Published : 17 Dec 2018 04:21 PM
Last Updated : 17 Dec 2018 04:21 PM

ஒருமாதம் மெரினாவில் வாக்கிங் செல்லுங்கள்: காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை

மெரினா கடற்கரையைப் பராமரிக்க  ஒதுக்கும் நிதி மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட உள்ள உட்கட்டமைப்பு வசதி விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆழ்கடலில் மீன் பிடிக்க அனுமதி பெற மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மெரினா கடற்கரையை ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

அதே போல மெரினாவைச் சுத்தப்படுத்த திட்டம் வகுக்கவும் அறிவுறுத்தியிருந்தது, இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மாநகராட்சி ஆணையர் மீண்டும் ஆஜராகி இருந்தார்.

மெரினா கடற்கரையைத் தூய்மைப்படுத்த பல்வேறு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், கடற்கரையைச் சுத்தப்படுத்த காலை 6 மணி பிற்பகல் 2 மணி இரவு 10 மணி என மூன்று ஷிப்டுகளில் 250 பணியாளர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், மெரினாவில் கடை அமைக்க 1,544 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன் கடைகளைப் பொறுத்தவரை மீன் சந்தை அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

இதை அடுத்து மெரினாவைச் சுத்தப்படுத்தும் பணியை ஆய்வு செய்யும் வகையில் ஒரு மாதத்திற்கு தினமும் அங்கு  காவல்துறை ஆணையருடன், நடைப்பயற்சி மேற்கொள்ளும் படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் ஆலோசனை தெரிவித்தனர்.

மெரினாவைப் பராமரிக்க ஒதுக்கப்படும் நிதி, மேற்கொள்ளபடவுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x