Published : 22 Jan 2019 04:30 PM
Last Updated : 22 Jan 2019 04:30 PM

சென்னையில் நடந்த 3 சாலை விபத்துகள்: 3 பேர் பலி; 2 பேர் படுகாயம்

சென்னையில் நடந்த 3 வெவ்வேறு சாலை விபத்துகளில் கல்லூரி மாணவர், பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னையில் சமீபகாலமாக வாகன விபத்துகள் அதிகரித்து வருகின்றன. சாலையில் அதிவேகமாகவும் பரபரப்பாகவும் இயங்குபவர்கள், அதிவேக வாகனங்கள், இளம் வயதினர் இயக்குவது போன்ற காரணங்களால் விபத்துகள் அதிகரிக்கின்றன.

சென்னை எம்ஜிஆர் நகரில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவர் வேகமாக தடுப்புச்சுவரில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அசோக் நகர் ஆவுடையம்மன் தெரு, சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (19). இவர் பொறியியல் படிப்பு படித்து வருகிறார். மணிகண்டனும் 9-ம் வகுப்பு பயிலும் பாரதியார் தெரு, சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்  பாலகணேஷும் (14) மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட இருவரில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், பின்னால் அமர்ந்திருந்த பள்ளி மாணவன் பாலகணேஷ் படுகாயம் அடைந்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று சென்னை வானகரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ரஹீம் (63) ஷகிதா (60) தம்பதிகள் சென்ற பைக் மீது பின்னால் வந்த டேங்கர் லாரி மோதியதில் சமபவ இடத்திலேயே ஷகிதா உயிரிழந்தார். படுகாயமடைந்த கணவர் ரஹீம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று வியாசர்பாடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 40 வயது மதிக்கத்தக்க நபர் உடல் நசுங்கி சம்பபவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவர் யார் ? என இதுவரை தெரியவில்லை. மோதிய வாகனம் குறித்த தகவலும் இல்லாததால் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x