Published : 23 Jan 2019 12:51 PM
Last Updated : 23 Jan 2019 12:51 PM

நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் காங். வேட்பாளர் போட்டி? - கும்பகோணம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், எந்த அரசியல் கட்சியும் கூட்டணி- தொகுதிப் பங்கீடு குறித்து இதுவரை எந்த நிலைப்பாட்டையும் எடுக்காத நிலையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கை சின்னத்தில் போட்டியிடப் போவதாக பட்டுக்கோட்டை ராஜேந்திரன் என்பவர் அச்சிட்டு கும்பகோணம் பகுதியில் ஒட்டியுள்ள சுவரொட்டிகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் நாகை மாவட்டத்தில் உள்ள பூம்புகார், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன.

இத் தொகுதியில் 1951-ல் இரட்டை உறுப்பினர் பதவியாக ஆனந்த நம்பியார் (கம்யூனிஸ்ட்), சந்தானம் (காங்கிரஸ்), 1962 (தனி) மரகதம் சந்திரசேகர் (காங்கிரஸ்), 1967 (தனி) சுப்ரவேலு (திமுக), 1971 (தனி) சுப்ரவேலு (திமுக), 1977 குடந்தை ராமலிங்கம் (காங்கிரஸ்), 1980 குடந்தை ராமலிங்கம் (காங்கிரஸ்), 1984 பக்கீர் முகம்மது ( காங்கிரஸ்), 1989 பக்கீர் முகம்மது (காங்கிரஸ்), 1991 மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்), 1996 பி.வி.ராஜேந்திரன் (தமிழ் மாநில காங்கிரஸ்), 1998 கிருஷ்ணமூர்த்தி (தமிழ் மாநில காங்கிரஸ்), 1999 மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்), 2004 மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்), 2009 ஓ.எஸ்.மணியன் (அதிமுக), 2014 ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தொகுதியில் அதிக முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக கூட்டணி அமைத்துதான் இந்த வெற்றியை காங்கிரஸ் பெற்றது.

வரும் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் கூட்டணி- தொகுதிப் பங்கீடு தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடாத நிலையில் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கமிட்டி உறுப்பினரும், முன்னாள் மாணவர் காங்கிரஸ் தலைவருமான பட்டுக்கோட்டை என்.ராஜேந்திரன் கை சின்னத்தில் போட்டியிடுவதாக சுவரொட்டியை ஒட்டியுள்ளார்.

இதனால், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த திமுக உள்ளிட்ட கட்சியினர் நமக்கு இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.

பட்டுக்கோட்டை ராஜேந்திரன் இதுவரை இந்த தொகுதியில் போட்டியிடவில்லை. மணிசங்கர் அய்யர் 4 முறை போட்டியிட்டு 2 முறை வெற்றி பெற்றும், இரண்டு முறை தோல்வியையும் தழுவியும் உள்ளார்.

இந்தத் தொகுதியைப் பெறுவதற்காகவே மணிசங்கர் அய்யரை முந்திக்கொண்டு பட்டுக்கோட்டை ராஜேந்திரன் சுவரொட்டி நடவடிக்கையில் இறங்கியுள்ளார் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இந்த சுவரொட்டி விவகாரம் கும்பகோணம், மயிலாடுதுறை பகுதிகளைச் சேர்ந்த அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x