Published : 30 Dec 2018 08:31 AM
Last Updated : 30 Dec 2018 08:31 AM

கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.127 கோடி சேர்ந்துள்ளது: தமிழக அரசு அறிவிப்பு

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.127 கோடியே 22 லட்சத்து 54 ஆயிரத்து 807 சேர்ந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:

கஜா புயல் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராம நாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியது. வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு உதவவும், நிவாரணம், மறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு கடந்த நவம்பர் 19-ம் தேதி முதல்வர் கே.பழனிசாமி ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதனை ஏற்று கஜா புயல் நிவாரணம், மறு சீரமைப்புப் பணிகளுக்கு ஏற்கெனவே ரூ.103 கோடியே 34 லட்சத்து 99 ஆயிரத்து 624 வசூலானது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 20-ம் தேதி அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் தீரஜ் இந்துஜா ரூ. 3 கோடி, தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் சார்பில் ரூ.2 கோடி, தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனப் பணியாளர்கள் சார்பில் ரூ.3 லட்சத்து 34 ஆயிரத்து 753, புவியியல் மற்றும் சுங்கத் துறை சார்பில் ரூ. 1 கோடி, சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் ரூ.18 லட்சத்து 52 ஆயிரத்து 353, மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனர் டாக்டர் என்.சேதுராமன் ரூ.10 லட்சம், ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் துணைத் தலைவர் ஹரிசங்கர் ரூ.10 லட்சம், ஓசூர் பில்டர்ஸ், டெவலப்பர்ஸ் சங்கத்தின் தலைவர் சந்திரய்யா ரூ.10 லட்சத்து 75 ஆயிரம் வழங்கியுள்ளனர்.

கடந்த 24-ம் தேதி ஹெச்.சி.எல். துணைத் தலைவர் ரோஷிணி நாடார் ரூ.3 கோடி, டாஸ்மாக் சார்பில் ரூ.2 கோடி, காக்னிசென்ட் நிறுவன செயல் இயக்குநர் ஆர்.ராம்குமார் ரூ.1 கோடி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் ரூ. 41 லட்சத்து 50 ஆயிரம், சேஷசாயி காகித நிறுவனம் சார்பில் ரூ. 25 லட்சம், ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவர் நாகராஜன் ரூ.15 லட்சம், குருநானக் கல்லூரி சார்பில் ரூ.11 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 26-ம் தேதி ஹூண்டாய் நிறுவன நிர்வாக இயக்குநர் எம்.எஸ்.கிம் ரூ.1 கோடி, ஆச்சார்ய மஹாஸ்ரமன் சமிதி சார்பில் ரூ.10 லட்சத்து 10 ஆயிரம், சாயர் குழுமம் சார்பில் ரூ.10 லட்சம் வழங் கப்பட்டுள்ளது.

27-ம் தேதி தமிழ்நாடு பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ரூ.15 லட்சம், 28-ம் தேதி பிஎச்இஎல் நிறுவனம் சார்பில் ரூ.1 கோடியே 14 லட்சத்து 41 ஆயிரம், தமிழகத்தில் உள்ள 8 பல்கலைக்கழகங்களின் சார்பில் ரூ.69 லட்சத்து 50 ஆயிரத்து 524 வசூலானது.

இதுவரை நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.127 கோடியே 22 லட்சத்து 54 ஆயிரத்து 807 சேர்ந்துள்ளது.

இவ்வாறு தமிழக அரசின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x