Published : 22 Jan 2019 06:22 PM
Last Updated : 22 Jan 2019 06:22 PM

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடைகோரி பிளஸ்-1 மாணவர் வழக்கு: நாளை விசாரணை

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு. வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் உத்தரவு.

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய முறையை பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் கடந்த மாதம் போராட்டம் அறிவிக்கப்பட்டது. வழக்கு மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஒத்தி வைத்தனர்.

ஆனால் அரசு பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் காலந்தாழ்த்தியதை அடுத்து மீண்டும் போராட்டம் துவங்கியது. இதனை எதிர்த்து போராட்டத்திற்கு தடை கோரி அரும்பாக்கத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், “ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக வந்த தகவல் பெரிய அதிர்ச்சியாக உள்ளது.  வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்வு வர உள்ளது எனவே இந்த சமயத்தில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் பொதுத்தேர்விற்காக எங்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில் பாதிப்பு ஏற்படும் அதிலும் தற்போது 11-ம் வகுப்பில் பொதுத்தேர்வின் மதிப்பெண்கள் முக்கியமாகக் கருதப்படுகிறது எனவே இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கவேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி போராட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் போராட்டத்தை விலக்கி கொள்வதாக உத்தரவாதம் அளித்திருந்தது.

மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவேண்டும், என தெரிவித்த நீதிபதி ராஜா கடைசி நேரத்தில் வழக்கை தாக்கல் செய்துள்ளதாக அதிருப்தி தெரிவித்தார். இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மாணவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை கோரி மாணவர் உயர் நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு முன்பு முறையிட்டார். இதனை அடுத்து வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x