Published : 17 Dec 2018 05:05 PM
Last Updated : 17 Dec 2018 05:05 PM

ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு

ஆன்லைன் மருந்து விற்பனை தடையை நீட்டித்த சென்னை உயர் நீதிமன்றம், அதை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளை உருவாக்கி அடுத்த மாதத்திற்குள் அரசிதழில் வெளியிட மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளது.

ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்வதை தடுக்கக் கோரி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அவர்களது மனுவில், பல பதிவு செய்யப்படாத ஆன்லைன் விற்பனையாளர்கள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும், மருந்துச் சீட்டு இல்லாமல் ஆன்லைன் மூலம் மருந்துகள் வழங்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு காலாவதியான, போலியான, தவறான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் உடல் நலத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கடைகளில் மட்டுமே மருந்து விற்பனையை அனுமதித்துள்ளதையும் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர்.  ஆன்லைனில் மருந்துகள் வாங்குவது மற்றும் விற்பனை செய்வது என்பது பொதுமக்கள் உயிருக்கு அபாயகரமானது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு அங்கீகாரமோ, உரிமமோ ஏதும் வழங்கப்படவில்லை என்றும், எனவே அதை சட்டவிரோதமானது என அறிவித்து, முழுமையாக ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதேசமயம் தங்களின் இந்த வழக்கு முடியும் வரை ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யவும்  தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்யத் தடை விதித்தும், மத்திய மாநில சுகாதாரத் துறை செயலாளர்கள், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டாளர்கள், மாநில மருந்து கட்டுப்பாட்டாளர் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் சில நிறுவனங்கள் பதில் மனு தாக்கல் செய்தன. அதில், நீதிமன்றத்தின் தடையால் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசிடம் மருந்து விற்பனைக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளதாக சில நிறுவனங்கள் உடனடியாக நீதிமன்றத்தை நாடி தடையை நீக்கக் கோரினர்.

இதையடுத்து இணையதள விற்பனையாளர்களை இணைப்பு மனுத்தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தினார். மேலும், பதிவு பெறாத அல்லது உரிமம் பெறாத நிறுவனங்கள் மட்டுமே ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யத் தடை விதித்ததாகவும், உரிமம் பெற்ற  நிறுவனங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் நீதிபதி விளக்கமளித்தார். அதன் பின்னர் டி.என்.மெட்., ப்ரக்டோ, மெட் ப்ளஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாகச் சேர்ந்தனர்.

இந்த வழக்கில் தமிழக அரசு  தாக்கல் செய்த பதில் மனுவில், மருந்து கட்டுப்பாட்டு சட்டம் என்பது மத்திய அரசின் சட்டம் என்றும், ஆன்லைன் மருந்து விற்பனையை அனுமதிப்பது,  கண்காணிப்பது, விதிமீறல் இருந்தால் தடை செய்வது என என எந்த அதிகாரமும் தங்களுக்கில்லை எனவும், அனைத்து அதிகாரமும் மத்திய அரசின் கையில்தான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பு நடைபெற்று வருகிறது. வழக்கில் மத்திய அரசு தரப்பில், “ஆன்லைன் மூலம்  மருந்து விற்பனை செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து தற்போது வரைவு விதிகள் தயார் செய்துள்ளதாகவும், அதன் மீது பொதுமக்கள் கருத்து கேட்கப்பட்டுள்ளது என்றும், அவற்றை நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகுதான் சட்டமாக செயல்வடிவம் பெறும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம், “மருந்து விற்பனைக்கான பதிவுகளை மட்டுமே மேற்கொள்ள மத்திய அரசால் முடியுமெனவும், சட்டம் இயற்றியவுடன் விதிமீறல் விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது” என விளக்கமளிக்கபட்டது.

தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் சார்பில், “உணவுப்பொருட்கள் ஆன்லைனில் விற்பனை செய்ய சட்டம் நடைமுறைக்கு வரும் முன்னதாகவே ஸ்விக்கி, சொமாட்டோ, ஊபர் போன்ற நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக உணவு வகைகளை விற்பனை செய்து வருவது போலதான் மருந்துகளும் விற்கப்படுவதாகவும்; முகவரி பதியப்பட்ட ஒரு கட்டிடத்தில் மட்டுமே அவர்களால் மருத்து விற்பனை செய்ய முடியும்” என வாதிட்டு புகார் தெரிவிக்கப்பட்டது.

ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் சார்பில்,  “விற்பனையை முறைப்படுத்த விதிகளே உருவாக்கப்படாத நிலையில் அந்தப் பதிவு/உரிமம் ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும் என்று மனுதாரர் சங்கம் கூறுவது ஏற்புடையதல்ல, இந்த ஆன்லைன் வர்த்தகத்தை நம்பி 50 ஆயிரம் ஊழியர்களும், 5 லட்சம் நோயாளிகளும் உள்ள நிலையில், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையால் இவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது” என வாதிடப்பட்டது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் உள்ளங்கைகளில் வந்துள்ளபோது, அதற்கேற்றார் போல ஒவ்வொருவர் சார்ந்துள்ள துறைகளிலும் அப்டேட் செய்து கொள்ள வேண்டுமே தவிர, மருந்து தேவைப்பட்டால் கடைக்கு வந்துதான் வாங்க வேண்டுமென கட்டுப்படுத்த முடியாது என விளக்கமளிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் என்பது மருந்துவர்களையும், மருந்துகளையும் அடையாளம் மட்டுமே காட்டுகின்றன எனவும், தனக்கு எது யாரிடத்திலிருந்து கிடைக்க வேண்டுமென்பதை நுகர்வோர்தான் தீர்மானித்துக் கட்டணம் செலுத்துவதாகக் கூறப்பட்டது.

தயாரிப்பாளர் அல்லாத தங்களால் எப்படி மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியும் எனவும், மருந்து மற்றும் அழகுப்பொருட்கள் சட்டத்தால் தங்களைக் கட்டுப்படுத்தவோ, உரிமம் பெறவோ கட்டாயப்படுத்த முடியுமா? என கேள்வி எழுப்பப்பட்டது.

இவற்றின் அடிப்படையில் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மருந்து மற்றும் அழகுப்பொருட்கள் சட்டத்தின் படி உரிமம் பெறாமல் ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகைகள் இல்லாதபோது, இது தொடர்பாக மத்திய அரசு பிறப்பிக்க உள்ள புதிய சட்டத்தில், அதை எப்படி கையாளப் போகிறது என்பதைத் தெளிவாக முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா வலியுறுத்தினர்.

இதையடுத்து வழக்கின் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான விதிகளை உருவாக்கி 2019 ஜனவரிக்குள் அரசிதழில் வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

அரசிதழில் வெளியிட்ட பின் அடுத்த இரண்டு மாதத்தில் ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் உரிய முறையில் விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும், அவ்வாறு விதிகள் உருவாக்கப்பட்டு, அதன்கீழ் ஆன்லைன் விற்பனையாளர்கள் அனுமதி பெறும்வரை ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்வதற்கான தடை அமலில் இருக்கும் எனவும் உத்தரவிட்டார்.

இதன்மூலம் ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய அக்டோபர் 31-ம் தேதி விதிக்கப்பட்ட  தடை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x