Published : 17 Dec 2018 12:34 PM
Last Updated : 17 Dec 2018 12:34 PM

கரும்பு கொள்முதல் ஊக்கத் தொகை டன்னுக்கு ரூபாய் 500 வழங்குக: வைகோ

கரும்பு கொள்முதல் ஊக்கத் தொகை டன்னுக்கு ரூபாய் 500 வழங்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளைத் தமிழக அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகின்றது. கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளிடம் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கொள்முதல் செய்த கரும்புக்கு, தமிழக அரசு அறிவித்த விலையை அளிக்காமல், சுமார் 2000 கோடி ரூபாய் அளவுக்கு நிலுவை வைத்து இருக்கின்றன. அதைப் பெறுவதற்காக, விவசாயிகள் பல கட்டப் போராட்டங்களை நடத்தியும் எந்தப் பயனும் இல்லை.

கடந்த ஆண்டு சட்டப்பேரவையில், தமிழக தொழில்துறை அமைச்சர் கரும்பு நிலுவைத் தொகையைப் பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தார். அதுவும், நீர்மேல் எழுத்தாக ஆயிற்று. இந்த ஆண்டாவது கொள்முதல் செய்யும் கரும்பிற்கு நிலுவைத் தொகையோடு சேர்த்து வழங்க வேண்டும். கடுமையான வறட்சி மற்றும் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொண்டு கரும்பு விளைவிக்கும் விவசாயிகளுக்கு, உரிய கொள்முதல் விலையைத் தீர்மானிக்கவும் தமிழக அரசு முன்வரவில்லை.

கரும்பு கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு ரூபாய் 4,000 என்று நிர்ணயிக்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக, டன் ஒன்றுக்கு 2,750 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. நடப்புக் கொள்முதல் பருவத்திற்கு மத்திய அரசு 10 விழுக்காடு பிழிதிறன் உள்ள கரும்பிற்கு 2,750 ரூபாய் என்று அறிவித்து இருக்கின்றது.

ஆனால் தமிழக அரசு கடந்த ஆண்டு மத்திய அரசு விலை 2,550 ரூபாயுடன், ஊக்கத் தொகையாக 200 ரூபாய் சேர்த்து 2,750 ரூபாய் வழங்கியது.தமிழக அரசு லாபப் பகிர்வு முறையை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டதால், மாநில பரிந்துரை  விலையை அறிவிக்காமல், ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூபாய் 200 வழங்கியது. இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் ரூபாய் 200 கோடி ஒதுக்கப்பட்டது.

இந்த ஆண்டு மத்திய அரசின் ஆதார விலை ரூபாய் 2,750 என்பது, பத்து விழுக்காடு பிழித்திறன் கொண்ட கரும்புக்கு மட்டுமே கிடைக்கும். அதற்குக் குறைவான பழிதிறன் உள்ள கரும்புக்கு ரூபாய் 2,612 மட்டுமே கிடைக்கும்  நிலை இருக்கின்றது.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்திப்பதால் கரும்பு விளைச்சல் 250 லட்சம் டன்னில் இருந்து 90 லட்சம் டன்னாகக் குறைந்துவிட்டது. பல கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் நலிவு அடைந்து மூடும் நிலையில் இருப்பதால், சுமார் 5 லட்சம் கரும்பு விவசாயிகளும், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கரும்பு ஆலை ஊழியர்களும் பாதிக்ககப்படும் நிலைமை உருவாகி வருகின்றது.

எனவே, கரும்பு சாகுபடியை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், நடப்பு 2018-19 கரும்புக் கொள்முதல் பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூபாய் 500 ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு உடனே அறிவிப்பு வெளியிட வேண்டும்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x