Published : 15 Jan 2019 11:34 AM
Last Updated : 15 Jan 2019 11:34 AM

தலைமுறைகளை கடந்து வாழ்பவர்; 5 மாவட்ட மக்களின் வாழ்க்கையை தண்ணீரால் திசை திருப்பிய மாமனிதர்: பென்னிகுவிக் 178-வது பிறந்ததினம் இன்று கொண்டாட்டம்

தலைமுறைகள் பல கடந்தும், இன்னமும் தென்மாவட்ட மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் ஆங்கிலேயப் பொறி யாளர் ஜான் பென்னிகுவிக்கின் 178-வது பிறந்த தினம் தேனி மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.

நூறாண்டுக்கு முன்பு வைகை வடி நிலப் பரப்பில் மழை பொய்த்தது. இத னால் இதை நம்பியிருந்த தற்போதைய மதுரை, ராமநாதபுரம் தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்ட பகுதிகளில் கடும் வறட்சியும், உணவுப் பஞ்சமும் சில ஆண்டுகள் ஏற்பட்டது.

இந்நிலையில், தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சித்து கடைசியில் தனது சொத்துகளை விற்று முல்லை பெரியாறு அணையைக் கட்டியவர்தான் ஆங்கிலேயப் பொறியாளர் ஜான்பென்னிகுவிக். அவர் கட்டமைத்தது அணையை மட்டுமல்ல.. ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் தான். இதனால் அவரது புகழ் காலம் கடந்து நிற்கிறது. அவரை நினைவுகூரும்வகையில் தேனி மாவட்ட மக்கள், அவரது பிறந்தநாளை இன்றளவும் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். சுருளிப்பட்டி, பாலார்பட்டி, கூழையனூர் பகுதி மக்கள் பென்னிகுவிக் செயலுக்கு நன்றிக் கடனாக என்ன செய்தாலும் ஈடாகாது என்கின்றனர்.

முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டு தண்ணீரை திசை திருப்பிய பிறகுதான் ஐந்து மாவட்ட மக்கள் விவசாயத்தின் பக்கம் முழுவதுமாகத் திரும்பினர். இதனால் வறண்டு காட்சியளித்த நிலப்பரப்பு பசுமை பிரதேசமாக மாறத் தொடங்கியது. விவசாயத்தால் மக்களின் வேலை வாய்ப்பும் பெருகியது. ஐந்து மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் முல்லை பெரியாறு காரணம் ஆனது. அடுத்தடுத்து வந்தவர்கள் நீர் மேலாண்மையை விரிவாக்கும் வகையில் வைகை அணையைக் கட்டி, பல கால்வாய்களை வெட்டினர். இதனால் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.

லோயர்கேம்பில் தண்ணீரில் இருந்து மின்சாரம் தயாரிக் கப்பட்டது. பென்னி குவிக்கை நினைவுகூரும் வகையில் மணிமண்டபமும் கட்டப்பட்டது. தேனி பஸ் நிலையத் துக்கு பென்னிகுவிக் பெயரிடப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகள் சங்கத்தின், தேனி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் ஏ. திருப்பதிவாசகன் கூறியது:கர்னல் ஜான் பென்னிகுவிக் புகழ் பல தலைமுறைகளுக்கு நிலைத்திருக்கும். பள்ளி மாணவர்களிடம் அவரால் மக்களின் வாழ்க்கைத்தரம் மாறியதை எடுத்துரைத்து வருகிறோம்.

தேனி மாவட்டத்தின் பல இடங்களில் தைப்பொங்கலுக்கு இணையாக, பென்னிகு விக் பிறந்தநாளை மக்கள் கொண்டாடி வருகின்றனர். லோயர் கேம்பில் உள்ள அவரது மணிமண்டபத்தை சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். தனது சொத்தை இழந்து அணையைக் கட்டிய அவரது தியாக வரலாற்றை மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் விதமாக மணி மண்டபத்தில் அவரது வாழ்க்கை வரலாறு, அணையைக்கட்டும் முன்பு ஐந்து மாவட்ட நிலப்பரப்பு எப்படி இருந்தது என சித்திரங்கள் மூலம் வரைந்து வைக்க வேண்டும். பள்ளி பாடப் புத்தகங்களில் பென்னிகுவிக் வரலாற்றை ஒரு பாடமாக வைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இதுகுறித்த கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பி உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x