Published : 17 Dec 2018 03:30 PM
Last Updated : 17 Dec 2018 03:30 PM

சிலை திறப்பு நிகழ்ச்சி; சூர்யவம்சம் அப்பா சரத்குமார்போல் ஒளிந்திருந்து பார்க்கிறீர்களா?- தமிழிசையைக் கிண்டலடித்த நெட்டிசன்கள்

கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியை விமர்சித்து அடுத்தடுத்து தமிழிசை ட்விட்டரில் பதில் போட, அதற்கு நெட்டிசன்கள் உடனுக்குடன் பதிலடி கொடுத்தனர். சூர்யவம்சத்தில் அப்பா சரத்குமார் மறைந்திருந்து நிகழ்ச்சியைப் பார்ப்பதுபோல் தமிழிசை பார்க்கிறார் என நெட்டிசன்கள் கிண்டல் அடித்துள்ளனர்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை நேற்று மாலை அறிவாலயத்தில் சோனியாவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழா எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் விழாவாக மாறிப்போனது. விழாவில் பேசிய பலரும் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தனர். ஸ்டாலின் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

திடீரென பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிவதாக ஸ்டாலின் அறிவித்தார். பாசிச, நாசிசஆட்சியை வீழ்த்த அனைவரும் ராகுல் காந்தியுடன் கரம் கோப்போம் என ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார். இந்த விழா நேரலை செய்யப்பட்டது. விழாவில் தலைவர்கள் பேசுவதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை உடனுக்குடன் ரியாக்ட் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனத்தை வைத்தார்.

அதற்கு அதிக அளவில் நெட்டிசன்கள் எதிர்மறையாகப் பதிலளித்துள்ளனர்.

துரைமுருகன் பேசியதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழிசை ட்வீட்:

“கோபாலபுரத்து குடும்பமும் நேரு குடும்பமும் மீண்டும் இணைந்தது என்று பேசுகிறார் துரைமுருகன்.....மக்களோடு மக்கள் இணைந்தால் மக்களாட்சி ...குடும்பத்தோடு குடும்பம் இணைந்தால் குடும்ப ஆட்சி....மக்கள்புரிந்து கொள்வார்கள்......நீங்கள் நடத்தியது குடும்ப ஆட்சி என்று......”

இதற்கு  பிரபு ஜார்ஜ் என்பவர் (Prabhu George ODI‏ @PrabhuOdi)

“குடும்பம் குட்டி இல்லாதவர் எல்லாரையும் வங்கி வாசலில் நிக்கவச்சி சாகடிச்சது எப்படி? அந்த மோகனராவுக்கு எந்த வங்கி புது நோட்டா குடுத்தானுங்க பத்தாயிரம் தர மறுத்தீங்கடா எங்களுக்கு”

என ட்வீட் செய்துள்ளார்.

அருண்குமார் என்பவர் (Arunkumar‏ @Arunkum61188707) “மக்களாட்சி பத்தி பேசுறதுக்கு எல்லாம் பாசிச பாஜகவுக்கும் மோடிக்கும் எந்தத் தகுதியும் இல்லைங்க அக்கா.” என பதிலளித்துள்ளார்.

மோடியை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்ததைக் குறிப்பிட்டு,  “கலைஞர் உடல் நலம் குன்றியபோது நேரில் வந்து உடல்நலம் தேற என்னுடன் டெல்லி வாருங்கள் என அன்புடன் அழைத்தது; இறுதி அஞ்சலிக்கு வந்ததோடு நாடாளுமன்றத்தை இரங்கலுக்காக ஒத்திவைத்த பிரதமர் மோடியின் அரசியல் நாகரிகத்தை ஸ்டாலினிடம் எதிர்பார்க்க முடியாது” என தமிழிசை பதிவிட்டுள்ளார்.

இதற்கு எதார்த்தவாதி என்பவர் (எதார்த்தவாதி Socialist‏ @civilizedenggr) “ கஜா புயல் பாதிப்பை பார்வையிட மோடி வரவில்லையே. அரசியல் செயல்பாடே மோடியிடம் எதிர்பார்க்க முடியாது” ட்வீட் செய்துள்ளார்.

ஜியோ டாமின் என்பவர் (Geo Damin‏ @DaminGeo)  “தோல்வி பயம்..... எவ்ளோ ட்வீட்” என பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிய அடுத்த கணமே தமிழிசை அதற்கும் ட்விட் போட்டார் அவரது பதிவு:

“ராகுலை பிரதமராக்கப் போகிறாராம் ஸ்டாலின்....பிறப்பில் சாமானியன் ஒருவர் பாரதப்பிரதமராக சாதிப்பதை பொறுக்காத பட்டத்து இளவரசர்கள் கூடி பதவிகளை பரிமாறிக்கொள்கிறார்கள்? பாவம் பழைய வரலாறுகளை மறைத்து ! நேருவின் மகளே வருக என்பார்கள் !நெருக்கடிநிலை கொண்டுவந்து எங்களை அடித்தார்கள் என்பார்கள்?”

இதற்கு பதிலளித்து தேனி தமிழன் (தேனி தமிழன் `CVF‏ @theni_kesavan) என்பவர் பதிவில்  “பேசாமா நீங்க சினிமாவுக்கு கதை எழுத போலாமே, டயலாக்கா விட்டு தள்ளுகிறீர்களே” என கிண்டலடித்துள்ளார்.

சரவண பெருமாள் என்பவர் பதிவில் (rdsaravanaperumal ‏ @rdsaravanaperum)  “சாமானிய பிரதமர் என்று நினைத்த மக்களுக்கு இப்போதுதானே புரிகிறது... கறுப்புப் பணம் என்று சொல்லி சுருக்குப்பையை உருவியதும், கஜாவின் பாதிப்பறியாமல் பிரியங்காசோப்ராவுக்கு மங்கல வாழ்த்துக்கூறிய சாடிஸ்ட் பிரதமர் என்றும்!” என பதிவிட்டுள்ளார்

வெஸ்லி (Westley‏ @Weslypvl) என்பவர் தனது பதிவில்  “அக்கா சாமானிய பிரதமர் மோடி எப்போது தமிழ்நாடு வந்து கஜா பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு ஆறுதல் கூறுவார். தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது.இப்படி பாரபட்சம் பார்த்தால் தாமரை கன்னியாகுமரியில் கருகிவிடுமே” என பதிவிட்டுள்ளார்.

இது தவிர ஸ்டாலின் பேச்சுக்கு வரிக்கு வரி பதிலளித்து தமிழிசை ட்வீட் செய்துள்ளார்.

தமிழை செம்மொழி ஆக்க எடுத்த முயற்சியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பங்களிப்பை மறக்க முடியுமா?மறைக்கமுடியுமா?சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் உரையில்..கலைஞரை விமரிசையாக...பேசியதைவிட மோடியை..விமர்சனமாகப் பேசியதே அதிகம். கலைஞர் புகழ் இசை பாடியதைவிட மோடி இகழ் வசை பாடியதே அதிகம்...

4 ஆண்டுகளில் மோடி பலமுறை தமிழகம் வந்துள்ளார். ஐக்கிய முன்னணி 10 ஆண்டுகால ஆட்சியில் எத்தனை முறை அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தமிழகம் வந்தார்? இயற்கைப் பேரிடர் வந்த நேரங்கள் உட்பட கூட்டணியில் இருந்தும் தமிழகத்திற்கு எத்தனைமுறை கூட்டிவந்தீர்கள்?

சந்திரபாபு நாயுடு பேச்சுக்கும் பதிலளித்து தமிழிசை ட்வீட் போட்டுள்ளார்:

“மத்தியில் இருக்கும் ஆட்சியினால் நாம் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளோம். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. உண்மைதான் ஊழல்வாதிகள் கறுப்புப் பண முதலைகள் வெளிநாட்டில் சொத்தைப் பதுக்கியவர்கள் குடும்ப ஆட்சியாளர்கள்தான் மோடி ஆட்சியில் பாதிக்கப்பட்டார்கள் ஓடிஒளிந்தார்கள்.  கூடி கூவுகிறார்கள்” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்து அறிவு தஞ்சிரே (@ArivuThanjiray1) என்பவர்   “சூர்யவம்சம் படத்தில பாராட்டு விழாவை ஒளிஞ்சு நின்னு பார்க்கிற அப்பா சரத்குமார் மாதிரியே தமிழிசை அக்காவும் கலைஞர் சிலை திறப்பு விழாவை பார்த்துக்கிட்டு ட்வீட் போடுறாங்கன்னு நினைக்கிறேன்”  என கிண்டலடித்துள்ளார்.

பொதுவாக மாநிலத் தலைவர் போன்ற பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் செய்தியாளர்களிடம் மட்டுமே கருத்தைச் சொல்வார்கள். சில நேரம் ட்விட்டரில் பதிவு செய்வார்கள். ஆனால் கூட்டத்தை பார்த்துப் பார்த்து ட்வீட் போடுவதும் அதற்கு விமர்சனம் வருவதும் அரசியல் களம் சூடாக உள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x