Published : 16 Dec 2018 08:04 PM
Last Updated : 16 Dec 2018 08:04 PM

பெரியாரின் கனவை நிறைவேற்றிய பெருமிதத்தில் உள்ளேன்: கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் பேசிய ஸ்டாலின் உருக்கம்

கருணாநிதிக்கு சிலை அமைக்கவேண்டும் என பெரியார் கனவு கண்டார், ஆனால் அது நடக்கவில்லை.அவரது கனவை நிறைவேற்றிய பெருமிதத்தில் இருக்கிறேன் என சிலை திறப்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவால் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் பொதுக்கூட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏவில் நடந்தது. அதில் ஸ்டாலின் பேசியதாவது:

 

சோனியா அவர்கள் தலைவரின் சிலையை திறந்து வைத்தபோது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது 1964-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் சிலையை நாம் திறந்து வைத்தோம். அன்று காமராஜர் சிலையை திறந்து வைத்தது பிரதமர் நேரு அவர்கள்.

 

அதேபோன்று இன்றைய தினம் தலைவர் கருணாநிதியின் சிலையை நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா அவர்கள் திறந்து வைத்துள்ளது சிறப்பான ஒன்று. இன்று நான் பெருமிதத்துடன் உள்ளேன், மகிழ்ச்சியுடன் உள்ளேன். புளங்காகிதம் அடைந்துள்ளேன்.

காரணம் தமிழர்களின் வாழ்விலும் வளர்ச்சியிலும் இன்று முக்கியமான நாள். ஏன் மறக்கமுடியாத நாள். நீதிக்கட்சி துவக்கப்பட்ட நாள், பெரியாரின் பிறந்த நாள், அண்ணாவின் பிறந்த நாள், திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள், கருணாநிதியின் பிறந்த நாள், அறிவாலயம் திறக்கப்பட்ட நாள் வரிசையில் தலைவரின் சிலைத்திறப்பு நாளும் அமைந்துள்ளது.

 

இது திமுக அரசியல் வரலாற்றில் மிகமிக முக்கியமான நாள் மட்டுமல்ல என்னுடைய வாழ்விலும் மறக்க முடியாத நாள். ஏனென்றால் பெரியாரின் கனவை நிறைவேற்றியுள்ளோம். 1968-ம் ஆண்டு பெரியார் அவர்கள் தலைவர் கருணாநிதிக்கு சிலை வைக்க முடிவு செய்து அண்ணாவின் அனுமதி பெற்று அந்த முயற்சியில் ஈடுபட்டார். அதை தலைவர் அவர்கள் கடுமையாக மறுத்தார்.

 

அதன்பின்னர் பெரியார் விடுதலை ஏட்டில் எழுதினார், நான் கருணாநிதிக்கு நிச்சயம் சிலை வைப்பேன் என்று தெரிவித்தார். அண்ணா அவர்கள் மறைந்தப்பின்னர் சிலை வைக்கும் முடிவில் உறுதியாக இருந்தார். அதற்காக பெரியாரே புரவலராக இருந்தார். குன்றகுடி அடிகளார் தலைவராக பொறுப்பேற்றார்.

 

அதற்கான பணி நடைபெற்ற நேரத்தில் பெரியார் மறைந்தார். அதன்பின்னர் பொறுப்பேற்ற மணியம்மையார் எல்.ஐ.சி அருகே தலைவரின் சிலையை அமைத்தார். அதன்பின்னர் அந்த சிலையின் விவகாரம் என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. இன்றைக்கு அவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

 

வாழ்நாளெல்லாம் அண்ணா அண்ணா என முழங்கியவருக்கு அண்ணா சாலையில், அண்ணா அறிவாலயத்தில், அண்ணா சிலைக்கு அருகில் அவரது சிலை அமைக்கப்பட்டுள்ளது. வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ என கண்ணதாசன் எழுதினார். ஆனால் அண்ணாவுக்கு கடைசிவரை கலைஞர்தான் கலைஞர்தான் என்பதை நாடு நன்றாக உணரும்.

 

அவர் மறைந்து இன்றோடு 128 நாட்கள் ஆகிறது. கலைஞர் நம்மோடு இருக்கிறார், இன்றைக்கும் அவர் நம்மோடு இருக்கிறார், நம்மை இயக்கிக்கொண்டிருக்கிறார் என்ற உணர்வுதான் எனக்கு உள்ளது. அவர் மறையவில்லை என்கிற உணர்வுதான் என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்கு அக்காள்கள் மட்டுமே உண்டு அண்ணன் இல்லை, அண்ணனாக அன்பழகந்தான் உள்ளார் என்று சொல்வீர்கள் அவர் இங்கிருக்கிறார். நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்.

 

உங்களால் சொக்கத்தங்கம் என்றழைக்கப்பட்ட சோனியா இங்கு வந்துள்ளார். நீங்கள் எங்கே போய்விட்டீர்கள், எனக்கு தந்தை போன்றவர் என உங்களை அழைத்த சோனியா வந்துள்ளார் நீங்கள் எங்கே போய்விட்டீர்கள். நீங்கள் எங்கேயும் போக மாட்டீர்கள். லட்சக்கணக்கான தொண்டர்களின் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு இங்கே அமர்ந்துள்ளீர்கள்.

 

என்று ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x