Published : 21 Jan 2019 09:25 AM
Last Updated : 21 Jan 2019 09:25 AM

அந்தமானில் இணைய சேவையை மேம்படுத்த பிஎஸ்என்எல் நடவடிக்கை: சென்னையிலிருந்து 2,199 கிமீ நீளத்துக்கு ஓஎஃப்சி கேபிள்களை பதிக்கிறது; விரைவில் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளுக்குள் பணிகள் முடிக்கப்படும்

அந்தமான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 7 தீவுகளில் இணைய சேவையை மேம்படுத்த சென்னையில் இருந்து 2,199 கிமீ நீளத்துக்கு ஓஎஃப்சி (Optical Fiber Cable) கேபிள்களை பதிக்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.

இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், நாட்டின் முக்கிய கடல் வழி மற்றும் வான்வழி பாதுகாப்பு அரணாக விளங்குகின்றன. அங்கு 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் வசித்தாலும், சுற்றுலா மற்றும் ராணுவப் பணிகளுக்காக அங்கு பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

அத்தீவுகள் இந்திய நிலப்பகுதியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், அதிவேக இணைய சேவை வழங்கமுடியவில்லை. அதனால் கைபேசி மற்றும் தரைவழி தொலைபேசியில் பேசுவதில் சிக்கல், ஸ்மார்ட் கைபேசிகளுக்கு அதிவேக இணைய சேவை கிடைக்காத நிலை, வங்கிப் பரிவர்த்தனை, இணையவழி வர்த்தகம் செய்ய முடியாமை மற்றும் ஜிஎஸ்டிக்கான ஆவணங்களை காலத்தோடு ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியாத நிலை போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

மேலும் ராணுவம் தொடர்பான தகவல் தொடர்பிலும் சிக்கல் உள்ளது. இப்பிரச்சினைகளைத் தீர்க்க சென்னை- அந்தமான் இடையே ஓஎஃப்சி கேபிள்களை பதிக்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு திட்ட அதிகாரிகள் கூறியதாவது:ஓஎஃப்சி கேபிள்கள், ஒரு வகை கண்ணாடி இழைகளால் ஆன கம்பிகளாகும். இவை தகவல்களை ஒளி வடிவில் நீண்ட தூரத்துக்கு அதிகவேகமாகவும், துல்லியமாகவும் கடத்தும் திறன் உடையவை. அதனால் அவை அதிக அளவில் தொலைத்தொடர்புத் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்திய நிலப் பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகள் ஓஎஃப்சி கேபிள்கள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. அதனால் அதிவேக இணைய சேவை நாடு முழுவதும் கிடைக்கிறது. இந்திய நிலப் பகுதியில் இருந்து வெகு தொலைவில் உள்ள அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் செயற்கைக்கோள் வழி தொலைத்தொடர்பு சேவைதான் வழங்கப்பட்டு வருகிறது. அதில் அதிவேக இணைய சேவை சாத்தியம் இல்லை. நாம் பேசும் ஒலிகள், 36,000 கிமீ தூரத்தில் உள்ள செயற்கைக் கோளுக்குச் சென்று திரும்புவதால், ஒலி சென்றடைவதில் தாமதம் ஏற்படுகிறது.

எனவே நிலப்பகுதியில் கிடைக்கும் அதே சேவை, அப்பகுதி மக்களுக்கு கிடைப்பதற்காகவும், ராணுவ தொலைத்தொடர்பு தடங்கலின்றி நடைபெறவும் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை மற்றும் அந்தமான் இடையே ரூ.1,102 கோடி செலவில், 2,199 கிமீ நீளத்துக்கு கடலுக்கடியில் ஓஎஃப்சி கேபிள்கள் பதிக்கப்பட உள்ளன. பின்னர் அந்தமான்- நிக்கோபார் தீவுகளில் உள்ள முக்கிய தீவுகளான போர்ட் பிளேயர், லிட்டில் அந்தமான், கார் நிக்கோபார், கமோர்தா, கிரேட் நிக்கோபார், ஹேவ்லாக், லாங் மற்றும் ரங்கட் ஆகிய 8 தீவுகளுடன் இணைக்கப்பட உள்ளன.

இதற்கான கட்டுப்பாட்டு மையம், கடல் அலை தொடும் இடத்திலிருந்து சுமார் 1.9 கிமீ தூரத்தில் ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைக்கப்பட உள்ளது. ஆழ்கடல் பகுதியில் இந்த கேபிள்கள் சுமார் 1,000 மீட்டர் ஆழத்துக்கும் கீழ் வைக்கப்படும். அதை விட குறைவான ஆழம் உள்ள பகுதிகளில் 1 மீட்டர் ஆழத்தில் மண்ணுக்குள் கேபிள்கள் பதிக்கப்படும். இத்திட்டத்தால் கடல் சூழலியல் பாதிக்கப்படாது. இப்பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x