Published : 20 Jan 2019 08:22 AM
Last Updated : 20 Jan 2019 08:22 AM

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு: 15 பேர் 100 சதவீதம் மதிப்பெண்; தமிழகத்தில் யாருமில்லை

நாட்டின் உயர்ந்த பொறியியல் கல்வி நிறுவனங்களாக கருதப்படும் ஐஐடி, என்ஐடி கல்லூரிகளில் சேர்வதற்கான ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நேற்று வெளியிட்டது. இதில் 15 பேர் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில் தமிழக மாணவர்கள் எவருமில்லை.

ஜேஇஇ மெயின் தேர்வு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 467 தேர்வு மையங்களில் கடந்த 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை, 8 பிரிவுகளாக நடத்தப்பட்டது. 9.29 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தாலும், 8.74 லட்சம் பேர் மட்டுமே இத்தேர்வை எழுதினர்.

இத்தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி) நேற்று வெளியிட்டது. இதில், 100 சதவீதம் மதிப்பெண்களை 15 பேர் பெற்றுள்ளனர். அவர்களிலும் முதலிடத்தை மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த துருவ் அரோரா என்ற மாணவர் பெற்றுள்ளார். அதிகபட்சமாக தெலங்கானாவைச் சேர்ந்த 4 பேர் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த 15 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த எவரும் இல்லை. தமிழக அளவில் அதிகபட்சமாக பி.கவுரவ் என்ற மாணவர் 99.99 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார்.

சதவீத மதிப்பெண்நடப்பாண்டு, மாணவர்கள் பெற்ற உண்மையான மதிப்பெண்களை வெளியிடாமல், அவர்கள் பெற்ற சதவீதத்தை மட்டுமே என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது. இம்முறை இத்தேர்வு 5 நாட்களில் 8 பிரிவாக தனித்தனி கேள்வித்தாளைக் கொண்டு நடத்தப்பட்டது. ஒரு பிரிவில் கேள்விகள் எளிதாக இருந்து, அந்தப்பிரிவில் தேர்வு எழுதியவர்கள் மட்டுமே அதிகளவில் தேர்ச்சி பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே, சதவீத அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

கணக்கிட்டது எப்படி?உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு பிரிவில் தேர்வு எழுதிய ஒரு மாணவரின் மதிப்பெண் மற்றும் அவருக்கு கீழ் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை, 100-ஆல் பெருக்கி, அதனை, அந்த பிரிவில் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கையால் வகுத்து, அதில் கிடைக்கும் எண்ணையே, அந்த மாணவரின் சதவீத மதிப்பெண்ணாக என்.டி.ஏ. அறிவித்துள்ளது. இதன்படி, ஒருவர் 80 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால், தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 80 சதவீதம் பேர், குறிப்பிட்ட அந்த மாணவரை விட குறைவான மதிப்பெண் பெற்றுள்ளனர் என அர்த்தம்.

கட் ஆப் என்ன?ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண்ணை இப்போதைக்கு என்.டி.ஏ. அறிவிக்கவில்லை. ஏனெனில், ஜேஇஇ மெயின் 2-ம் கட்டத் தேர்வு ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற உள்ளது. ஜனவரி மற்றும் ஏப்ரல் மாத தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் எதுவோ அதையே என்.டி.ஏ. கணக்கில் எடுத்துக் கொள்ளும். அதன் பிறகே கட் ஆப் மதிப்பெண் விவரமும், ரேங்க் விவரமும் தெரியவரும். எனினும், தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 2.5 லட்சம் பேர் வரை ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கு தேர்வு பெறலாம் என்றும், 70 சதவீதம் வரை கட் ஆப் இருக்கலாம் என்றும் கல்வியாளர்கள் கணித்துள்ளனர்.

மேலும், ஜனவரி தேர்வுடன் நின்று விடாமல், ஏப்ரல் தேர்வையும் எழுதி, இதை விட அதிக மதிப்பெண் பெற மாணவர்கள் முயற்சிக்க வேண்டும். ஏனெனில் ஏப்ரலில் அதிக மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றால், அதற்கேற்ப கட் ஆப் உயரும் எனவும் கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். பிளஸ்2 பொதுத் தேர்வு மதிப்பெண், இதற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றாலும், பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டியது கட்டாயம்.

ஏப்ரலில் தேர்வுஜேஇஇ மெயின் ஏப்ரல் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் நடைமுறை பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கி, மார்ச் 7-ம் தேதி முடிகிறது. ஏப்ரல் 6 முதல் 20-ம் தேதிக்கு இடையே தேர்வு நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x