Published : 17 Dec 2018 04:02 PM
Last Updated : 17 Dec 2018 04:02 PM

மேகேதாட்டு விவகாரம்: தமிழகத்தை அடிமை மாநிலமாக்குவதே மோடி அரசின் எண்ணம்; வேல்முருகன்

நதிநீர் உரிமை இல்லாமல் தமிழகத்தை அடிமை மாநிலமாக்குவதே மோடி அரசின் எண்ணம் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்தது. இது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. மேலும் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டம் மற்றும் நாடுகளுக்கு இடையிலான நதிகள் குறித்த பன்னாட்டுச் சட்டம் ஆகியவற்றுக்கும் எதிரானது. எனவே இதற்குத் தடை விதிக்க வேண்டும் என  தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், அணை தொடர்பான பணிகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்தது.

அதாவது, 'காவிரி உரிமை மாநிலங்களைக் கேட்காமல் அதில் எந்தப் பணியையும் கர்நாடகம் மேற்கொள்ள முடியாது' என்று தான் அளித்த தீர்ப்பை தானே மீறி, 'மேகேதாட்டு அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது' எனத் தெரிவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

அரசியல் சாசன உயர் நிறுவனமான உச்ச நீதிமன்றமே இப்படி சட்டமீறலைச் செய்கிறதென்றால், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசைக் கேட்கவும் வேண்டுமா? நீதிமன்றத் தீர்ப்பு, மாநில உரிமை, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் ஒப்பந்தம் என இவற்றில் எதையும் கருத்தில்கொள்ளாது 'தேசிய அணை பாதுகாப்புச் சட்டம்' என்ற ஒன்றைக் கொண்டு வருகிறது மோடி அரசு.

இந்தச் சட்டத்தின்படி, ஒரு மாநிலத்துக்குச் சொந்தமான அணை மற்றொரு மாநிலத்தில் இருந்தால் அதனை இயக்கவும் பராமரிக்கவுமான பொறுப்பு இனி தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும். குறிப்பாக இது தமிழகத்தின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும்.

அதனால், கடந்த ஜூன் 15 ஆம் தேதியன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி அதன்மூலம் 'தேசிய அணை பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கும் நடவடிக்கைகளைத் தொடர வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டார். அதன்பின் ஜூன் 26-ம் தேதியன்று, 'அணை பாதுகாப்புச் சட்டம் கூடாது' என்று, அது குறித்த தமிழக மக்களின் கவலையைத் தெரிவிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் தமிழகத்தின் கடிதத்தை, தீர்மானத்தையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாமல், மாநில அரசுகளின் கருத்துகளையும் கேட்காமல் அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு மாநிலத்துக்குச் சொந்தமான அணை மற்றொரு மாநிலத்தில் இருந்தால் அதன் இயக்கமும் பராமரிப்பும் தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அணை பாதுகாப்பு மசோதாவில் கூறப்பட்டிருப்பது, தமிழகத்தைப் பொறுத்தவரை, முல்லைப்பெரியாறு அணையைக் குறிவைத்துத்தான் என்பதன்றி வேறென்ன?

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு, சீரமைப்புப் பணிகள் ஒப்பந்தப்படி தமிழகத்தின் வசம் இருக்கையில், அதற்கு சட்டவிரோதமாக அவ்வப்போது தடங்கல்களையும் ஏற்படுத்துகிறது கேரள அரசு. அதனால் தமிழகப் பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் எந்த இடையூறுமில்லாமல் வனம் மற்றும் வனவிலங்குப் புகலிடப் பகுதிகளின் ஊடாக அணைக்குச் சென்றுவர வகைசெய்திட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அனைத்தையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் 'தேசிய அணை பாதுகாப்புச் சட்ட'த்திற்கான மசோதாவைத் தாக்கல் செய்திருக்கிறது மோடி அரசு.

திட்டமிட்டு மத்திய நீர்வளத்துறை ஆணையரையே காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் தலைவராக நியமித்து, சட்டத்துக்குப் புறம்பாக அவரையே அணை கட்ட அனுமதியும் வழங்கவைத்து, உச்ச நீதிமன்றமும் அந்த அனுமதிக்கு தடை விதிக்க சட்டத்துக்குப் புறம்பாகவே மறுத்தது. அடுத்து அணை பாதுகாப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தால், நதிநீர் உரிமையையே தமிழகத்திற்கு இல்லாமல் செய்து, அதை ஒரு நாலாந்தர அடிமை மாநிலமாக்கிவிடலாம் என்பதுதான் மோடி அரசின் அந்தக் கெட்ட எண்ணம்.

இத்தகைய கெடுமதிதான், அரசியல் சாசனம் என்ற ஒன்று இருக்கையில், அதன்படி இல்லாமல், தமிழகத்திற்கு எதிராகவே அனைத்து நடவடிக்கைகளையும் கட்டமைக்கிறது.

தான் அளித்த தீர்ப்பை தானே மீறி மேகேதாட்டு அணைக்கான திட்ட அறிக்கைக்குத் தடையே விதிக்க முடியாதென்கிறது உச்ச நீதிமன்றம்.

மாநில உரிமை மற்றும் நதிநீர் ஒப்பந்தங்களுக்கே எதிராக அணை பாதுகாப்புச் சட்டத்தையும் கொண்டு வருகிறது மத்திய அரசு.

வரலாற்றில் எப்போதும் எங்கும் இல்லாத இந்தப் பொல்லாத ஆட்சிமுறையைக் கண்டிப்பதுடன், இந்த சர்வாதிகார-பாசிசப் போக்கைக் கைவிட்டு, சட்டவிரோதத் தீர்ப்புகள், நடவடிக்கைகளைத் திரும்பப்பெற வலியுறுத்த வேண்டும்" என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x