Published : 22 Jan 2019 03:24 PM
Last Updated : 22 Jan 2019 03:24 PM

சேலத்தைத் தாண்டி உங்களுக்கு எந்த ஊர் தெரியும்?- எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி

உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது அனைத்து கிராம ஊராட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து சந்தித்திருக்கிறேன், நான் போகாத கிராமமே இல்லை, ஆனால் சேலத்தைத் தாண்டி எத்தனை ஊர் உங்களுக்கு தெரியும் என எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று திமுக தலைவர், ஸ்டாலின், கரூர் மாவட்டத்தில் உள்ள ஈசநத்தம் ஊராட்சியிலும், சின்னதாராபுரம் ஊராட்சியிலும் ஊராட்சி சபைக் கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு:

''அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் அடங்கி இருக்கக்கூடிய ஈசநத்தம் ஊராட்சியில் உங்களை எல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

தமிழகத்தில் இதுபோன்று 12,617 ஊராட்சிகள் உள்ளன. அந்த 12,617 ஊராட்சிப் பகுதிகளில் இதுபோன்ற கிராம சபைகளை திமுக சார்பில் நடத்தி தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய அக்கிரம ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அதே நேரத்தில் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கக்கூடிய பாசிச ஆட்சிக்கு, மதவாத வெறிபிடித்து இருக்கக்கூடிய ஒரு கொடுமையான மோடி தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற அந்த உணர்வோடு இந்த கிராம சபைக் கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இன்றைக்கு உங்களைத் தேடி இந்த கிராம சபைக் கூட்டத்திற்கு வந்து இருக்கிறோம் என்று சொன்னால் இதைக்கூட இன்றைக்கு ஆளும் கட்சியில் இருக்கக்கூடியவர்கள் முதல்வராக இருந்தாலும் சரி, அல்லது அவர்களுக்கு கீழே பணியாற்றி கொண்டிருக்கக்கூடிய அமைச்சர்களாக இருந்தாலும் சரி, கிராம சபைக் கூட்டத்தை நாங்கள் நடத்துவதைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

ஒரு அச்சத்திற்கு ஆளாகி இருக்கின்றார்கள். அதனால்தான் வாய்க்கு வந்தபடியெல்லாம் அவர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள். திமுக தலைவர் மு க ஸ்டாலின் கிராம சபைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்.

இதுவரையில் அவர் எந்த கிராமத்திற்காவது போய் இருக்கின்றாரா? ஏற்கெனவே உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்திருக்கிறார், துணை முதல்வராக இருந்திருக்கிறார், அப்போதெல்லாம் கிராமத்திற்குச் செல்லாதவர்கள் இப்பொழுது கிராமத்திற்கு போய்க் கொண்டு இருக்கிறார்கள் என்று ஒரு அப்பட்டமான பொய்யை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

முதன்முதலில் நான் அரசியலில் ஈடுபட்டு இளைஞர் அணி என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அந்த இளைஞர் அணி சார்பில் கிராமப் பகுதியிலிருந்து தான் என்னுடைய அரசியல் பயணத்தை நான் துவங்கி இருக்கின்றேன். நான் செல்லாத கிராமங்களே தமிழ்நாட்டில் இல்லவே இல்லை என்பதே என்னுடைய கருத்து.

நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது ஒவ்வொரு உள்ளாட்சித் தலைவரையும் நேரடியாக சந்திக்க வேண்டும் என்று நான் முடிவு செய்து,  தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஊராட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து நிர்வாகிகள் அடங்கிய ஒரு மாநாட்டை நடத்தி அவர்களின் அனைத்துப் பிரச்னைகளையும் கேட்டு அறிந்தவன் நான்.

அதுமட்டுமல்ல இதுவரையில் தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் 12,617 ஊராட்சிப் பகுதிகளில் நூல் நிலையங்களை உருவாக்கித் தந்த பெருமை திமுக ஆட்சியில் தான், நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த நேரத்தில்தான்.

நான் கேட்கின்றேன், ஸ்டாலின் என்றைக்காவது கிராமத்திற்குப் போனதுண்டா என்று கேட்கும் எடப்பாடிக்கு, சேலத்தைத் தவிர வேறு ஏதாவது ஒரு ஊர் தெரியுமா? இன்றைக்கு நான் எங்கு போனாலும் இவன்தான் ஸ்டாலின், இவன்தான் தளபதி, இவன்தான் கலைஞரின் மகன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மக்களோடு மக்களாக இருந்திருக்கிறேன்.

நான் ஏதோ பெரிதாக வந்து விட்டேன் என்பதற்காக பெருமை பேசுவதகாக நினைத்துவிடக்கூடாது. காரணம் மக்களோடு மக்களாக இருந்து மக்களோடு பழகி மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டிருக்கக்கூடிய இந்த நிலையிலே தான் நான் இதைக் கூறுகின்றேன்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. அந்த ஆட்சி மறைந்த ஜெயலலிதாவால் உருவாக்கித் தந்த ஆட்சி என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவர் மறைந்த காரணத்தால் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கின்றார்.

ஆனால், ஆட்சியில் இருக்கக் கூடியவர்கள் என்னென்ன தவறுகளை என்னென்ன பிரச்சினைகளை இன்றைக்கு சந்தித்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும்.

மக்களைப் பற்றியோ, மக்களுடைய பிரச்சினைகளைப் பற்றியோ மக்களுடைய வாட்டத்தைப் பற்றியோ உங்களுக்கு இருக்கக்கூடிய குறைபாடுகளைப் பற்றியோ உங்களுக்கு என்ன தேவை என்பது பற்றியோ கிஞ்சிற்றும் கவலைப்படாத இந்த நிலையில்தான் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது.

ஆகவே, இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த கிராம சபைக் கூட்டம் நிச்சயமாக பயன்படப் போகின்றது''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x