Published : 16 Dec 2018 08:43 PM
Last Updated : 16 Dec 2018 08:43 PM

மோடியிடம் இன்னும் 5 ஆண்டு ஆட்சியை கொடுத்தால் இந்தியா 50 ஆண்டுகள் பின்தங்கி போகும்: ஸ்டாலின் பேச்சு

இந்தியாவை காக்கக் கூடிய ஜனநாயகத்துக்கு நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம். வேறுபாடுகள் இல்லாத, மாறுபாடுகள் இல்லாத, மதமாச்சர்யங்களில்லாத சாதிய மோதல்கள் இல்லாத, ரத்தக்களறி இல்லாத இந்தியாவை உருவாக்க நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலைத் திறப்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார்.

 

கருணாநிதி சிலைத்திறப்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

 

இந்தியாவை காக்கக் கூடிய ஜனநாயகத்துக்கு நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம். வேறுபாடுகள் இல்லாத, மாறுபாடுகள் இல்லாத, மதமாச்சர்யங்களில்லாத சாதிய மோதல்கள் இல்லாத, ரத்தக்களறி இல்லாத இந்தியாவை உருவாக்க நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம்.

 

நரேந்திரமோடியால் மத நல்லிணக்கத்துக்கு கேடு ஏற்பட்டுள்ளது அதனால் எதிர்க்கிறோம், இந்தியாவின் பொருளாதாரத்துக்கு சீரழிந்துக்கொண்டுள்ளது அதனால் எதிர்க்கிறோம். அவரால் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது அதனால் எதிர்க்கிறோம், அவரால் மாநில சுயாட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது அதனால் எதிர்க்கிறோம், அவரால் நம்முடைய அரசியல் சட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது அதனால் எதிர்க்கிறோம்.

 

ஒரு நாட்டினுடைய சமூக நல்லிணக்கத்துக்கு கேடு ஏற்பட்டால், பொருளாதாரம் சீரழிந்தால் அதனை சரிசெய்வது அவ்வளவு எளிதல்ல. மோடியின் 5 ஆண்டு ஆட்சியால் இந்த நாடு 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. இன்னொரு 5 ஆண்டுகள் அவரை ஆளவிட்டால் கண்டிப்பாக சொல்கிறேன் இன்னொரு 50 ஆண்டுகள் இந்தியா பின்னோக்கி போய்விடும்.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நினைக்காமல் ஏதோ பரம்பரை மன்னராட்சி நடத்தக்கூடிய மமதை கொண்டவராக மோடி இருக்கிறார். தன்னை பிரதமராக மட்டுமல்லாமல் தன்னை ஜனாதிபதியாக, ரிசர்வ வங்கியாக, உச்சநீதிமன்றமாக, தன்னையே சிபிஐயாக, தன்னை வருமானவரித்துறையாக நினைத்து செயல்படுபவர் தான் பிரதமர் நரேந்திரமோடி.

 

அதனால்தான் அனைத்துக்கட்சிகளும் இன்று ஒன்று சேர்ந்து நரேந்திர மோடிக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளோம். இது ஏதோ நரேந்திரமோடியை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல.இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற சேர்ந்திருக்கிறோம். திமுக ஆதரவோடு மத்தியில் கூட்டாட்சி அமையும்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்காக எவ்வளவோ நல்ல திட்டங்களை கொண்டுவந்துள்ளோம் என்பதை மார்த்தட்டி சொல்ல முடியும்.

 

அவற்றில் சிலவற்றை நான் அடையாளம் காட்டுகிறேன், அடக்கப்பட்ட மக்களின் கல்வி வேலை வாய்ப்புக்காக அகில இந்திய அளவில் மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்டது, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்த்து மகுடம் சூட்டப்பட்டது. 2427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேது சமுத்திர திட்டம் கொண்டுவரப்பட்டது. 57 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில்  4674 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டது.

 

1250 கோடி ரூபாய் செலவில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது. சென்னை மாநகரில் மெட்ரோ ரெயில் திட்டம், ஒகனேக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் என கொண்டுவரப்பட்டது. நான் கேட்கிறேன் இப்படி ஏதாவது ஒரு சாதனையை இந்த பாஜக ஆட்சி செய்துள்ளது என்று சொல்ல முடியுமா?

 

பிரதமராக இருக்கும் மோடி அரசு இப்படி செய்துள்ளது என்று வரிசைப்படுத்தி சொல்லமுடியுமா? தமிழகத்துக்கு என்ன திட்டத்தையெல்லாம் எதிர்க்குமோ அந்த திட்டத்தைஎல்லாம் கொண்டுவந்து நிறைவேற்றும் சேடிஸ்ட் பிரதமரமாக செயல்படுபவர் மோடி என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

 

இந்த வார்த்தையை நான் பயன்படுத்துவதற்கு காரணம் உள்ளது. அவ்வளவு பெரிய பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. அன்மையில் கஜா புயல் 64 பேர் உயிரிழந்தார்களே, 14000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கப்பட்டுள்ளது. விவ்சாயம் பழைய நிலைக்கு திரும்ப இன்னும் 20 ஆண்டுகள் பிடிக்கும். இவ்வளவு பெரிய பேரிடர் குஜராத்திலோ, மஹாராஷ்ட்ராவிலோ ஏற்பட்டிருந்தா பிரதமர் மோடி நேரில் போயிருப்பாரா? இல்லையா?

 

தமிழ்நாடு என்பதால் வரவில்லை. ஆள்தான் வரவில்லை, அவருக்கு கடுமையான பணிகள், அதுவும் அடிக்கடி வெளிநாடு சுற்றுப்பயணம்வேறு, நேரமில்லை. நான் கேட்கிறேன் ஒரு ஆறுதல் தெரிவித்தீர்களா? கவலைக்கொண்டுள்ளேன் என ஒரு செய்தி, இரங்கல் தெரிவித்து ஒரு ட்விட்டராவது போட்டீர்களா? அந்த அளவுக்கு தமிழ்நாடு என்ன பாவப்பட்ட ஒரு மாநிலமா?

2016-ம் ஆண்டு அமெரிக்காவில் ஓர்லெண்டா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது, இறந்தவர் குடும்பத்துக்காக வருத்தப்பட்டு ட்வீட் போடுகிறார் மோடி. 2017-ம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டில் காட்டுத்தீ ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. அதற்கு வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்கிறார்.

 

ஆனால் இந்தியாவில் இருக்கின்ற நாகப்பட்டினத்தில், புதுக்கோட்டையில், தஞ்சையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க மறுக்கிறார். அதைத்தான் சாடிஸ்ட் பிரதமர் என்று பகீரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

 

தமிழர்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா? அதனால்தான் மோடியை வீழ்த்தவேண்டும் என்று சொல்கிறோம். அதற்காகத்தான் 21 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. இன்னும் பல கட்சிகள் வரத்தான் போகிறது. அதை இந்த நாடு பார்க்கத்தான் போகிறது.”

 

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x