்றிய முருகன், தான் வழிகாட்டுவதாகச் சொல்லி இடும்பனை திருவாவினன்குடிக்கு (பழநி) அழைத்துச் சென்றார். அங்கு சிறிதுநேரம் இளைப்பாறி செல்லலாம் என முருகன் கூறவே, இடும்பன் இரு மலைகளையும் இறக்கி வைத்தார்.

பின்னர், அந்த மலைகளை மீண்டும் தூக்க முயன்றபோது சிறிதும் அசைக்க முடியவில்லை. இதனால் களைத்துப்போன இடும்பன், அந்த இரு மலைகளில் ஒன்றின் உச்சியில் கோவணத்துடன் சிறுவன் நிற்பதை பார்த்தார். சிறுவனைக் கீழே வரும்படி இடும்பன் கூறினார். ஆனால், சிறுவனோ மறுக்கவே, இடும்பன், சிறுவனாக வந்த முருகப் பெருமானுடன் போர் புரிந்து உயிர் நீத்தார்.

பின்னர், அவரது மனைவியின் வேண்டுகோளை ஏற்று இடும்பனை முருகன் உயிர்ப்பித்தார்.

தான் இரு மலைகளைச் சுமந்து வந்தது போல, பக்தர்கள் ஒரு கோலின் இருபுறங்களிலும் திவ்ய பொருட்களை சுமந்து வந்தால், அவர்களது விருப்பங்களை நிறைவேற்றும் வரம் தருமாறு முருகனிடம் வேண்டினார். அவ்வாறே முருகனும் அருளினார்.

இப்படித்தான் முருகன டியார்கள் காவடி தூக்கும் வழக்கம் வந்ததாக ஐதீகம்.

காவடி எடுத்துவரும் பக்தர்கள் முதலில் இடும்பன் மலைக்குச் சென்று வணங்கி விட்டு, அதற்கு பிறகு முருகப்பெருமான் வீற்றிருக்கும், சிவகிரி மலைக்குச் சென்று வழிபடுவர். ஆனால், தற்போது இடும்பன் மலைக்குச் செல்லும் வழக்கம் குறைந்து விட்டது. பழநியில் மூலவர் சன்னதி அருகிலேயே இடும் பனுக்காக சிறிய சன்னதி அமைக் கப்பட்டுள்ளது.

தைப்பூசத் திருவிழாவுக்கு காவடி தூக்கி வந்த பக்தர்கள் மூன்றாவது நாளில் இடும்பனை வணங்கி விரதத்தை நிறைவு செய்வர்.

காவடி எப்படி அமைகிறது?

மிக எளிய காவடியில், ஒரு கோலின் இரு ஓரங்களையும் இணைக்கும் மரத்தால் ஆன வளைவு இருக்கும். முருகனின் உருவப் படங்கள் காவடியின் இருபுறங்களிலும் இருக்கும். காவடிக்கு அழகு சேர்க்க மயிலின் இறகுகள் இணைக்கப்பட்டு, காவடியின் இருபுறங்களிலும் பால் குடங்களை பொருத்தி இருப்பார்கள். இதைத் தவிர, பெரிய காவடிகளும் உள்ளன. அழகுக் காவடி, ரதக் காவடி என இரு வகைகள் உள்ளன.

அத்தகைய காவடியில் உள்ள நீண்ட மெலிதான கம்பி, ஊசிகள் உள்ள சங்கிலிகள் காவடி எடுப்பவரின் உடலில் குத்தப்படும். காவடி எடுப்பவர் முருகனுக்காகச் செலுத்தப்படும் நேர்ச்சையாக மட்டும் அது காட்சி அளிப்பதில்லை. நகரும் சிறிய சன்னதியாகவே காட்சி தருகிறது.

சிலர் தைப்பூசத்துக்கு முன் 48 நாட்கள் விரதம் இருந்து காவடி எடுக்கின்றனர். குறிப்பாக, தைப்பூசத் தையொட்டி, காரைக்குடியில் இருந்து நகரத்தார் காவடி, நாட்டார் காவடி என ஆயிரக்கணக்கானோர் பழநிக்கு காவடி சுமந்து பாத யாத்திரையாக வரும் வழக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x