Published : 19 Dec 2018 10:38 AM
Last Updated : 19 Dec 2018 10:38 AM

5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் காலமானார்

மக்கள் மருத்துவர், சமூக மருத்துவர், 5 ரூபாய் டாக்டர், கைராசி டாக்டர் என்று மக்களால் அழைக்கப்பட்ட டாக்டர் ஜெயச்சந்திரன் இன்று உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.

கல்பாக்கம் கொடைப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது அப்பா சுப்பிரமணி விவசாயி. பாம்பு, தேள் கடித்தால் கூட 30 கி.மீ.தாண்டிப் போய்  மருத்துவம் பார்க்க வேண்டிய சூழலில் இருக்கும் தன் கிராமத்தின் நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே ஜெயச்சந்திரன் மருத்துவம் படிக்க நினைத்தார். கல்வி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு படித்தவர் மெட்ராஜ் மெடிக்கல் காலேஜில் மருத்துவம் படித்து முடித்தார்.

மருத்துவத்தை வணிகமயமாக்கிவிடக் கூடாது என்பதை மனதில் நிறுத்திய ஜெயச்சந்திரன் தன் கிராமத்தைப் போலவே அடிப்படை வசதி இல்லாமல் இருந்த வண்ணாரப்பேட்டையில் உள்ள வெங்கடாசலம் தெருவில் 1971-ம் ஆண்டில் கிளினிக் தொடங்கினார். சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் குறைந்த பட்சம் 2 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 5 ரூபாய் வரை கட்டணம் வாங்கினார்.  சுமார் 41 ஆண்டுகளாக இதை சேவையாகவே செய்தார் ஜெயச்சந்திரன்.

1000க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்திய டாக்டர் ஜெயச்சந்திரன் 'நேதாஜி சமூக சேவை இயக்கம்’ என்ற அமைப்பை ஆரம்பித்து கல்வி உதவித் தொகை, தெருவோரச் சிறுவர்களுக்குத் தேவையான உதவிகள் என அனைத்து உதவிகளையும் செய்து வந்தார்.

டாக்டர் ஜெயச்சந்திரனின் மனைவி டாக்டர் வேணி சென்ட்ரல் பொது நல மருத்துவமனையில் டீன் ஆக இருந்து ஓய்வுபெற்றவர். இவரது மகளும், மகனும் கூட டாக்டர்கள்தான்.

'மகப்பேறும் மாறாத இளமையும்,'குழந்தை நலம் உங்கள் கையில்', 'தாய்ப்பால் ஊட்டுதலின் மகத்துவம்', 'உடல் பருமன் தீமைகளும் தீர்வுகளும்' என்பது போன்ற நுால்களை எளிய தமிழில் எழுதிய டாக்டர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவு ராயபுரம், வண்ணாரப்பேட்டை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x