Published : 15 Jan 2019 06:13 PM
Last Updated : 15 Jan 2019 06:13 PM

ஸ்டாலின் அவமானப்படுவார்; தோல்வியைச் சந்திப்பார்: ஆளுநரைச் சந்தித்த பிறகு கே.பி.முனுசாமி பேட்டி

கோடநாடு விவகாரத்தில் தவறான கருத்தைச் சொன்னால் 7 ஆண்டு சிறை தண்டனை என்பதை ஸ்டாலின் உணர வேண்டும்.  இதில் நிச்சயம் ஸ்டாலின் அவமானப்படுவார். தோல்வியைச் சந்திப்பார் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

கோடநாடு காணொலி குறித்து முதல்வர் பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நேர்மையான ஐஜி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பாரபட்சமின்றியும், நேர்மையாகவும் விசாரணை நடைபெற எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு அறிவுறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் ஸ்டாலின் கோரியிருந்தார்.

இந்நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையில் வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன், வேணுகோபால், ஜெயவர்தன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பு குறித்து கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''முதல்வர் பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரிடம் மனு  அளித்தது அரசியல் ஆதாயத்திற்காகத்தான். வருகின்ற மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற முடியாது என்பதை உறுதியாக உணர்ந்த ஸ்டாலின், எப்படியாவது மக்களிடம் செல்வாக்கு பெற்ற நல்லாட்சியைக் குலைக்கும் வகையில் முதல்வரின் புகழைக் குலைக்கும் வகையில் ஆளுநரிடம் மனு அளித்துள்ளார். ஸ்டாலின் அளித்த மனு அரசியல் ஆதாயத்திற்காக அளிக்கப்பட்டது என்பதை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் மிகவும் சாதகமான பதிலைக் கூறியுள்ளார்.

ஆளுநரிடம் நாங்களாகவே வந்து உண்மை நிலையை எடுத்துச் சொன்னோம். எங்களை அவர் அழைக்கவில்லை.

கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் கூறிய கருத்து உண்மை என்று அரசியல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் கூறி வருகிறார். இதில் நிச்சயம் ஸ்டாலின் அவமானப்படுவார். தோல்வியைச் சந்திப்பார். இந்திய தண்டனைச் சட்டப்படி கொலைக்குற்றம் தொடர்பாக தவறான கருத்தைச் சொன்னால் 7 ஆண்டு சிறை தண்டனை என்பதை ஸ்டாலின் உணர வேண்டும்''.

இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x